3.6 மண் சிற்பங்கள் |
சுடுமண்
சிற்பங்கள் இந்தியாவில் தொன்று தொட்டுச் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும்
சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டன. இன்றும் அவை வழக்கிலிருக்கின்றன. சுதைச்
சிற்பங்கள் செய்து அவற்றிற்கு வண்ணம் தீட்டுவதும் தமிழகத்து மரபுகளில்
ஒன்றாகும். சுதைச் சிற்பங்கள் இரண்டு வகையாகச் செய்யப்படுகின்றன. ஒன்று
கோயில்களிலும், கோபுரங்களிலும் நிரந்தரமாகச்
செய்து வைப்பது. மற்றொன்று
திருவிழாக்களுக்காகத் தற்காலிகமாகச் செய்து திருவிழா முடிந்ததும் உடைத்தோ
அல்லது நீரில் கரைத்தோ விடுவது என்று வகைப்படுத்திச் செய்யப் படுவதாகும்.
|
3.6.1 சுடுமண் சிற்பங்கள் |
களிமண்ணால் சிற்பம் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்தால் அது திடப்பட்டுவிடும். அவ்வாறு சுட்ட மண் சிற்பம் சுடுமண் சிற்பம் எனப்படுகிறது. மண்பாண்டங்களும் இம்முறையிலேயே செய்யப் படுகின்றன. இவ்வகையில் செய்யப்படும் சிற்பங்களும், பாண்டங்களும் எளிதில் தேயாது. துரு ஏறாது. அவற்றில் பல்வகை வண்ணங்களைப் பூசுவர். |
|
சுடுமண் சிற்பம் |
|
தமிழகத்தில்
தொல்லியல் துறையினரால் பல இடங்களில் அகழ்வாய்வு செய்யப் பட்டது. அவற்றில்
கண்டுபிடிக்கப் பட்ட சுடுமண் பொருட்கள் பலவாகும். மனித உருவங்கள், விலங்குகளின்
உருவங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், இலிங்கங்கள், காதணிகள்,
நூற்புக் கருவிகள், வளையங்கள், மட்பாண்டங்கள்,
சமையற் கருவிகள், உருளைகள் போன்றவை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இவற்றில்
கலை நுட்பங்களும் காணப்படுகின்றன. இவை கைத்திறனால் செய்யப் பட்டவையாக
உள்ளன. திருக்காம் புலியூரில் கண்டெடுக்கப் பட்ட ஒரு சிலையின்
சிகை அலங்காரம் காந்தாரக் கலையை
நினைவூட்டுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகில் கிடைத்துள்ள புத்தரது சுடுமண்
சிற்பத்திலும் இதே போன்று சுருள்முடி அமைப்புக் காணப் படுகின்றது. இது
ஏறத் தாழ 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. |
அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம் பட்டி என்ற இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்குக் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கன் என்னும் சிறு தெய்வத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே அகழ்வாய்வில் சுடுமண் பொம்மைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளது இவ்வூரில்தான். தர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது. 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களும் கோவை மாவட்டத்தில் கிடைத்துள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் கொந்தகை என்ற இடத்தில் 14 - 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் உள்ளன. தஞ்சாவூருக்கு அருகில் இராஜாளி விடுதி என்ற இடத்தில் நாயக்கர் கால மண்பாவைகள் கிடைத்துள்ளன. மிக அண்மையில் தமிழகத் தொல்லியல் துறையினரால் திருத்தங்கலில் நடைபெற்ற அகழ்வாய்வில் ஸ்ரீவத்ஸம் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் செங்கல் கிடைத்துள்ளது. இது சங்க காலத்தினைச் சேர்ந்ததாகும். வடஆர்க்காடு மாவட்டம் பையம் பள்ளியில் சுடுமண் பொம்மைகளும், சுடுமண் விளக்குகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. திருச்சிக்கு அருகில் உறையூரில் நடந்த அகழ்வாய்வில்
உடைந்த சுடுமண் பொம்மைகள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை
மனித உருவங்களாகும், காஞ்சிபுரம் சங்கர மடத்தில்
சுடுமண் பொம்மைகள் மற்றும் சுடுமண்ணாலான யானைத்
தலை ஆகியன உள்ளன. தர்மபுரி மாவட்டம் குட்டூரில்
நடத்திய அகழ்வாய்வில் சுடு
மண்ணாலான விலங்குகளின் உருவங்கள்,
பெண்ணின் தலை, பகடைக் காய்கள், புகைக் குழல்கள்
போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
காவிரிப் பூம்பட்டின அகழ்வாய்வில் தலைப்பாகையுடன்
கூடிய மனித உருவங்கள் கிடைத்துள்ளன. |
|
தமிழகத்துக்
கிராமங்களில் இன்றும் சுடுமண் இறை உருவங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன.
