3.2 அரசர்கள் காலச் செப்புத் திருமேனிகள் | ||||
பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் ஆட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்ட செப்புத் திருமேனிகள் பல அமைப்புகளைக் கொண்டவை. இவை இன்று கோயில்களிலும் அருங்காட்சியகங்களிலும் இடம்பெற்றுள்ளன. |
||||
3.2.1 பல்லவர் காலம் | ||||
அண்மைக் காலத்தில் பல்லவர்களது செப்புத் திருமேனிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் வார்க்கப்பட்ட செப்புப் படிமங்களில் தொன்மையானது கி.பி.750 - இல் வடிக்கப்பட்ட மைத்ரேயரின் உருவம். இது காவிரிப் பூம்பட்டினத்தில் கிடைத்துள்ளது. இம்மாதிரிப் பௌத்தப் படிமங்கள் கி.பி.800 வாக்கில் அமைக்கப்பட்டன எனத் தெரிகின்றது. இக்காலத்து இந்து சமயப் படிமங்கள் பெரும்பாலும் நாயன்மார்களின் செல்வாக்குப் பெருகியிருந்த காலத்தில் வார்க்கப்பட்டன. எனவே அவை சைவப் படிமங்களாகவே திகழ்ந்தன என்பதை நினைவிற் கொள்ளுங்கள். |
||||
|
||||
மைத்ரேயரின் உருவம் |
||||
|
||||
பல்லவர் காலப் படிமங்களில் குறிப்பிடத் தக்கது, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப் பெற்றுள்ள கூரம் என்ற இடத்தில் கிடைக்கப் பெற்ற ஊர்த்துவத் தாண்டவ நடராச மூர்த்தியாகும். ஊர்த்துவத் தாண்டவம் என்பது ஒரு காலை நெற்றி வரை தூக்கி ஆடுவதாகும். இது கி.பி.9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் படைக்கப் பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது. இத்தகைய அமைப்புடைய படிமம் இது ஒன்றேயாகும். |
||||
|
||||
ஊர்த்துவத் தாண்டவ நடராச மூர்த்தி |
||||
|
||||
சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவெண்காட்டு அர்த்தநாரிப் படிமம் ஆண் மற்றும் பெண்ணின் அவயவங்களில் நளினங்களைச் சிறப்பாகக் காட்டுகிறது. திருநெய்ப்பூரில் கிடைத்துள்ள நின்ற நிலையிலுள்ள விஷ்ணுவின் படிமம் பல்லவர் காலத்ததேயாம். கீழப்புதனூரில் இக்காலத்தைச் சேர்ந்த விஷபாகரணர் படிமம் கிடைத்துள்ளது. இது தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே விஷபாகரணரின் செப்புப் படிமம் இந்த ஒன்றுதான் என்பது நினைவில் கொள்ளத் தக்கதாகும். சிவபெருமான் விஷத்தை வேண்டி வாங்கி உண்டு நீலகண்டன் என்னும் பெயர் பெற்றதைக் குறிப்பதே விஷபாகரணர் உருவ அமைப்பாகும். திருவாலங்காடு என்னும் இடத்திலுள்ள சோமாஸ்கந்தர் படிமம் தொடக்கக் காலப் பல்லவர் கலையின் கூறுகளைக் கொண்டுள்ளது. இதில் சிவனும், பார்வதியும், கந்தனும் அமர்ந்துள்ளனர். இதுவே பல்லவர்களது கட்டுமானக் கோயில்களில் பிரதானச் சிற்பமாய் அமைந்தது. பல்லவர்களது சிற்பங்களில் பூணூல் வலது கைக்கு மேலே சென்று வருவது போல் அமைக்கப் படுவது வழக்கமாயிருந்தது. இவ்வகையில், பெருந்தோட்டம் என்ற இடத்தில் கிடைத்துள்ள விஷ்ணு செப்புப் படிமமும், தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள நின்ற நிலையில் உள்ள விஷ்ணு படிமமும், புஞ்சையூரில் உள்ள சிவனது படிமமும், பட்ட மங்கலத்திலுள்ள உமா மகேசுவரர் படிமமும், தண்டந் தோட்டத்திலுள்ள சுப்பிரமணியர் படிமமும் இக்காலத்தினைச் சேர்ந்தவையாகும். |
||||
|
||||
திருவெண்காட்டு அர்த்தநாரி |
||||
