உலக இலக்கியங்களைப் பார்த்துப் படித்து, இலக்கியப்
பொதுமை என்ற ஒன்றை
அறிஞர்கள் கண்டனர். இதன் விளைவாக
இலக்கிய வகைமை எனும் பகுப்பு
உருவாயிற்று. அந்த
அடிப்படையில் சித்தர் இலக்கியம் என்னும் வகைமையை
இப்பாடத்தில் படிக்க இருக்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,
அந்தச் சமய எல்லைகளைக் கடந்து சிந்தித்தவர்கள் உண்டு.
கடவுள், மனிதன், இவர்களுக்கு இடையிலான உறவு, மனித
வாழ்க்கை, தனி மனிதனின் வளர்ச்சி முதலிய
கொள்கைகளில்,
சமய எல்லைகளைக் கடந்த பொதுமையைக் கண்டவர்கள், இந்தச்
சிந்தனையாளர்கள். இவர்களை மெய்யுணர்வாளர் (Mystics)
என்று
குறிப்பிடுவார்கள். புற இயற்கையும் அக இயற்கையும்
ஒன்றாகக் கண்டு, உலகியல் போக்குக்கும் ஆன்மிகக்
கொள்கைக்கும் முரண்படாதவாறு, தவறான கருத்துகளைப்
போக்கி,
உண்மைகளை விளக்கி, சமுதாயத்தில் சீர்திருத்தம் ஏற்பட
உதவியவர்கள் சித்தர்கள். தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்கள்
இத்தகையவர்கள். சைவம்,
வைணவம் போன்ற வரையறை
கடந்தவர்கள் இவர்கள். (குணக்குடி மஸ்தான் சாகிபு என்பவரும்
இவ்வாறு இருந்தவர்.) சித்தர்களின் வாய்மொழி
சித்தர் இலக்கியம்
எனப் போற்றப்படுகிறது.
தமிழில் காலந்தோறும் இலக்கியங்கள் வளர்ந்து கொண்டே
வருகின்றன. அவ்வகையில் சங்க இலக்கியம், நீதி இலக்கியம்,
பக்தி
இலக்கியம், தத்துவ இலக்கியம், இக்கால இலக்கியம்
என்னும் வரிசையில் சித்தர் இலக்கியம் என்பதும் சிறப்பாக
இடம்பெற வேண்டியதாகும். இவ்விலக்கியம், காலந்தோறும்
தோன்றிய தவஞானியர்களின் (சித்தர்களின்) சிந்தனைச்
செல்வங்களும், கருத்து வளங்களும் , எண்ணற்ற எண்ண
விரிவுகளும் கொண்டு செம்மை பெற்றதாகும். சித்தர் இலக்கியம்,
அரிய தத்துவக் கருத்துகளும் அரிய சொல்லாட்சிகளும்
கொண்டது;
எளிய மொழியாலும், நடையாலும், பாடல் வடிவத்திலும் அவற்றைப்
புரிய வைக்கக் கூடியது; இது நாட்டுப்புற இலக்கியத்தின்
செல்வாக்குப் பெற்ற இலக்கியமாகும். இவ்விலக்கியத்தினைப்
படைத்தவர்கள் எல்லாக் கலைகளையும் உணர்ந்தவர்களாகவும்,
இறையருளால் ஓதாது உணர்ந்தவர்களாகவும் திகழ்கின்றவர்கள்.
இவர்களின் சிந்தனை சமய, சமுதாயம் பற்றியதாக
மட்டுமில்லாமல், உலகளாவிய
நிலையிலும் உலகப் பொது நோக்கும்
கொண்டதாக அமையும்.
சித்தர்கள் தாம் கண்ட இறைமை, யோக சாதனை, சித்த
மருத்துவம், வாழும் கலை, சாகாக் கலை, மந்திரக் கலை, சோதிடம்
மற்றும் நாடி சாஸ்திரக் கலை, அட்டமாசித்திகள், விஞ்ஞானம்,
வானிலை, ஆழ்நிலை எண்ணங்கள்
முதலான பல கலைகளையும்
செய்திகளையும் தமிழுலகிற்குக் கொடைகளாக வழங்கியுள்ளனர்.
பதினெண் சித்தர்கள் பற்றியும், பிற்காலத்துத் தோன்றிய
சித்தர்கள் பற்றியும் இப்பகுதியில் காணலாம். மேலும் அவர்களின்
பெருமையையும், மக்களுக்கு வழங்கிய செய்திகளையும் படித்து
இன்புறலாம்.