பொதுவாக அய்யனார், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி,
பைரவர், மதுரை வீரன் கோயில்களில் சுடுமண் பொம்மைகள்
ஏராளமாக வைக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் திருவிழாக் காலத்தில் மட்டும்
இறையுருவங்கள் செய்து வைத்து வணங்குவர். திருவிழா
முடிந்ததும் அவ்வுருவங்களை எடுத்துச் சென்று உடைத்திடுவர். |
|
இந்தியா முழுவதுமே சுடுமண் குதிரை உருவம் பிரபலமானதாகும். தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கிராமங்களிலும் இதனைக் காணலாம். தலைவர்கள் அல்லது நாயகர்கள் கடவுள் தன்மையை அடைந்தனர் என மக்கள் நம்பினர். அவர்கள் ஏறிச் சென்ற குதிரையும் புனிதத் தன்மை பெற்றது. யாகங்களின் சின்னமாகவும் குதிரை கருதப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோயில்களில் சுடுமண் குதிரை செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. கடவுளர்களில் அய்யனாருக்குக் குதிரை வாகனம் உண்டு. எனவே அவரே கிராமங்களைக் காப்பவர் என்ற நம்பிக்கை பெருக ஆரம்பித்தது. அய்யனாரது தளபதிகளும் குதிரை மீதமர்ந்து வருவதாகக் கருதப்பட்டது. இதன் விளைவாகக் கிராமங்களின் வெளியே நீர்நிலைகள் இருக்கின்ற இடங்களில் அல்லது குளக்கரைகளில் அய்யனார் கோயில்கள் அமைக்கும் மரபு தோன்றியது. அய்யனாரும் அவரது தளபதிகளும் கிராமங்களை மட்டுமின்றி அக்கிராம நீர் நிலைகளையும் காக்கின்றனர். இது நீரின் இன்றியமையாமையைக் குறிக்கின்றது. |
|
அய்யனார் குதிரை |
புதுக்கோட்டை
மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் பதினைந்தடி
உயரமான குதிரை அமைக்கப்
பட்டுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிழக்கே சிறுநந்தூர் என்ற இடத்தில்
இரண்டு உயரமான, சிவப்பு வெள்ளை வண்ணம் பூசப்பட்ட குதிரைகள் உள்ளன. குமாரமங்கலம்
என்ற இடத்தில் அச்சுறுத்தும் பாணியில் ஒரு குதிரை உள்ளது.
திருப்பாச்சேத்தி கண்மாய்க்
கரையில் பிரமாண்டமான குதிரையில் அய்யனார் அமர்ந்துள்ளார். மதுரை கோச்சடையில்
இரண்டு பெரிய குதிரைகளில் அய்யனாரும், அவரது
தளபதியும் அமர்ந்துள்ளனர். குதிரை மீது மட்டுமின்றி அய்யனார் தனியாக
மேடை மீது அமர்ந்திருக்கும் பெரிய சிற்பங்களும், சுடுமண்ணில் அமைக்கப்பட்டன.