3.2.2 சோழர் காலம் |
||||
தென்னிந்தியச் செப்புத் திருமேனிகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சோழர் காலத்துப் படிமங்கள் தாம். இக்காலத்தில் எண்ணற்ற படிமங்கள் வடிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை நடராசர், கல்யாண சுந்தரர், திரிபுராந்தகர், இராமர், இலக்குவன், சீதை, அனுமன், விஷ்ணு, தேவி போன்றவையாகும். செம்பியன் மாதேவி காலத்தில் ஏராளமான கோயில்கள் திருத்திக் கட்டப் பட்டதோடு படிமங்களும் செய்து வைக்கப் பட்டன. |
||||
|
||||
சோழர் காலத்துச் செப்புப் படிமங்களை எளிதில் இனம் காணலாம். உடலமைப்பு அழகாகவும், உயிரோட்டமும் அழகியல் உணர்வும் ஒருங்கே கொண்டவையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. முற்காலச் சோழர் படிமங்கள் பிந்திய காலத்தை விட இயல்பாகப் படைக்கப்பட்டன. பிந்திய சோழர் காலப் படிமங்களில் முகங்களில் சற்றுக் கடுமையும், பளிச்செனத் தெரியும் எடுப்பான நாசியும், தன்மையான உடலமைப்பும் காட்டப் பட்டிருக்கும். பல்லவர் காலமும் சோழர் காலமும் ஒன்றொடொன்று இணையும் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வடிக்கப்பட்ட படிமங்களில் உன்னதமான படைப்பு வடகலத்தூர் கல்யாண சுந்தரர் திருமேனி ஆகும். தமிழகத்துச் செப்புப் படிமங்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்றான இச்சிற்பத் தொகுதியில் சிவபெருமான் இளைஞனாக மணக்கோலத்தில், பார்வதி தேவியின் ஒரு கரத்தைப் பற்றியவாறு வடிக்கப் பட்டுள்ளார். மணப் பெண்ணான தேவி இளமை ததும்பும் நாணத்தோடு காணப்படுகின்றார். முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்ட எழில்மிகு நடராசர் சிற்பமும் பார்வதியின் படிமமும் கரைவீரம் என்ற இடத்தில் கிடைத்துள்ளன. ஆனந்தத் தாண்டவ நடராசர் திருமேனிகளில் இதுவே முதலாவதாகும் என்று கருதப்படுகிறது. பல்லவனீச்சுரம் என்ற இடத்தில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உமையும் குழந்தை கந்தனும் ஒரே பீடத்தில் அமர்ந்துள்ள காட்சி அற்புதப் படைப்புக்களில் ஒன்றெனலாம். |
||||
|
||||
வடகலத்தூர் கல்யாண சுந்தரர் |
||||
|
||||
முதலாம் பராந்தக சோழனின் தந்தையான ஆதித்த சோழன் காலத்தில் இராமர், இலக்குவன், சீதை, அனுமன் உருவங்கள் வார்க்கப்பட்டன. இவன் காலத்து இராமர் குழுப் படிமங்கள் பருத்தியூரில் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே அழகு மிக்கனவாகும். பராந்தகன் காலத்து இராமர் குழுச் செப்புப் படிமங்கள் இராமேசுவரத்தில் கிடைத்துள்ளன. வடக்குப் பனையூரில் உன்னதமான இராமர் குழுச் சிற்பத்தைக் காணலாம். வடக்குப் பனையூர், கப்பலூர் ஆகியவற்றின் படிமங்கள் முற்காலச் சோழர் கலையின் புகழ் பாடுகின்றன. பருத்தியூர் விஷ்ணுவும், கீழையூர் சுகாசன சிவமூர்த்தியும் இக்காலத்தைச் சேர்ந்தவர்களே. தஞ்சைக்கு அருகில் திருமெய்ஞானம் என்ற இடத்தில் உள்ள ஞான பரமேசுவரர் கோயிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராசர் மற்றும் உமா (சிவகாமி) படிமங்கள் சிறப்பானவையாகும். திருச்சேறையில் நடனமாடும் குழந்தைக் கிருஷ்ணர் உருவமும் காணத் தக்கதாகும். |
||||
|
||||
சீதை, இராமர், இலக்குவன், அனுமன் |
||||
|
