6.1 புராணம்

    புராணம் என்னும் சொல் புராதனம் (பழைமை) என்னும் வடசொல்லின் அடியாக அமைந்ததாகும். புராணம் என்கிற வடசொல் புரா - நவ என்ற இரு வேர்களிலிருந்து பிறந்ததாகும். இச்சொல் பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உள்ளது என்று பொருள்படும் என்பர். பழைமை வாய்ந்த வரலாறுகளுள்     பெரும்பாலும்    இறைப்பக்தி,     இறையருள் தொடர்புடைய செய்திகளைக் கொண்டதே புராணம் என்பர். மிக நுட்பமான தத்துவங்களை அல்லது செய்திகளை எல்லோரும் அறிந்துகொண்டு பின்பற்றும் நிலையில் அமைவது புராணத்தின் சிறப்பாகும். இத்தகைய செய்திகளை விளக்கிக் கூறும்போது எளிய இனிய கதைகளையும், மனித வாழ்வியல் உண்மைகளையும் இணைத்து, சுவைவமிக்க நிலையில் கூறுவது புராணம் ஆகும்.

    புராணம் என்பதைப் பழங்கதை (Ancient tale or legend) என்று கூறுவதைக் காட்டிலும், வழிவழி வந்த மரபு வரலாறு (Traditional history)     என்று     கூறுவதே மிகவும் பொருத்தமுடையதாகும்.

    புராணம் என்ற சொல் வடசொல் ஆயினும், அது தமிழில் மிகத் தொன்மையிலிருந்தே வழங்கப்பட்டு வந்ததை அறியலாம். அதற்குச் சான்றாக, ‘காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினன்’ என மணிமேகலை (27: 98-99) யில் சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வருவதைக் காணலாம்.

    அதுமட்டுமன்றி,     திருவாசகத்தின் முதல் அகவல் சிவபுராணம் என்றே பெயர் பெற்றுள்ளதைக் கொள்ளலாம்.

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான்

என்று பாடுகின்றார் மாணிக்கவாசகர்.

    புராணம் என்பது ‘பழமை சான்ற வரலாறு’ என்னும் பொருள் கொண்டு வழங்கப் பெற்றதைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணலாம்.

6.1.1 புராண இலக்கணம்

    வடமொழியில் புராணங்கள் பழமை வாய்ந்த நூல்களாயினும், அவற்றை முறையான வடிவில் இயற்ற வேண்டும் என்ற இலக்கண வடிவும் இருந்திருக்கக் கூடும். அவ்வாறு புராணங்களுக்கு இலக்கணம் வகுத்த பிற்காலத்தவர் முக்கியமானதாக ஐந்து அடிப்படைகளைக் குறிப்பிடுவர். அவை :

    (1) உலகத் தோற்றம்     
   (2) உலகம் அழிந்து மறுபடி தோற்றம் பெறுதல்    
   (3) தெய்வ பரம்பரை     
   (4) மனுக்களின் காலம்     
   (5) அரச வமிசங்களின் வரலாறு

என்பனவாகும்.

    ஆனால், இன்றுள்ள புராணங்களில் பல தானம், விரதம், தீர்த்தம், மூர்த்தி, தலம், சிராத்தம் முதலியனவற்றையே சிறப்பித்துக் குறிப்பிடுகின்றன.

    புராணங்கள்     தெய்வங்களின்     பராக்கிமத்தைக் கூறுகின்றனவாயும்,     உலகின் சிருட்டி, திதி, சங்காரம் என்பனவற்றையும்,   அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றையும்  கூறுகின்றனவாயுமிருக்கின்றன. ஆதலால், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில், கதை தொடர்ச்சியாக இருப்பது போல் புராணங்களில் காண இயலாது.

