1.3 தாண்டவமும், இலாசியமும்  

    பெருமையும் உரனும் ஆடுஉ மேன

என்று தொல்காப்பியம் ஆண்மைக்குரிய இலக்கணத்தை உரைக்கும். அச்சமும் நாணமும் மடமும் பயிர்ப்பும் பெண்மைக்குரிய பண்புகளாக உரைக்கப்படும். இப்பண்புகளின் அடிப்படையில் ஆண்மைக்குரிய ஆடலாகத் தாண்டவமும், பெண்மைக்குரியனவாக நளின நடனமாகிய இலாசியமும் (லாசியம்) கூறப்படும். தாண்டவங்களைச் சிவபெருமான் ஆடிக் காட்டினார் என்றும் இலாசியத்தை உமா தேவியார் ஆடிக் காட்டினார் என்றும் கூறுவர். சிற்பங்களில் இவ்வகை அமைதிகள் காணலாம். ஆண், பெண் வேடம் இடும்பொழுதும், பெண் ஆண் வேடமிடும் பொழுதும், பாத்திரத்திற்கேற்ற பண்பு கொண்டு ஆடுவர்.

1.3.1 தாண்டவமும் ஐந்தொழில்களும்

    சிவபெருமான்     ஆடிய     தாண்டவங்களில், அவர் மேற்கொள்ளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவங்களாகச் சில தாண்டவங்களைக் குறிப்பிடுவர். இத்தாண்டவங்கள் ஆடுவதற்குரிய அவைகளாக ஐந்து அவைகளைக் கூறுவர். இத்தாண்டவங்களைக் கூத்து என்றும், ஆடும் இறைவனை கூத்தரசர என்றும் கூறலாம்.

எண் ஐந்தொழில்கள் சபைகள் ஊர்கள் தாண்டவங்கள்
1. படைத்தல் தாமிர சபை திருநெல்வேலி காளிகா தாண்டவம்
2. காத்தல் வெள்ளியம்பலம் மதுரை கௌரி தாண்டவம்
3. அழித்தல் (இருண்ட நள்ளிரவு) ஆலங்காடு சங்கார தாண்டவம்
4. மறைத்தல் சித்திர சபை திருக்குற்றாலம் திரிபுர தாண்டவம்
5. அருளல் இரத்தின சபை திருவாலங்காடு ஊர்த்தவ தாண்டவம்
6. ஐந்தொழில்கள் கனக சபை தில்லை ஆனந்த தாண்டவம்

    ஐந்தொழில்கள் ஒருங்கே நிகழ்த்தும் சபையாகத் தில்லையில் உள்ள கனகசபை அழைக்கப்படுகிறது.

    படைத்தல் தொழிலுக்குரிய காளிகா தாண்டவ நடராசர் சிற்பம் நாவுக்கரசருக்குத் திருவடி சூட்டிய தலமான நல்லூரில் உள்ளது. இறைவன் எட்டுக் கைகளைக் கொண்டு விளங்குவர்.

    காத்தல் தொழிலைச் செய்யும் கௌரி தாண்டவக் கூத்தர் சிற்பம் சென்னை அரசு அருங்காட்சியத்தில் உள்ளது. இதில் சிவமும் சக்தியுமாக விளங்குவார். கௌரியாகிய உமையின் ஊடல் தீர்க்க ஆடினார்.

    அழித்தல்     தொழிலுக்குரிய தாண்டவமான சங்கார தாண்டவச்     சிற்பம்     திருச்செங்காட்டங்குடியில் உள்ளது. இக்கூத்தில் நந்தியும் கௌரியும் திகழ்வர்.

    முப்புரங்களைச்     சிவபெருமான் எரித்த காலத்தில் வெற்றிக் களிப்பில் ஆடிய தாண்டவம் திரிபுர தாண்டவமாகும். இதனைக் கொடு கொட்டி யென்றும், வென்றிக் கூத்து என்றும் கூறுவர். திருவதிகை, காஞ்சி கைலாச நாதர் கோயில்களில் இத்தகு வடிவத்தைக் காணலாம். இது மறைத்தல் தொழிலுக்கு உரியதாகும்.

    அருளல் தொழிலுக்குரிய தாண்டவமாக     ஊர்த்துவ தாண்டவம் விளங்குகிறது. திருவாலங்காட்டிலே இவ்வடிவத்தைக் காணலாம்.