||||
பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் செம்பியன் மாதேவியால் ஏராளமான படிமங்கள் வடிக்கப்பட்டன. இக்காலத்தில் உடலமைப்பு மெல்லியதாயும் ஆபரணங்கள் சற்றுக் கூடியும் அமைந்துள்ளன. செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட கோனேரி ராசபுரம் உமா மகேசுவரர் கோயிலில் உள்ள ரிஷபாந்திக மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி, பார்வதி, கணபதி, கல்யாண சுந்தரமூர்த்தி ஆகிய படிமங்கள் வியக்கத் தகுந்தவையாகும். |
||||
|
||||
சோழப் பேரரசர்களில் சிறந்தவனான முதலாம் இராசராசன் தான் கட்டிய தட்சிண மேரு என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயிலில் பல செப்புப் படிமங்கள் அமைத்தான். அவற்றின் அமைதியையும் அளவுகளையும் கல்வெட்டுகளில் பொறித்தான். தமிழக வரலாற்றில் செப்புத் திருமேனிகள் பற்றிய ஆவணச் செய்திகளைக் கல்வெட்டில் பொறித்தது இம்மன்னன் காலத்தில்தான். |
||||
|
||||
இம்மன்னன் காலத்தில் நடராசர் படிமங்கள் ஏராளமாக வார்க்கப்பட்டன. அவற்றில் கி.பி.1011 மற்றும் 1012ஆம் ஆண்டைச் சேர்ந்த பிட்சாடனர் படிமங்கள் குறிப்பிடத்தக்கன. இக்கலைக் கூடத்தில் உள்ள திருவெண்காட்டு ரிஷபாந்திகர் படிமத்தில் சிவபெருமான் நந்தி மீது சாய்ந்தாற்போல், அதாவது அவரது வலது கை நேர்த்தியாக நந்தி மீது சாய்க்கப்பட்டது போல் அமைந்துள்ளது. ஆனால் நந்தியின் உருவம் காட்டப் படவில்லை. இங்கு நந்தி இருப்பதாக ஒரு யூகமே காட்டப்பட்டு உள்ளது. இக்கலைக் கூடத்தில் உள்ள மற்ற திருவெண்காட்டுப் படிமங்களாவன, கல்யாண சுந்தரர், பைரவர், கண்ணப்பர், ரிஷபவாகனர், உமா பரமேசுவரர் போன்றவர்களது படிமங்களாகும். நடராசர் படிமங்களில் சிறந்ததெனக் கருதப்படுவது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாலங்காடு நடராசர் ஆவார். நடராசர் தனது வலது காலை முயலகன் மீது அழுத்தி இடதுகாலை நளினமாகத் தூக்கி ஆடும் இக்காட்சியைக் கண்டு வியந்து கலையின் இயற்கையான இயக்கத்திற்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு என பிரஞ்சுச் சிற்பி ரோடின் கூறியுள்ளார். இதுபோன்று டெல்லி தேசிய அருங்காட்சியகத்திலுள்ள திருவரங்குளம் சதுர தாண்டவ நடராசரின் படிமம் அழகிய அவயவங்களுடன் விளங்குகிறது. வளோங்கன்னியைச் சேர்ந்த நடராசர் திருமேனி ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. நடராசரின் தலையில் கங்கை இருப்பது போல் காட்டப்பட்ட முதல் செப்புப் படிமம் விருத்தாசலம் கோயிலில் உள்ளது. சோழர் காலத்து நடராசர் செப்புப் படிமங்கள் பத்தூர், நல்லூர், ஆனைக்குடி, பெருந்தோட்டம், திருமெய்ஞானம், கொடுமுடி, தண்டந்தோட்டம், சிவபுரம், திருப்பழனம், கருந்தாட்டாங்குடி, தஞ்சாவூர், சேமங்கலம், ஒக்கூர், புஞ்சை மேலப் பெரும்பள்ளம், திருப்பனந்தாள், வெள்ளானகரம், ஊட்டத்தூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. |
||||
|
||||
