6.2 புராண வகைகள்

    புராண வகைகள் இரண்டு ஆகும். அவை :

(1) வடமொழிப் புராணங்கள் - தமிழுக்கு வந்தவை
(2) தமிழ்ப் புராணங்கள் - தமிழிலேயே எழுதப்பட்டவை

6.2.1 வடமொழிப் புராணங்கள்

    புராணங்களில் கூறப்படும் செய்திகளை வைத்து அவற்றை நாம் பாகுபடுத்தலாம், வடமொழிப் புராணங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை :

  • மகா புராணங்கள் - 18
  • உப புராணங்கள் - 18
  • அதி புராணங்கள் - 18

என்பனவாகும்.

    இவற்றுள்      மகாபுராணங்கள் -     சமயத்தைப் பொதுநிலையாகப் பேசுவன, உபபுராணங்கள் - தனித்தனித் தெய்வங்களை புகழ்வன, அதிபுராணங்கள் விரதம், தீர்த்தம், தலம் பற்றிப் பேசுவன என அமைந்துள்ளன.

  • மகா புராணங்கள்

    புராணமஎன்ற பொதுப் பெயரில் நாம் அறிவது மகா புராணங்களே ஆகும். இவை வியாசரால் செய்யப்பட்டன என்பர். இவை தொகையால் பதினெட்டு. இவற்றின் பெயர்களை வடமொழி நூல்களிலும், திவாகரம், பிங்கலம், சூடாமணி ஆகிய தமிழ் நிகண்டுகளிலும் காணலாம். அவையாவன :

  • பிரம புராணம்
  • பதும புராணம்
  • விஷ்ணு புராணம்
  • சிவ புராணம்
  • பாகவத புராணம்
  • நாரதீய புராணம்
  • மார்க்கண்டேய புராணம்
  • ஆக்னேய புராணம்
  • பவிஷ்ய புராணம்
  • பிரமவைவர்த்த புராணம்
  • இலிங்க புராணம்
  • வராக புராணம்
  • ஸ்கந்த புராணம்
  • வாமன புராணம்
  • கௌமார புராணம்
  • மச்ச புராணம்
  • கருட புராணம்
  • பிரும்மாண்ட புராணம்

    என்பனவாகும்.

    மகாபுராணங்கள் சைவம், வைணவம் என்ற சமய அடிப்படையிலும், பிரமன், சூரியன், அக்னி, சிவன், விஷ்ணு என்ற தெய்வங்களின் அடிப்படையிலும் பகுத்துக் கூறப்பெறும். அவையாவன :

ஆக்கினேயம் - அக்கினி புராணம் (1)
பிரமவைவர்த்தம் - சூரிய புராணம் (1)
பிரமம், பதுமம் - பிரம புராணம் (2)
விஷ்ணு, நாரதீயம், பாகவதம், கருடம் - விஷ்ணு புராணம் (4)

ஏனைய பத்தும் சிவமகா புராணங்கள் என்று கூறப்பெறும்.

  • உபபுராணங்கள

    இவை மகாபுராணங்களுக்குத் துணை புரிந்தமையால் உப புராணங்கள் எனப் பெயர் பெற்றன.

  • அதி புராணங்கள்

    இவை மிகவும் பிற்காலத்தில் தோன்றியவை ஆகும். தீர்த்தம், விரதம், வழிபாடு முதலிய செய்திகளை விளக்கிக் கூறுவனவாம். மேலே கூறப்பட்டுள்ள மூவகைப் பிரிவுகளும் பல்வேறு காலக்கட்டத்தில் இயற்றப்பட்டனவாகும்.

    இப்புராணங்களில் உள்ள சிறப்புச் செய்திகளைக் கொண்டே அவற்றை வகைப்படுத்தினர் எனலாம்.

6.2.2 தமிழ்ப் புராணங்கள்

    தமிழ் இலக்கிய வளர்ச்சியில் புராணம் என்னும் தனி இலக்கியம் பல்கிப் பெருகியுள்ளதைக் காணலாம். புராணம் எனும் சொல் வடசொல் ஆயினும் அது தமிழில் நீண்ட நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருவதை அறியலாம்.

    தமிழில் அமைந்த புராண நூல்களை மூன்று வகையாகக் குறிப்பிடுவர். அவை :

    (1) கடவுட் புராணம் (கடவுளைக் குறித்தது)

    (2) சான்றோர் புராணம் (அடியாரைக் குறித்தது)

    (3) தலபுராணம் (ஒரு தலத்தைப் பற்றியது)

என்பன.

  • கடவுட் புராணம்

    தெய்வங்கள், தெய்விக நிலையில் நின்று அருள்புரியும் வரலாறுகளின் தொகுப்பே கடவுட் புராணமாகும். இப்புராணங்கள் முதன் முதலில் வடமொழிப் புராணங்களின் பெயர்ப்பும் தழுவலுமாகவே    இருந்தன. உதாரணமாக, வடமலையப்பர் மச்சபுராணத்தையும், கச்சியப்பர் விநாயக புராணத்தையும் தமிழில் தந்ததைக் கொள்ளலாம். கடவுளைப் பற்றிய புராணங்கள் அனைத்தும் பெரும்பாலும் பிற மொழியிலிருந்து தமிழுக்கு வந்தனவாகவே அமைகின்றன.

  • சான்றோர் புராணம்

    எல்லாச் சிறப்பும் பெற்று, தன்னிகரற்ற நிலையில் நின்றவனைப் போற்றிப் பாராட்டுவதே பெருங்காப்பியமாகும். பிற்காலத்தில் சமய நிலையில் சிறந்து விளங்கிய சான்றோரைப் புகழ்ந்து பாடுவதே சான்றோர் புராணமாகத் திகழ்ந்தது.

    தமிழில் செயற்கரிய செயல்கள் செய்த பெரியோர்களின் வரலாற்றைப் புராணமாக்கியவர்கள் வரிசையில் முதலிடம் பெறுபவர் சேக்கிழார். அவர் பாடிய திருத்தொண்டர் புராணம் சைவக் காப்பியமாகக் கருதப்பட்டாலும், அந்நூல் சான்றோர் புராணத்திற்கு     வித்தாக அமைந்துள்ளதனை உணரலாம். சான்றோர் புராணத்தில் ஒருவரைப் பற்றியோ அல்லது பலரைப் பற்றியோ அமைந்திருக்கலாம்.

பிற நூல்கள் :

    உமாபதி - சேக்கிழார் புராணம்

    கடவுள் மாமுனிவர் - திருவாதவூரடிகள் புராணம்;              பட்டினத்துப் பிள்ளையார் புராணம்

    தண்டபாணி சுவாமிகள் - புலவர் புராணம்

    சேய்த் தொண்டர் புராணம், முருகன் அடியார் பற்றிய புராணம் முதலிய நூல்கள் சான்றோர் புராணம் ஆகும்.