    இவ்வைந்து தொழில்களையும்     ஒருசேரக் காணும் சபையாகத் தில்லையில் உள்ள கனகசபை விளங்குகிறது. இங்கு ஆடிய கூத்தை ஆனந்த தாண்டவம் என்பர்.

1.3.2 ஆனந்த தாண்டவம்

    ஆனந்த தாண்டவத் திருவுருவை சிவன் கோயில்களில் காணலாம். இவரை ஆடல்வல்லான் என்றும், கூத்திறைவர் என்றும், நடராசர் என்றும் கூறுவர்.

    திருநாவுக்கரசர் தல யாத்திரை மேற்கொண்ட பொழுது கோயில் என்று அழைக்கப் பெறும் சிதம்பரத்திற்கு வந்தார். ஆடல் வல்லானைக் கண்டார். ஆடல் வல்லானின் ஆனந்த தாண்டவத்தைக் கண் குளிரக் கண்டார். வளைந்த புருவமும், கோவைப் பழம் போன்ற சிவந்த திருவாயும், புன்னகையும், குளிர்ந்தசடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும், இனிமை தரும் தூக்கிய திருவடியும் கண்டார். இக்காட்சியைக் காண, கண்டு மகிழ, உள்ளம் அகம் குளிர மனிதப் பிறவியை மேன்மேலும் தான் எடுக்க வேண்டும் என்று பாடினார்.

 குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்,  பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண்ணீறும்  இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்  மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே

    சிவன் கோயில்களில் இத்தகு வடிவத்தில் கூத்தரசர் திகழ்கிறார். மதுரையில் கால் மாறி ஆடிய ஆனந்தக் கூத்தராக விளங்குகிறார்.

1.3.3 இலக்கியங்களில் சிவதாண்டவக் காட்சி

    சிவன் ஆடும் தாண்டவக் காட்சிகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

· கலித்தொகை

    எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடலில் இறைவன் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்ற மூன்று கூத்துகள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

    இறைவன் கொடுகொட்டி நடனம் ஆடும் பொழுது இறைவி அதற்கேற்ப அமையும் தாள இறுதியாகிய சீரைத் தருகிறாள் என்றும், பாண்டரங்கம் ஆடும் பொழுது இறைவி தாள இறுதிக்கு முன்னதாகிய தூக்கினைத் தருகிறாள் என்றும், இறைவன் காபாலம்     என்ற கூத்தை ஆடும்பொழுது தாளத்தின் முதலெடுப்பாகிய பாணியைத் தருகிறாள் என்றும், இப்பாடல் குறிப்பிடுகின்றது. இதன் மூலம் தாளத்தில் முதலெடுப்பு பாணி என்றும், தாள இறுதியைச் சீர் என்றும் தாள இறுதிக்கு முன்னிகழ்வு தூக்கு என்றும், தாள நுட்பங்களை இப்பாடல் குறிப்பிடுகின்றது.

 படுபறை பலஇயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ  கொடுகொட்டி ஆடுங்காற் கோடுயர் அகல்அல்குல்  கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ.

 மண்டமர் பலகடந்து மதுகையான் நீறணிந்து  பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்தோள்  வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ,

 கொலை உழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத்  தலையங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்  முலையணிந்த முறுவலாண் முற்பாணி தருவாளோ.            (கலித்தொகை, கடவுள்வாழ்த்து)

· சிலப்பதிகாரம்

    ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் பதினொரு வகையான கூத்துகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் சிவன் ஆடிய தாண்டவங்கள் கொடுகொட்டி, பாண்டரங்கமாகும்.

    திரிபுரத்தை எரித்த சிவன் உமையை ஒருபாற் கொண்டு கைகொட்டி ஆடியது கொடு கொட்டி ஆகும்.

    தேர்முன் நின்ற பிரமன் வேண்டுகோளுக்கு இணங்க, பாரதி வடிவில் சிவபெருமான் ஆடியது பாண்டரங்கமாகும்.

· திருமூலர்

    சைவத் திருமுறைகளுள் பத்தாம் திருமுறை திருமந்திரமாகும். இதனைத் திருமூலர் பாடியுள்ளார். இதில் ஒரு பகுதி திருக்கூத்து தரிசனம் பற்றி உரைக்கும் பகுதியாகும். திருமூலர் இறைவனைக் கூத்து வடிவில் அகமார்க்கத்திலும், புறமார்க்கத்திலும் கண்டு சுவைத்தார்.