நடராசர் சிற்பங்களுக்கு அடுத்த படியாக அதிக அளவில் கிடைப்பது திரிபுராந்தகரது உருவமாகும். இது கோனேரி ராசபுரம், மாயவரம், தஞ்சைக் கலைக்கூடம், கீழப்பழுவூர், வெள்ளனூர், ஆவரணி புதுச்சேரி, தரங்கம்பாடி, இடும்பவனம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இராமர் குழுச் சிற்பங்கள் பருத்தியூர், வளர்புரம், மனக்கல், திருக்கடையூர் போன்ற கோயில்களில் காணப்படுகின்றன. கல்யாணசுந்தரர் உருவம் முன்னமே குறிப்பிட்டது போல் வடக்கலத்தூரிலும், திருவேள்விக்குடி, திருவெண்காடு, திருவொற்றியூர், திருமணஞ்சேரி ஆகிய கோயில்களிலும் செய்விக் கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் படிமம் தனியாகவும் தேவியருடனும் வடிக்கப்பட்டது. தனியாக அமைக்கப் பட்டவையே எண்ணிக்கையில் அதிகம். இவற்றைக் கொடுமுடி, திருச்சேறை பருத்தியூர், ராசிபுரம், திருப்பழனம், திருவேள்விக்குடி ஆகிய கோயில்களில் காணலாம். பல்லவனேசுவரம், கோனேரி ராசபுரம், தண்டந் தோட்டம், கீழப்பழுவூர், திருக்கரவாசல், திருவெண்காடு, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் ரிஷப வாகன மூர்த்தி உருவங்கள் அமைக்கப்பட்டன. பல்லவர்கள் கல்லிலே சோமாஸ்கந்தர் அதாவது சிவனும், பார்வதியும் அவர்களுக்கு நடுவே குழந்தை கந்தனும் அமர்ந்திருக்கும் உருவமைப்பை நிலைச் சிற்பங்களாக அமைத்தனர். |
||||
|
||||
திரிபுராந்தகரது உருவம் |
||||
சோழர்கள் இதனைச் செப்புத் திருமேனியாகச் சொரக்குடி, சிவபுரம், வெல்லூர் சிறுவரை, குன்னாண்டார் கோயில் போன்ற இடங்களில் இடம் பெறச் செய்தனர். தென்னிந்தியாவிற்கே உரிய தட்சிணா மூர்த்தி சிற்பம் பல்லவர்
காலத்தில் கைலாசநாதர் கோயிலிலேயே கற்சிலையாக இடம் பெறத் தொடங்கியது. சோழர்
கோயில்கள் அனைத்திலும் தெற்குப்புறத்
தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி வைக்கப்பட்டார். சோழர் கோயில்கள் சிலவற்றில்
வீணை வாசிக்கும் நிலையில் அமர்ந்தோ நின்று கொண்டிருப்பது போன்றோ தட்சிணாமூர்த்தி
இடம் பெறலானார். வீணாதர
தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படும் இவரது செப்புத்
திருமேனியும் சில கோயில்களில் செய்து வைக்கப் பெற்றது. இதனைத் திருப்புறம்பியம்,
திருநாமநல்லூர், மேலப் பெரும் பள்ளம் ஆகிய இடங்களில் காணலாம். மேலப்
பெரும்பள்ளம் வீணாதர தட்சிணாமூர்த்தி
நேர்த்தியான அமைப்புடையதாகும். இக்கோயிலிலுள்ள இம்மூர்த்தி பற்றி அப்பர்
சுவாமிகள் முன்னமே, தம் தேவாரத்தில் (6829) பாடியுள்ளார். |
||||
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள
கந்தனின் செப்புப் படிமம் முதலாம் இராசேந்திரனின் காலத்ததாகும். போர்த் தளபதியாக
இருக்கும் இக் கடவுளது கரங்களில் வாள், கேடயம், அவரது கொடியைக் காட்டும்
சேவல் ஆகியவை உள்ளன. இதன் அழகு காண்போரைக் கவரும் தன்மை உடையதாகும். கீழையூரிலும்
ஒரு சுப்பிரமணியர் படிமம் உள்ளது. இவை தவிரத் துர்க்கை, நடமாடும் காளி,
மகிஷ மர்த்தினி, காளிங்க நர்த்தன கிருஷ்ணர், வேணுகோபாலர், மகாலட்சுமி, பார்வதி
போகேசுவரி (தனி அம்மன்), கிராத மூர்த்தி, சந்திரசேகரர், பிரம்ம சாஸ்தா, சண்டேசர்,
மகேசுவரி, கணபதி, பைரவர், யோக நரசிம்மர், சூரியன் போன்ற இறையுருவங்களும்
சோழர் காலத்தில் வடிக்கப்பட்டன. நாயன்மார்களான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் ஆகியோருக்குச் செப்புப் படிமங்கள் செய்யப்பட்டன.
குலோத்துங்க சோழன் மற்றும் அரசமா தேவிக்கும் செப்புத் திருமேனி செய்விக்கப்பட்டது.
