பல்லவர்கள் பெரும்பாலும் புராணங்களை அடிப்படையாகக்
கொண்டே
சிற்பங்களை எடுப்பித்துள்ளனர் என்பதை மேற்கண்ட
பல சான்றுகளிலிருந்து அறியலாம். சைவம்,
வைணவம், சாக்தம்
(சக்தி வழிபாடு) ஆகிய மதங்களுக்குச் சமவாய்ப்பு
அளிக்கப்பட்டது. இங்கு இந்திய - தமிழ்நாட்டுச் சிற்பக் கலை பற்றிய ஓர் அடிப்படைப் பண்பைப் புரிந்துகொள்ள வேண்டும். கிரேக்க - ரோமானியச் சிற்பங்கள் மனித உருவங்களை உள்ளது உள்ளபடியே அமைத்துக் காட்டும் தத்ரூபக் கலையைச் சார்ந்தவை. ஆனால் நம் நாட்டுச் சிற்பங்கள் அளவு, உறுப்புகள், தோற்றம் ஆகிய எல்லாவற்றிலும் கற்பனை கலந்து அமைந்தவை. உருவங்களின் மூலம் கருத்தும் உணர்ச்சியும் புலப்படுத்துபவை; குறியீட்டுப்பொருள் (Symbolism) உடையவை. நான்கு கைகள், எட்டுக் கைகள், நான்கு தலை போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
பல்லவரின் சிற்பங்கள் மெலிந்த, நீண்ட உடல் அமைப்பையும்
பரந்த
மார்பையும், குறுகிய இடையையும் கொண்டவை.
இச்சிற்பங்களின் மகுடங்கள் கூம்பு வடிவமாகவும் நீண்டும்
இருக்கும். பூணூல் வலத் தோளின் மேல்
செல்வதாக
அமைந்திருக்கும். அணிகலன்கள் குறைவாக
இருக்கும். மகுடங்கள்
மற்றும் தலையலங்காரங்கள் அலங்காரமின்றி எளிமையாக
அமைந்திருக்கும்.
உருவங்கள் மென்மையானவையாகக்
காணப்படும். பெண் உருவங்கள் இளமையோடு காணப்படும். அவர்களது இடை சிறுத்துக் காணப்படும். அடிவயிற்றுப் பகுதி முன்பக்கம் சற்றுப் புடைத்தும் காணப்படும். சிற்பங்களின் பார்வை கருணையுடன் கூடியதாக இருக்கும். இடுப்பின் இருமருங்கிலும் ஆடை பரந்து விரிந்து செல்வதாகக் காணப்படும். சிற்பங்களில் உள்ள காதணிகள், குறிப்பாகக் குண்டலங்கள் தடித்தவையாகவும், கேயூரங்கள் (தோள் அணி) வேலைப்பாடு அற்றவையாகவும் இருக்கும். அணிகலன்கள் குறைவாகவே இருக்கும். பெண் சிற்பங்களில் சில சிற்பங்களுக்கு மட்டுமே மார்புக் கச்சை அமைக்கப் பட்டிருக்கும்.
பல்லவர் காலத்துக் குடைவரைக் கோயில்களில் தொடக்க காலத்தில் அமைக்கப்பட்ட துவார பாலகர் சிற்பங்களில் இரண்டு கைகள் மட்டுமே இடம் பெற்றன. பிற்காலத்தில்தான் நான்கு கரங்களுடைய துவார பாலகர் சிற்பங்கள் அமைக்கப் பெற்றன. இவைகளில் சில கொம்புகளுடனும், வேறு சில சங்கு சக்கரத்துடனும் செதுக்கப்பட்டன. தொடர்ந்து வந்த காலங்களில் துவார பாலகர்களது கைகளில் கருவறையின் உள்ளிருக்கும் இறைவனது ஆயுதங்களை அப்படியே அளிக்கும் வழக்கம் தோன்றியது.
பல்லவர்கள் தனிச் சிற்பங்களை விடப் புடைப்புச் சிற்பங்களையே அதிகமாகச் செதுக்கியுள்ளனர். இவர்களது மகாபலிபுரப் புடைப்புச் சிற்பங்கள் உலகளாவிய சிறப்புப் பெற்றவை. இவர்களது கட்டுமானக் கோயிற் கருவறைச் சுவர்களில் சோமாஸ்கந்தரது புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டது. இம்மரபைத் தோற்றுவித்தவன் பரமேசுவர வர்மனாவான். எனினும் இராச சிம்மனது காலத்தில் இவ்வழக்குச் சிறப்பு நிலை அடைந்தது. |