    புராணங்கள் கதை கூறி நீதி புகட்ட வந்தனவேயாம். எனவே, கதையில் கருத்துச் செலுத்தாமல், வேதங்களில் உள்ள வேள்விகள், உயிர்களின் படைப்பு, உலக அமைப்பு, கிரகங்கள், சுவர்க்கம், நரகம், வழிபாடு, உடலமைப்பு, வைத்திய முறை, நாடிகள், யோக முறைகள், நோன்புகள், மந்திரம், துதி, சகுனம், இம்மைக்கும் மறுமைக்கும் உதவக் கூடிய பல வழிமுறைகள் ஆகிய எல்லாச் செய்திகளும் புராணங்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

    தமிழ்த் தலபுராணங்கள் நூற்றுக்கணக்கில் கிடைக்கின்றன. முதலில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த இவை செய்யுள் வடிவில் பெருகி, ஏட்டிலும் எழுதி வைக்கப் பெற்றன. பிற்காலத்தில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக வசன நடையிலும் இப்புராணங்கள் நூல்களாக மலர்ந்தன. இவ்வகையில் கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரையிலும் செய்யுள் நடையிலமைந்த சுமார் 400 தமிழ்த் தலபுராணங்கள் பற்றி நாம் அறிய முடிகின்றது.

6.1.2 புராணம் - ஐந்தாவது வேதம்

    வடமொழியில் வேதம் மிகத் தொன்மையான இலக்கியப் படைப்பாகும். அவ்வேதத்திற்கு அடுத்தபடியாகப் புராணங்கள் ஐந்தாவது வேதமாகக் கொண்டாடப்படுகின்றன. இப்புராணங்கள் வேதங்களைப் போலவே மிகத் தொன்மையானவையாகும் என்பது ஆன்றோர் கருத்து.

     மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் போலவே, புராணங்களும் சமய இலக்கியங்களாகக் கருதப்பட்டு வந்துள்ளன.

    புராணங்கள்,    செவிவழி வாயிலாக வந்த புராதனச் செய்திகளையும், வரலாறுகளையும், கலைச் சிறப்புகளையும் மக்களிடையே சென்றடையச்செய்ய சிறந்த கருவூலமாக விளங்கின எனலாம்.

    ‘ஒரு நண்பன் புத்தி சொல்லி நல்லொழுக்க உணர்ச்சியை ஊட்டுவது போல், பழைய கதைகளைச் சொல்லி நீதியை உணர்த்துகின்றன புராண இதிகாசங்கள்’ என்பர்.

6.1.3 தமிழ் இலக்கண நூல்களில் புராணம்

    தமிழ் இலக்கண நூல்களில் புராணம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.     தொடர்நிலைச் செய்யுள் எனப் பன்னிருபாட்டியல் கூறுவதனைப் பிற்காலப் பாட்டியல் நூல்கள் காப்பியம் எனவும், பெருங்காப்பியம் எனவும், புராணம் எனவும் கூறுகின்றன.

  • தொல்காப்பியம்
  •     அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகிய இவை எட்டும் செய்யுள் வனப்பாகும் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இவ்வெட்டில் தொன்மை என்பது உரையொடு பொருந்திப்போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வரும்.

        தொன்மை தானே உரையொடு புணர்ந்த
        பழமை மேற்றே - (தொல்.பொருள், 549)

    என்பது நூற்பா.

        இத்தொன்மை இலக்கணத்தைப் பெற்று வருபவையே தமிழிலுள்ள புராணங்களாகும்.

  • தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று புராணம்
  •     பிரபந்தம என்ற சொல் வடமொழிச் சொல்லாகும். இச்சொல் செம்மையாக யாக்கப்பட்டது என்று பொருள்படும்.

        கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப் பெறும் பிரபந்த மரபியல் என்ற பாட்டியல் நூலே முதன் முதலாக 96 பிரபந்தங்களைப் பற்றிக் கூறுகின்றது.

    பிள்ளைக் கவி முதல் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறெனும்
    தொகைய தான முற்பக ரியல்பு முன்னுறக் கிளக்கும்  
                    பிரபந்த மரபியல்

    என்பது இந்நூலின் முதற் சூத்திரமாகும்.

        கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல் (விருத்தப் பாட்டியல்) ஆகிய நான்கு பாட்டியல் நூல்கள் மட்டுமே புராணத்தையும் ஒரு பிரபந்தமாகக் கூறுகின்றன.

        குலவரவு காரிகை யாப்பிற் புராணமேயாம்  
                (வெண்பாப் பாட்டியல்)

    என்று கூறுகிறது.

        ‘குலவரவு முதலானவற்றைக் காட்டுவது புராணக் கதையாம்’ என்பது அதன் உரை.

        குலவரவு என்பது முன்மரபு, அரசமரபு ஆகியவற்றைக் குறிப்பதாகும்.