சக்கரம் என்ற விஷ்ணுவின் ஆயுதமும், சிவனின் திரிசூலமும் செம்பில் வார்க்கப்பட்டன.
|
||||
பௌத்த சமண சமயத்தாருக்கும் செப்புத் திருமேனி செய்விக்கப் பட்டது. பல்லவர் காலத்தைச் சேர்ந்த அவலோகிதேசுவரர் திருமேனி ஒன்று இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. இதனைச் சோழர் காலத்துத் தொடக்கத்தில் அமைக்கப் பட்டதெனவும் கருதுகின்றனர். கி.பி.1000 இல் வடிக்கப்பட்ட சோழர் காலத்துப் புத்தர் திருமேனி ஒன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இங்கு நின்ற நிலையில் அபயம் காட்டியிருக்கும் புத்தர் உருவம் கி.பி. ஒன்பது - பத்தாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாகும். சோழர்களுடைய படைப்பான இவ்வுருவம் நாகப்பட்டினத்தில் கிடைத்துள்ளது. மங்களூர் மாவட்டத்தில் 11ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சோழர்களது புத்தர் உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் வியாக்யான முத்திரை காட்டுகின்றார். இங்குக் கிடைத்துள்ள அவலோகிதேசுவரர் உருவம் திருவொற்றியூரில் உள்ள லகுலீசரின் உருவத்தை ஒத்துள்ளது. |
||||
|
||||
புத்தர் உருவம் |
||||
3.2.3 பாண்டியர் காலம் |
||||
பல்லவர், சோழர்களைப் போன்றே பாண்டியரும் அவர்களுக்குப் பின் வந்தோரும் செப்புத் திருமேனிகளைப் படைத்துள்ளனர். ஆனால் அவை அழகில் பின்தங்கியவை என்றே பலரும் கருதுகின்றனர். பாண்டியர்களது காலத்தில், பாண்டிய மன்னன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிவ பெருமான் கால்மாறி ஆடினார் என அமைந்துள்ள நடராசர் படிமம் ஒன்று மதுரை மாவட்டம் பொருப்பு மேட்டுப் பட்டியில் கிடைத்துள்ளது. தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இப்படிமம் கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். எப்போதும் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் சிவ பெருமான், இச்செப்புத் திருமேனியில் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுகின்றார். இத்தகைய படிமம் ஒன்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில், சுவாமி சன்னதியில், வெள்ளியம்பலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சற்றுக் காலத்தால் பிந்தியதாகும். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்துச் செப்புத் திருமேனிகள் திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. தொடக்கக் காலப் பாண்டியர் செப்புத் திருமேனிகளில் பல்லவர், சோழர்களின் சாயல்களைக் காணலாம். |
||||
|
||||
கால்மாறி (இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி) ஆடும் நடராசர் |
||||
பாண்டியர்களின் செப்புத் திருமேனிகள்
தலையில் உயர்ந்த மகுடமும் காதில் மகர ஓலைக் குழைகளும் தரித்துக் காணப்படுகின்றன.
நடராசர் சிற்பங்கள் தலையில் விரிசடை இன்றி நீண்ட சடை மகுடத்துடனும், கொக்கிறகுக்
கொண்டையுடனும் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய உதாரணமாக இராமேசுவரத்தில்
உள்ள நடராசர் திருமேனியைக் குறிப்பிடலாம். கி.பி. 10ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த நடராசர் திருமேனி ஒன்று திருவாடானைக்கு அருகிலுள்ள
சுந்தர பாண்டியப் பட்டினத்தில் கிடைத்துள்ளது. ஏறத்தாழ இதே காலத்தினைச்
சேர்ந்த நடராசர் திருமேனி ஒன்று பழனி பெருவுடையார் கோயிலில் காணப்படுகிறது.
குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயிலில் அழகான நடராசர் படிமம்
உள்ளது. இவரது தலையில் உள்ள சடைமுடி தாழ்சடையாகப் பின் தோள்களில் விழுந்து
சரிந்து செல்லும் பாங்கு காண்போரைக் கவர்வதாகும். |
||||
கி.பி. 12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
நடராசர் மற்றும் சிவகாமி திருமேனிகள் காரைக்குடிக்கு அருகில் உள்ள இலுப்பைக்குடி
தான்தோன்றீசுவரர் கோயிலில் கிடைத்துள்ளன. புதுக்கோட்டை
மாவட்டம் கோட்டூர் சோழீசுவரமுடையார் கோயிலில் நடராசர், சிவகாமி படிமங்கள்
உள்ளன. |
||||
இவை 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் சோழர் கலையின் சாயலைக் காணமுடிகிறது. ஏறத்தாழ இதே காலத்தைச் சேர்ந்த நடராசர், சிவகாமி படிமங்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருங்குள நாதசுவாமி கோயிலிலும், வராப்பூர் கோயிலிலும் கிடைத்துள்ளன. வராப்பூர் நடராசரின் தலையை அலங்கரிக்கும் மகுடம் வனப்பு மிக்க வேலைப்பாடு உடையதாகும். இதற்குச் சற்றுப் பிந்திய நடராசர் படிமம் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சாலை வில்வ வனேசுவரர் கோயிலில் காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் கீரனூரிலும், துர்வாச புரத்திலும் இதே காலத்தைச் சேர்ந்த நடராசர். சிவகாமி படிமங்கள் உள்ளன. அண்மையில் துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில் கிணற்றில் தூர் வாரும்போது சிவகாமி, நடராசர், நர்த்தனமாடும் ஞானசம்பந்தர் ஆகியோரின் செப்புப் படிமங்கள் கண்டெடுக்கப் பட்டன. இங்குள்ள நடராசர் சிற்பம் உயர்ந்த சடைமகுடத்தைக் கொண்டுள்ளது. இரணியூரில் உள்ள ஆட்கொண்ட நாதர் கோயிலில் உள்ள நடராசரின் நெற்றியில் மூன்றாவது கண் அழகாக வைக்கப் பட்டுள்ளது. இச்சிற்பத்தில் இறைவனின் பக்கத்தில் முயலகனுக்குப் பின்புறம் உள்ள ஆடும் அரவம் அப்பெருமானின் வலது திருவடி முழங்காலின் கீழ் சாய்ந்த வண்ணம் காட்டப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி கண்ணீசுவர முடையார் கோயிலின் வளாகத்தில் புதையலாகக் கிடைத்த நடராசர், சிவகாமி, சோமாஸ்கந்தர், தனியம்மன், சந்திரசேகரர் ஆகியோர் படிமங்கள் கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இவற்றின் காலத்தைத் தெளிவாக்கும் வகையில், இச்சிற்பங்களில் நீண்ட உடலமைப்பும், உயரமான மகுடமும், இளநகை ததும்பும் முக வனப்பும், கனமான ஆடையும், அதிகமான அணிகலன்களும், முட்டி எலும்புகள் தெரிவதும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் பலவற்றில் திருவாசி (பிரபா மண்டலம்) இணைந்திருக்கின்றது. முயலகன் கையிலிருக்கும் அரவம் தலை நிமிர்ந்து இறைவனின் ஆட்டத்தைக் கண்டு களிப்பது போலவும் காணப்படுகின்றது. |
||||
|
||||
பிறை சூடிய
சந்திரசேகர மூர்த்தியின் செப்புத் திருமேனிகள் பிள்ளையார் பட்டி, திருநெல்வேலி,
பாபநாசம், தேவதானம், மதுரை, வீரபாண்டி, கோவிலூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.
பார்வதியும், சந்திரசேகரரும் ஒரே பீடத்தில் நின்றுள்ளது போல் அமைக்கப்பட்ட
படிமங்கள் உமா சகித சந்திரசேகர மூர்த்தி என்றும், இவ்வாறு அமைந்ததோடு
சிவன் பார்வதியின் இடையைத் தழுவிய நிலையில் அமைக்கப்படும் உருவங்கள் உமை
தழுவிய சந்திரசேகரர் எனவும் அழைக்கப்படுகின்றன. முன்னதற்குக் காரைக்குடிக்கு
அருகில் உள்ள இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் கோயில் படிமத்தையும், பின்னதற்குத்