· காரைக்காலம்மையாரும், நாயன்மார்களும்

    “அறவா நீ ஆடும்பொழுது நின்னடியின்கீழ் இருக்க வேண்டு” மென இறைவனை வேண்டி வழிபட்டவராகக் காரைக்காலம்மையார் விளங்குகிறார்.

    மேலும் திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரையும் ஆடல் வல்லானாகக் காண்கிறார். ஆடல் வல்லானின் அபயகரம் நாவுக்கரசரை ‘என்று வந்தாய்’ என்று வினவுகிறது. திருக்கூத்து அனுபவம் எமபயத்தைப் போக்கும் பயனுடையதாகச் சுந்தரர் காண்கிறார். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் தில்லைக் கூத்து அனுபவங்களை உரைக்கிறது. தன்னுடைய நாள் வழிபாட்டில் கூத்தனின் சிலம்போசையைச் சேரமான் பெருமாள் கேட்டு மகிழ்ந்தார். தில்லைக் கூத்தப் பெருமான் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூலாக பெரியபுராணம் விளங்குகிறது. இறைவன் ஆடும் காட்சியைக் காண ஆயிரம் கண் வேண்டும் எனச் சீர்காழி முத்துத் தாண்டவர் பாடுகிறார். இவ்வாறு இலக்கியங்கள் சிவ தாண்டவக் காட்சிகள் பற்றிக் கூறுகின்றன.

1.3.4 இலாசியம்

    பெண்மைக்குரிய     மென்மையோடு கூடிய     கூத்து இலாசியமாகும் (லாஸ்யம்). இவ்வகை நடனத்தை உமா தேவியார் ஆடிக் காட்டினார் என்பர். இவ்வகை ஆடல் உவகைச் சுவை நிரம்பிய நிலையில் இருக்கும். ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடும்பொழுதும் இவ்வகை நளின நிலையில் ஆடுவர். சென்ற நூற்றாண்டில் பரத நாட்டியக் கலைக்குப் புத்துயிர் அளித்த இ.கிருட்டிணன் பெண் உருவம் பூண்டு இலாசிய நடனத்தை ஆடிக்காட்டினார். இன்றும் தஞ்சைக்கு அருகில் உள்ள மெலட்டூரில் நடைபெறும் பாகவத மேள நாட்டிய நாடகங்களில் ஆண்களே     பெண்     வேடமிட்டு ஆடி வருகின்றனர். பெண்களுக்கென உருவாக்கப்பட்ட ஆடலாக இலாசியம் அமையும்.

    தாண்டவத்திற்கும், இலாசியத்திற்கும்     அடிப்படையில் காணப்படும் வேறுபாடு, தாண்டவம் ஆண் தன்மை மிக்க கம்பீர (பெருமிதம்) நடனமாகவும், இலாசியம் பெண் தன்மை மிக்க நளின நடனமாகவும் அமையும். இவைகளுக்கெனத் தனித்தனி அடவு முறைகளோ, சொற்கட்டுகளோ இல்லை. ஆடும் முறையில் தான் வேறுபாடு காணப்படும். ஒரே அசைவைத் தாண்டவமாகவும், இலாசியமாகவும் ஆட முடியும். ஆண், பெண்களுக்குள்ள பண்பு வேறுபாடுகளை இவை எதிரொலிக்கின்றன. தேவையான பொழுது ஒரு பெண் தாண்டவத்தையும் ஓர் ஆண் இலாசியத்தையும் ஆடுவர். சிவபெருமான் மாதொரு பாகனாக விளங்கி இருவகை நிலைகளையும் காட்டியுள்ளார்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. அடவு - சொற்பொருள் விளக்கம் தருக.
2. அடவுக்குரிய சொற்கட்டுகளைக் கூறுக. [விடை]
3. அடவு எத்தனை வகைப்படும்?
4. கரணம் என்ற சொல்லிற்குரிய பொருள் யாது?
5. தல புட்ப புடம் என்றால் என்ன?
6. தாண்டவம் என்றால் என்ன?
7. காத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் யாது?
8. கொடு கொட்டி என்ற கூத்தை விளக்குக.
9. தாண்டவத்திற்கும் இலாசியத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு யாது?