நாட்டிய நாடகமாகிய கூத்துப்பற்றித் தொல்காப்பியம்
என்ற இலக்கண நூலும், ஏனைய இலக்கிய நூற்பாக்களும் குறிப்பிடுகின்றன.
4.2.1 தொல்காப்பியம்
தொல்காப்பியத்தி்ல் நாடகம் என்ற சொல் வழக்காறு
உள்ளது.
நாடக வழக்கினும் உலகியல்
வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி
வழக்கம்
(தொல். பொருள்.56)
நாடக வழக்கைப் புலனெறி வழக்கம் என்று அது
குறிப்பிடுகிறது. மேலும் தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாடு கூத்தற்குரிய
சுவைப்பகுதியாக அமைந்துள்ளது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,
பெருமிதம், வெகுளி, உவகை என்ற எண்வகை மெய்ப்பாட்டினைப் பற்றித் தொல்காப்பியம்
உரைக்கிறது. தலைவன், தலைவியிடையே அமையும் காதல் வாழ்க்கையில் ஏற்படுகின்ற
மெய்ப்பாடு உலகியல் வாழ்வோடும் தொடர்புடையது என்பதால் இம்மெய்ப்பாடுகள்
நாடகத்திற்கும், நாட்டியத்திற்கும் பொருந்துகின்றன.
மேலும் நாடக மாந்தர்களாகிய தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி போன்றோரின்
உரையாடல்கள் பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
4.2.2 மேற்கணக்கு கீழ்க்கணக்கு
நூற்கள்
பதினெண்மேற்கணக்கு நூற்களிலும் பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களிலும் நாட்டியம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
· பதினெண்மேற்கணக்கு நூற்கள்
பதினெண்மேற்கணக்கு நூல்களாகிய பாட்டும் தொகையுமாக
அமையும் இலக்கியங்களில் இசை நாட்டியக் கலைஞர்கள் பற்றியும், இவர்களின்
இசை நாடக நுட்பங்கள் பற்றியும், இவர்களின் வாழ்வியல் நெறிமுறைகள் பற்றியும்,
இவர்களைப் போற்றிய புரவலர்கள் நிலை பற்றியும் உரைக்கப்பட்டுள்ளது.
அன்றைய சமுதாயத்தில் மிகவும் போற்றப்பட்டவர்களாக இவர்கள் விளங்கியுள்ளனர்.
இவர்களின் பெயரால் பொருநர் ஆற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
கூத்தராற்றுப்படை என்ற ஆற்றுப்படை
நூல்கள் உள்ளன. பாணன், பறையன், கடம்பன், பொருநன், கூத்தன், கோடியர்,
வயிரியர், பாடினி, விறலி போன்ற இசை நாடகக் கலைஞர்கள் பற்றிய செய்திகள்
காணப்படுகின்றன. விறல்பட (சிறப்புற) ஆடும்
ஆடுமகள் விறலி எனப்படுகிறாள்.
· பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை
சமணர்களால் இயற்றப்பட்டவை. சமணர்கள் நாடகக் கலையையும் இன்பம் பயக்கும்
கலைகளையும் விரும்பாதவர்களாக விளங்கினர். எனினும் இவர்கள் படைத்த பாடல்களிலும்
கூத்துக்கலை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
செல்வத்தின் நிலையாமையை உணர்த்த விழைந்த திருவள்ளுவர்
கூத்தாடும் அவையில் மக்கள் நிறைவது போல் ஒருவரிடம் செல்வம் பெருகும்.
கூத்து முடிந்ததும் மக்கள் கூட்டம் மொத்தமாகக் கலைவது போல் செல்வம்
சென்றுவிடும் என்பதனை விளக்கியுள்ளார்.
கூத்தாட் டவைக்குழாத்
தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று (குறள்,
332)
4.2.3 இரட்டைக் காப்பியங்கள்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு அளவில் தோன்றிய
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்
காப்பியங்களாகக் கருதப்படுகின்றன. சிலப்பதிகாரம் முத்தமிழ்க்
காப்பியமாக விளங்குகின்றது. இசை வளத்தையும், நாடக வளத்தையும்
எடுத்துரைக்கின்றது. ஆடல், பாடல், அழகு இம்மூன்றிலும் குறைவுபடாத மாதவியின்
ஆடல் அரங்கேற்றம், ஆடலாசான் அமைதி, முதல்வன் அமைதி,
குழலோன் அமைதி, யாழ்ப்புலமையோன் அமைதி, அருந்தொழில் அரங்க அமைதி, இசை
முழக்கம் அமையும் முறை, மாதவி ஆடல் பயின்ற நிலை போன்றன மிகச் சிறப்புடன்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மாதவி ஏழாண்டுக் காலம் ஆடற்கலை பயின்று பன்னிரண்டாவது
வயதில் அரங்கேற்றம்
பெற்றாள், தலைக்கோல்நிலை என்ற பட்டத்தையும்,
பெற்றாள். தானம் கற்றல், பல்வகைக் கூத்துகளைப் பயிலல், ஒப்பனை முறையைக்
கற்றல் போன்ற செய்திகள் சிலம்பில் கூறப்பட்டுள்ளன. இந்நூலுக்கு அமைந்த
அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை வாயிலாகப் பல்வகைப்பட்ட செய்திகளை
அறிய முடிகின்றது. |