6.5 தலபுராணங்களின் நூலமைப்பு |
|
|
நம் முன்னோர்கள் தலபுராண நூல்களை இயற்றும்போது சில மரபுகளைப் பின்பற்றியுள்ளனர். தலபுராணங்களைச் சுவடிகளிலிருந்து நூலாகப் பதிப்பித்தோர், சில அமைப்புகளைக் கொண்டு அச்சிட்டுள்ளனர். கீழ்வரும் செய்திகள் பொதுவாக எல்லாத் தலபுராணங்களிலும் காணப்படுவனவாம் :
மேற்கூறிய நிலைகளில் தலபுராண நூல்கள் அமையப் பெற்றிருக்கும்.
பழங்காலத்தில், மக்கள் தலங்களில் வரலாறுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு, அத்தலங்களின் விருட்சம், மூர்த்திகளின் திருநாமம், தீர்த்த விசேடம் முதலியவற்றை அவ்வூரில் உள்ளோரிடம் தெரிந்து கொண்டு பிறருக்குச் சொல்வார்கள். இவ்வகையில், பல தலங்களில் சிறப்பு அம்சங்கள் கொண்டது போல், தங்கள் ஊரிலும் அந்தத் தலங்களைப் போல் அமைத்து வழிபடுதல் பழங்காலத்து வழக்கம்.
மூர்த்தி (இறைவன்), தலம் (ஊர்), தீர்த்தம் (புனித நீர்), விருட்சம் (கோயில் மரம்) ஆகிய நான்கும் தலபுராணங்களில் சிறப்பாகக் கூறப்படும் பொருள்களாகும். இதையே தாயுமானவர், மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாயத் தொடங்கினர்க்கு ஓர்
என்கிறார். ஒவ்வொரு தலத்திலும் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகியவற்றை வழிபட்டதால் எய்திய பேறுகள், நீங்கிய பாவங்கள், நீங்கிய பிணிகள் முதலியனவற்றைச் சான்றுகள் மூலம் அறியலாம்.
ஒரு தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், இறைவி இவர்களையே மூர்த்தி என்பர். தலங்களுக்கு ஏற்ப மூர்த்தங்கள் (இறைவன், இறைவி) இருவரும் இணைந்தும் இருப்பர். சில இடங்களில் சற்றுத் தள்ளித் தனிச்சந்தியிலும் இருப்பர்.
தலம் என்பதற்கு இடம், பூமி எனப் பிங்கல நிகண்டு பொருள் கூறுகிறது. இடம், பூமி, உலகம், தலைமை நகரம் எனப் பலப் பெயர் பெறினும், இறைவன் உறையும் ஊர்களையே புண்ணிய பூமி எனவும், தலம் எனவும் கே்ஷத்திரம் எனவும் கூறுவர். தலம் என்னும் இச்சொல் முதன்முதலில் மணிமேகலையில் காணலாம். ‘இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும்’ (மணி, 21-169) என்பது கந்திற்பாவை வருவதுரைத்த காதையில் வரும் ஒரு தொடராகும். சிறப்புடைய ஊர்களுக்கு அங்குள்ள கோயில்களே பெருமை தருவனவாதலின் தலம் என்பது சிறப்பாகக் கோயிலையே குறிக்கும்.
தீர்த்தம் என்பது இறைவன் வீற்றிருக்கும் கோவிலிலோ அல்லது அடுத்தோ உள்ள நீர்நிலைகளைக் குறிப்பிடுவதாகும். பெரும்பாலான புகழ்பெற்ற கோவில்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் பெருமைகளைக் கொண்டனவாகவே அமைந்துள்ளன எனலாம். இறைவனை வழிபட்டவர்கள் அங்கு உள்ள தீர்த்தங்களையும் வணங்கி வழிபட்டனர். அவ்வத் தீர்த்தங்களில் மூழ்கி வழிபட்டோரை விட்டு நீங்கிய பாவங்களைத் தலபுராணங்கள் மூலம் அறியலாம். இந்நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பல விழாக்கள் நடைபெறுகின்றன.
விருட்சம் என்ற சொல் மரத்தைக் (கோயில் மரத்தை) குறிப்பதாகும். ஆகவே இதைத் தலவிருட்சம் என்றே குறிப்பிடுவார்கள். முதன்முதலில் இம்மரத்தடியிலேயே இறையுருவத்தை வழிபட்டிருப்பர். பின்னரே கோயில் எழுப்பப்பட்டிருக்கும். விருட்சங்களால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அம்மர நிழல்களில் அமர்ந்து அதன் பயனை நுகர்ந்ததனால் நீங்கிய பிணிகள், அதனால் பெறும் நன்மைகள் முதலானவற்றைத் தலபுராணங்களில் காணலாம். இத்தகைய சிறப்புமிக்க தலங்களில், இன்னின்ன காலங்களில் இன்னின்ன முறைகளால் வழிபடுவோர்க்கு உடம்பு பற்றியும் உணர்வு பற்றியும் தீராமல் நிற்கும் பிணிகளும், மாசுகளும் நீங்கி இன்பமும் நலமும் பெற்று, இம்மையில் வளமான வாழ்வும் மறுமையில் சிறப்பான வீடுபேறும் கிடைக்கும். இதனைத் தெரிவிக்கவே தலபுராணங்கள் பலப்பல வரலாறுகளைக் கொண்டு இயற்றப்பட்டன. |