திருவரங்குளம் கோயில் சிற்பத்தையும் கூறலாம். இவற்றைப் பிரதோஷ நாயகர்
படிமங்கள் என அழைப்பது மரபு. |
||||
சிவபெருமானும்
பார்வதியும் அவர்களுக்கு நடுவே குழந்தை கந்தனும் அமர்ந்துள்ளது போன்ற அமைப்புடையது
சோமாஸ் கந்தர் படிமம் ஆகும். பல்லவர் காலத்தில் பிரபலமாக விளங்கிய
இச்சிற்பம், அவர்களது சம காலத்துப் பாண்டியர்களால் அமைக்கப்பட்ட திருப்பரங்குன்றம்
குடை வரைக் கோயிலில் அமைக்கப் பட்டது. இதுபோன்றே செப்புத் திருமேனிகளிலும்
இந்த அமைப்பு இடம் பெறலாயிற்று. இதனை விராச்சிலை, சூரக்குடி, மதுரை, பேரையூர்,
வீரபாண்டி, கங்கை கொண்டான் ஆகிய இடங்களில் காணலாம். இவற்றில் விராச்சிலையிலும்
சூரக்குடியிலும் கிடைத்தவை பத்தாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவையாகும். வீரபாண்டியைத் தவிர்த்த ஏனையவை பன்னிரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தனவாகும். |
||||
பிரபஞ்சத்தின் குருவான தட்சிணா மூர்த்தி சிற்பமானது தென்னகத்தில் பிரபலமான ஒன்றாகும். இவர் வீணை வாசிப்பது போன்று அமைந்துள்ள சிற்பம் வீணாதரர் சிற்பம் எனப்படுகிறது எனக் கண்டோம். பாண்டியர் காலத்தில் தெக்காத்தூர், இலுப்பைக்குடி, கோயிலூர், உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் செய்து வைக்கப் பெற்ற வீணாதரர் வடிவங்கள் சிறப்பானவையும் அழகு வாய்ந்தவையும் ஆகும். இவற்றில் எதிலுமே கைகளில் வீணை வைக்கப் படவில்லை. வீணையை ஏந்தும் பாவனைகள் கைகளில் முத்திரைகளாக அமைக்கப் பட்டுள்ளன. பாண்டியர் காலத்தில் வீணாதரர் தவிரத் தட்சிணா மூர்த்தியின் பிற வடிவங்கள் செம்பில் வார்க்கப் படவில்லை. தவிர, சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர் உருவமும், தென்காசி காசி விசுவநாதர் கோயிலிலுள்ள கங்காள மூர்த்தி படிமமும், திருப்பத்தூர் திருத்தளி நாதர் கோயிலிலுள்ள சட்டை நாதர் உருவமும் பாண்டியர்களின் படைப்பேயாகும். |
||||
|
||||
பைரவர் உருவம் |
||||
சிவபெருமானின் பல்வேறு உருவமைப்புகள்
மட்டுமன்றி, சைவ நாயன்மார்களுக்கான செப்புப் படிமங்களும்
இக்காலத்தில் செய்விக்கப்பட்டன. இலுப்பைக் குடியிலும் வீரபாண்டியிலும்
சண்டிகேசுவரர் படிமங்கள் செய்விக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் சேரன் மாதேவியில் அம்ம நாத சுவாமி கோயிலில்
அதிகார நந்தியின் படிமம் அமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சி சந்தரேசுவரர்
கோயிலில் உழவாரப் படையைத் தோளில் சாய்த்துக் கொண்டு உள்ள அப்பரது படிமம்
உள்ளது. இலுப்பைக்குடி, பேரையூர் ஆகிய இடங்களில் திருஞான சம்பந்தர் படிமம்
செய்விக்கப்பட்டது. சுந்தரருக்கும் அவரது மனைவியரில் ஒருவரான பரவை நாச்சியாருக்கும்
இலுப்பைக் குடியில் படிமம் அமைக்கப்பட்டது. திருவரங்குளம், பேரையூர், திருநெல்வேலி,
திருவாதவூர், அரண்மனைச் சிறுவயல், ஆத்தூர், மதுரை, திருப்பத்தூர், வடவம்பட்டி,
கானாடு காத்தான், கண்டதேவிக் கோட்டை ஆகிய இடங்களில் மாணிக்க வாசகரின்
செப்புப் படிமம் செய்விக்கப் பெற்றது. குற்றாலம், ஆத்தூர் ஆகிய ஊர்களில்
காரைக்காலம்மையாரின் செப்புப் படிமம் உள்ளது. |
||||
