4.2 வரலாற்றுச் சான்றுகள்
 

ஓவியத்திற்கு உதவும் கருவிகள், அவற்றைக் கொண்டு ஓவியம் வரையும் கலைஞர்கள், ஓவிய நூல்கள், ஓவியக் கலை பற்றிய திறனாய்வு ஆகியவை குறித்து இந்திய வரலாற்று ஆதாரங்களில் பல செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாகக்     காவியங்களிலும்,     சிற்ப நூல்களிலும், புராணங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் இவை காணப் படுகின்றன.
 

4.2.1 ஓவியக் கருவிகள்
 

தமிழிலக்கியங்களிலும் வடமொழி நூல்களிலும் ஓவியம் வரைவதற்கு உதவும் கருவிகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இவற்றை அறிந்து கொள்ளச் சிற்ப நூல்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஓவியப் பலகையையும், தூரிகை வைக்கப்படும்     குடுவைகளையும்     ஹர்ஷ சரிதை குறிப்பிடுகின்றது. தமிழிலக்கியத்தில் ஓவியப் பலகை வட்டிகைப் பலகை என்றும் தூரிகை என்பது துகிலிகை என்றும் குறிப்பிடப் படுகின்றன.
 

வட்டிகைப் பலகை
 

வட்டிகைப் பலகை கொண்டு ஓவியம் வரையப் பட்டதால் வட்டிகைச் செய்தி என்று ஓவியத்தினை மணிமேகலை குறிப்பிடுகிறது. வட்டிகை மணிப்பலகை என்று சீவக சிந்தாமணி ஓவியப் பலகையை அழைக்கிறது. மிருச்ச கடிகா என்ற வடமொழி நாடகம், ஓவியர் வண்ணங்கள் நிறைந்த பல கலன்களை வைத்துக் கொண்டு ஓவியம் வரைந்ததைத் தெரிவிக்கிறது. வண்ணங்கள் நிறைந்த வட்டிகைப் பலகையைக் காளிதாசர் குறிப்பிடுகின்றார்.
 

தூரிகை
 

சிறகுடன் கூடிய செம்பினால் ஆன தண்டு அல்லது மெல்லிய மூங்கில் குச்சியே தூரிகையாக அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டது. தூரிகையின் சிறகுகள் பாதிரி மலர் போன்று மென்மையாக இருந்ததாகச் சங்கப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. மூங்கில் குச்சியைத் தவிர வேறு விதத்திலும் தூரிகை செய்யப் பட்டிருக்கிறது. செயற்கையான முறையில் தூரிகையின் குச்சி உருவாக்கப் பட்டுள்ளது. கச்சோர வேரைச் சோறு, செங்கல் தூள், சாணம் ஆகியவற்றின் கூழாக்கப் பட்ட நீரோடு சேர்த்து உருட்டிக் கூர்மையான தூரிகைக் கட்டையினைச்     செய்யும்     வழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது.
 

ஓவியத்தில் வண்ணங்கள் பூசுவதற்கு மென்மையான உரோமங்கள் தூரிகைப் பட்டையின் நுனியில் இணைக்கப் பட்டுள்ளன. அணிலின் வால், ஆட்டின் வயிற்றுப் பகுதி, கன்றுக் குட்டியின் காது ஆகிய பகுதியிலிருந்து எடுக்கப் பட்ட மென்மையான உரோமங்களை அரக்குடன் சேர்த்து ஒட்டி, தூரிகை உருவாக்கப் பட்டது. உரோம அளவினைக் கொண்டு இவை பெரியவை, சிறியவை, நடுத்தரமானவை என்று வகைப்படுத்தப் பட்டன. வண்ணம் பூசுவதற்கும் நுண்ணிய வேலைப்பாடுகளுக்கும் தரம் வாரியாகப் பிரிக்கப் பட்டன என்று அபிலாஷ்தார்த்த சிந்தாமணி போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன.
 

வண்ணங்கள்
 

அக்காலத்தில் தாவரப் பொருட்கள் அல்லது கனிமப் பொருட்கள் முதலியவற்றிலிருந்து வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம் முதலிய வண்ணங்கள் தயாரிக்கப் பட்டன. வண்ணங்களை இறுக்குவதற்கு இயற்கையாகத் தாவரங்களிலிருந்து கிடைக்கும் பிசின்கள், செயற்கையாகத் தயாரிக்கப் பட்ட வச்சிரக் கலவைகள் பயன்படுத்தப் பட்டன. பச்சிலைச் சாறு, விலங்குகளின் கொழுப்பு ஆகியவற்றுடன் வண்ணங்கள் கலந்து ஓவியம் வரையப் பட்டது.
 

4.2.2 வரையும் அடித்தளம்
 

ஓவியம் வரைவதற்குப் பலகையும், துணி ஒட்டிய பலகையும் மற்றும் துணி, ஓலை ஆகியவையும் பன்படுத்தப் பட்டன. துணியில் எழுதப்பட்ட ஓவியங்கள் பட்டு உறையில் வைத்துப் பாதுகாக்கப் பட்டன. செங்கல்லால் கட்டப் பட்டு வெண்சுதை பூசிய சுவர்கள் ஓவியம் தீட்டுவதற்கு ஏற்றதாகக் கொள்ளப் பட்டன. பாறையாலான சுவர்களில் சுண்ணாம்பு, களிமண் ஆகியவற்றுடன் பிசின், மாட்டுச் சாணம், தவிடு போன்ற இறுக்கும் பொருட்கள் கொண்டு ஓவியம் வரைவதற்கு அடித்தளம் உருவாக்கப் பட்டது. பின்னர் அதன் மீது வண்ணங்கள் கலந்து ஓவியம் வரையப் பட்டது.