4.5 ஓவியக் கலைத் திறனாய்வு
 

ஓவியக் கலைஞர்களின் படைப்பைத் திறனாய்ந்து கூறும் கலைவல்லார்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர். இவர்கள் ஓவியங்களை மதிப்பிட அழைக்கப் பட்டனர் என்று திலக மஞ்சரி என்ற நூல் கூறுகிறது. சித்திரக் கலையில் திறன் படைத்தவர்களைப் பாராட்டி அவர்களுக்கு வெகுமதி அளிக்க அரசனிடத்து இவர்கள் பரிந்துரை செய்ததையும் திலக மஞ்சரி குறிப்பிடுகிறது.
 

4.5.1 திறனாய்வு விதிகள்
 

நல்ல சித்திரம் உருவாவதற்கு ஒரு நல்ல சித்திரக்காரன் (ஓவியன்) இருக்க வேண்டும். அவனது மனம், உடல் நிலையைச் சித்திரம் பிரதிபலிப்பதாய் இருந்தது என்று அக்காலத்தார் நம்பினர். காவிய மீமாம்சை, சித்திரக்காரனின் குணத்தைப் போன்றே சித்திரமும் உருவாகும் என்று கூறுகிறது. ஓவியங்களின் குறைகளையும் நிறைகளையும் அறிந்து மதிப்பிடத் திறனாய்வு விதிமுறைகள் இருந்துள்ளதைப் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. ‘நன்கு உருவாக்கப் பட்ட அழகிய ஓவியத் தளம், அழுத்தமான வரைகோடுகள், கவர்ச்சியான வண்ணம், மேடு பள்ளங்களைக் காட்டும் நிற பேதம் ஆகியவற்றிற்கு அப்பால் ஓவியத்தைத் தலை சிறந்ததாகக் காட்டும் பண்பு ஒன்று உண்டு. அதுதான் மாபெரும் கலைஞனின் வரைகோடுகள்’ என்கிறது ஒரு நூல். உருவ நலனற்ற, ஆழமற்ற, தெளிவற்ற கோடுகள், ஒப்பீடு இன்மை, வண்ணங்களில் குழப்பம், தவறான நிலைப்பாடு, மனவெழுச்சி இன்மை, உயிரற்ற நிலை, உணர்வற்ற காட்சி போன்ற குற்றங்கள், ஓவியத்தின் மதிப்பைக் குறைக்கின்றன என்று விஷ்ணு தர்மோத்தரம் கூறுகிறது.
 

4.5.2 அண்மைக் காலத் திறனாய்வுகள்
 

வெளிநாட்டவரின் தாக்கத்தில் இந்திய ஓவியங்கள் வெளிநாட்டு நெறிகளைப் பின்பற்றித் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஓவியம் எவற்றின் மீது வரையப்படுகிறதோ (அடித்தளம்) அவற்றின் வேறுபாடு கருதிப் பாறை ஓவியம், சுவர் ஓவியம், ஓலைச் சுவடி ஓவியம், பலகை ஓவியம், கண்ணாடி ஓவியம், திரைச் சீலை ஓவியம் என்று பலவாறாகப் பிரிக்கப் படுகிறது. இது போன்று ஓவியம் தீட்டப் பயன்படுத்தப் படும் வண்ணங்களில் கலக்கப் படும் எண்ணெய், தண்ணீர் முதலியவற்றின் அடிப்படையிலும் ஓவியங்கள் வகைப்படுத்தப் படுகின்றன.
 

பாறைகளில் அமைந்த சுவர்களின் மீதும், செங்கல்லால் கட்டப் பட்ட சுவர்களின் மீதும், களிமண், சுண்ணாம்புக் கலவையால் அடித்தளத்தை ஏற்படுத்தி அவ்வடித்தளம் ஈரமாக இருக்கும்போதே அவற்றின் மீது வரையப்படும் ஓவியத் தொழில் நுட்பத்தினை ஈரப்பத அடித்தளமுள்ள சுவரோவியம் என்று அழைக்கின்றனர். அடித்தளம் உலர்ந்த பின் வரையப்படும் ஓவியத்திற்கு ஈரப்பதமற்ற அடித்தளம் கொண்ட சுவரோவியம் என்று பெயர்.
 

உலர்ந்த அடித்தளத்தின் மீது பசை கலந்த வண்ணக் கலவை கொண்டு ஓவியம் தீட்டும் தொழில் நுட்பத்தினைப் பற்றோவிய முறை அல்லது கெட்டிச் சாய வண்ண ஓவிய முறை என்று அழைக்கின்றனர்.