சைவத் தொடர்பான படிமங்கள் போன்றே விஷ்ணுவின் பல்வேறு அவதாரச் சிறப்பினைக் காட்டும் செப்புப் படிமங்களும் பாண்டியர் காலத்தில் அமைக்கப் பட்டன. திருமோகூர் அழகர் கோயில், திருத்தங்கல், திருமயம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருவில்லிப்புத்தூர், நான்குனேரி, வானவன் மாதேவி, சேரன் மாதேவி, கங்கை கொண்டான், ஆத்தூர், பழனி, திருக்கோளுர், மதுரை, இராமேசுவரம் ஆகிய இடங்களில் இவர்கள் காலத்து வனப்பு மிகு வைணவப் படிமங்கள் உள்ளன. இராமர், சீதை, இலக்குவன், அனுமன் ஆகியோர் கொண்ட இராமர் குழுப் படிமங்கள் திருப்பத்தூர், ஆத்தூர், சேரன்மாதேவி போன்ற இடங்களில் செய்விக்கப்பட்டன. வெண்ணெய் உருண்டையைக் கையில் ஏந்தி ஆடும் கண்ணன் (கிருஷ்ணன்) செப்புத் திருமேனிகள் கங்கை கொண்டான், சேரன் மாதேவி ஆகிய ஊர்களில் வடிக்கப்பட்டன. சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சுகாசனத்தில் அமர்ந்துள்ள விஷ்ணு படிமம் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது சேரன் மாதேவி கோயிலில் அமைக்கப் பட்டதாகும். அழகர் கோயிலில் நின்ற நிலையில் உள்ள சுந்தர ராசப் பெருமாளின் படிமம் பெயருக்கு ஏற்ற வனப்புடையதாகும். திருக்கோட்டியூரில் பன்னிரண்டு ஆழ்வார்களின் செப்புத் திருமேனிகள் உள்ளன. இவை 13-14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. |
||||
சிவகங்கை மாவட்டம் கீழவளவுக்கு அருகில் சுத்தமல்லி என்ற ஊரில் சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரரின் செப்புத் திருமேனி ஒன்று கிடைத்துள்ளது. இராமேசுவரத்திற்கு அருகில் அரியாங்குண்டு என்ற இடத்தில் பௌத்த சமயத் தொடர்பான இரண்டு சிறிய படிமங்கள் கிடைத்துள்ளன. |
||||
3.2.4 விசயநகர் - நாயக்கர் காலம் |
||||
விசயநகரப் பேரரசர்கள் காலத்துச் செப்புத் திருமேனிகள் தமிழகக் கோயில்களில் கிடைக்கின்றன. நாகை மாவட்டம் திருக்கடவூரில் சிவபெருமான் கால சம்ஹாரம் செய்ததாகக் கதை ஒன்று சொல்லப்பட்டு வருகின்றது. இதற்கு ஏற்றாற் போல் விசய நகர ஆட்சிக் காலத்தில் பிரமாதமான கால சம்ஹார மூர்த்தியின் செப்புப் படிமம் ஒன்று அமைக்கப்பட்டது. திருப்பதியில் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது தேவியரின் உயரமான படிமங்கள் இருப்பது போன்று காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில் அரசர், அரசியர் செப்புப் படிமங்கள் வணங்கிய நிலையில் அமைக்கப் பட்டுள்ளன. நாயக்கர் காலத்தில் நடராசர் சிற்பங்கள் அமைக்கப் பட்டதோடு, அதற்காகப் பிரதானக் கோயிலுக்குள் தனிச் சன்னதியும் அமைக்கப்பட்டது. வேலூர் என்ற இடத்தில் கி.பி.115இல் செய்விக்கப் பட்ட நடராசர் திருமேனி சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. திருவரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ்கந்தர் திருமேனி இக்காலத்தில் செய்விக்கப் பட்டபோதும் இதில் சோழர் கலையின் வேலைப்பாடுகள் பின்பற்றப் பட்டன. இராமன், இலக்குவன், சீதை, அனுமன் செப்புத் திருமேனிகள் பல கோயில்களில் செய்து வைக்கப் பெற்றன. கிருஷ்ணரது உருவங்கள் செய்விக்கப் பட்டன. பல கோயில்களில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோருக்குச் செப்புத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டன. நாயக்கர் காலத்துக் காரைக்கால் அம்மையாரின் படிமம் ஒன்று கான்சாஸ் நகரத்தில் நெல்சன்- அட்கின்ஸ் கலைக்கூடத்தில் உள்ளது. நாகப்பட்டினத்தில் புத்தர் மற்றும் போதி சத்துவர் படிமங்கள் செய்விக்கப் பட்டன. நாயக்க மன்னர்களின் படிமங்களும் செய்யப்பட்டன. தஞ்சைக் கலைக் கூடத்தில் தஞ்சையை ஆண்ட விசய ராகவ நாயக்கரின் உருவச் சிலை உள்ளது. |
||||
|
||||
சோமாஸ்கந்தர் திருமேனி |