இதற்கு உதாரணமாகப் பாண்டிச்சேரிக் கோயிலைக்
கூறலாம். திருச்செந்தூருக்கு அருகில்
அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் உள்ளது. அய்யனார் அன்றி அம்மன் (காளி)
சிலை குதிரைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்படும்
வழக்கமும் சில இடங்களில் உண்டு. இதற்கு உதாரணமாக மதுரைக்கு அருகில் மடப்புரம்
காளியம்மன் கோயிலைக் குறிப்பிடலாம். |
|
சில ஊர்களில் சிவபெருமானின் பைரவ உருவமும் சுடுமண்ணால் செய்து வைக்கப் பட்டுள்ளது. பைரவர் கிராமக் காவல் தெய்வமாகவே கருதப்படுகிறார். திண்டிவனத்திற்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் அய்யனார் கோயில் ஒன்றுள்ளது. அதற்கருகில் பைரவர் உருவம் வைக்கப் பட்டுள்ளது. இது சுடுமண்ணாலான மிகப் பெரிய உருவமாகும். இரண்டு நாய்கள் அருகில் வைக்கப் பட்டுள்ளன. விஷ்ணுவின் நெற்றியில் குத்தி, பிரம்மாவின் ஒருதலையை வெட்டி, அதனை விஷ்ணுவின் நெற்றியிலிருந்து வடியும் இரத்தத்தைக் குடிக்க வைத்தவர் பைரவர் என்பர். எனவே இங்கு இரத்தப் பலி நடக்கிறது. |
|
பைரவர் உருவம் |
|
இது கிராம
தேவதையாகும். பல ஊர்களில் இவருக்குக் கோயில் கட்டப் பட்டுள்ளது. இவரது
உருவம் சுடுமண்ணால் செய்யப் படுவது வழக்கம்.
தஞ்சாவூரில் குதிரை மீதமர்ந்துள்ள மதுரை
வீரன் சிலை உள்ளது. |
|
சகோதரிகள், தாய்மார்கள் என்றெல்லாம்
வர்ணிக்கப்படும் கன்னிமார்களுடன் இரண்டு ஆண் கடவுளரும் செய்து வைக்கப்படுவது
மரபு. அவர்கள் பொதுவாக சப்த கன்னிகள் என்றும்
ஆகாச கன்னிகள் என்றும் கன்னிமார்கள் என்றும்
அழைக்கப்படுவர். இவர்கள் நீர்நிலைகளின் கடவுளராவர். எனவே,
குளக்கரைகளில் அமைக்கப்படுவர். மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் தென்கரையில்
உள்ள விரகனூரில் இக்கன்னிமார்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன.
இக்கன்னிமார்களே பிற்காலத்தில் கோயில்களில் சப்த மாதர்கள் என்ற
பெயரில் இடம் பெற்றனர். கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினத்தில்
மீனாட்சி கோயில் உள்ளது. அங்கு சப்த கன்னிகளின் சுடுமண் சிலைகள்
உள்ளன. வடஆர்க்காடு மாவட்டத்தில் இக்கன்னிகளின் சிலைகள் கிடைக்கின்றன.
|
|
தமிழ்நாட்டுக்
கிராம தேவதைகளில் ஒன்று
மாரியம்மன் ஆகும். இது அம்மை, காலரா, காய்ச்சல் போன்ற வேனில்
காலத்து நோய்களைத் தீர்க்கும் தாய்த் தெய்வமாக நம்பப்படுகிறது. இத்தேவியின்
அருளைப் பெற ஆண்டு தோறும் சித்திரை - வைகாசி மாதங்களில் கிராமங்களில்
திருவிழாக் கொண்டாடுவர். மட்பாண்டஞ் செய்வோர் இத்தேவியின் உருவங்களைச்
சுடுமண்ணால் செய்து கொடுப்பர். இத்தெய்வம் கிராம தேவதை என்று போற்றப்
படுகிறது. திருவிழாக் காலங்களில் மிருக பலி நடைபெறும். இது போன்றே காளியம்மன்,
முத்தாலம்மன் திருவிழாக்களும் கிராமங்களில் நடைபெறும். திருவிழா
முடிந்ததும் சுடுமண் உருவங்கள் அகற்றப்படும். |
|
திருநெல்வேலி
மாவட்டப் பகுதியில் பூத வழிபாடு அதிகம் உள்ளது. பெருஞ்சதுக்கத்துப் பூதம்
என்று இலக்கியத்திலேயே சொல்லப் பட்டிருக்கின்றது. பூதங்களைக் காவல் தெய்வங்களாகவும்,
சத்திய வாக்குகளைக் காக்கும் கடவுளாகவும் வணங்குவர். இப்பூதங்களின் உருவங்கள்
சுடு மண்ணால் செய்யப் பட்டவையாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஆறுமுக
மங்கலம் என்ற ஊரில் பூத வழிபாடும் மாடன் வழிபாடும்
இன்றும் சிறப்பாக நடைபெறுன்றன. ஈரோடு மாவட்டத்தில் அண்ணன்மார்
கோயில்கள் உள்ளன. அவற்றிலும் சுடுமண் சிற்பங்கள் வைக்கப் பட்டுள்ளன.
தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும்
கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண்
சிற்பங்கள் உள்ளன. |
|
அய்யனார்
கோயில்களில் துணைக் கோயிலாகவும் மற்றும் தனிக் கோயிலாகவும் கருப்பணசாமி
வழிபாடு நடந்து வருகிறது. இவர் கிராம தேவதைகளின் காவல் தெய்வம் என்பர்.
இவரது சிற்பங்களும் பல இடங்களில் சுடுமண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்
பட்டுள்ளன. இதனை மதுரைக்கு அருகே கீழக் குயில்குடியிலும்,
செக்கானூரணியிலும், கோச்சடையிலும், சங்கராபுரத்திலும்
பிற இடங்களிலும் காணலாம். |
|
பல கிராமக்
கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள்
செய்து வைப்பது மரபு. குதிரை, யானை போன்றவை பல கோயில்களில் இடம் பெற்றுள்ளன.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் சுடுமண்ணால் தொட்டிலும் குழந்தையும் செய்து
வைப்பர். கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து
வைப்பர். இதனை மடப்புரம், திருப்பாச்சேத்தி, கோச்சடை போன்ற
இடங்களில் காணலாம். சேலத்திற்கு அருகில் சஞ்ச வாடி என்ற இடத்தில்
நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள நாகர் சிற்பங்கள்
பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும்.
இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காண முடிகிறது. |
3.6.2 சுதைச் சிற்பங்கள் |
சுண்ணாம்பால்
உருவாக்கப்பட்ட சுதைச் சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு
முன்பிருந்தே வழக்கிலிருந்தன. பின்னாளில் சுண்ணாம்பிற்குப் பதிலாக சிமெண்ட்
பயன்படுத்தப் பட்டது. மரக் குச்சிகளுக்குப் பதிலாக இரும்புக் கம்பிகள்
பயன்படுத்தப் பட்டன. முற்காலச் சிற்பங்கள் இன்று காணக் கிடைக்கா விட்டாலும்
இலக்கியங்களில் அவை பற்றிய செய்திகள் உள்ளன. பரிபாடலில் (10:43-48)
மதுரையில் இருந்த மாடம் ஒன்றினையும் அதில் இருந்த சிற்பங்களையும் பற்றியும்
விளக்கப் பட்டுள்ளது. |
காவிரிப்
பூம்பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப
உருவங்கள் அமைக்கப் பட்டிருப்பதை, இந்திர விழாவின் போது அந்நகரத்துக்கு
வந்த மக்கள் கண்டு களித்தனராம். இதனை மணிமேகலை, கூறுகிறது.
|
|
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன்
(கி.பி590- 630) காலத்தில் வெட்டப்பட்ட குடைவரைக் கோயில்களில் கல்லினால்
இறையுருவம் செய்யப்படவில்லை. சில கோயில்களில் கருவறைகளில் சுதையாலான
சிற்பமே இருக்கக் காணலாம். அவற்றிற்கு இன்றும் திருமஞ்சன நீராட்டு நடைபெறுவதில்லை.
எண்ணெய்க் காப்பு (தைலக் காப்பு) மட்டுமே நடைபெறும். உற்சவருக்கு மட்டுமே
திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். வைணவர்கள் கோயில் என்று சொன்னாலே திருவரங்கம்தான்
நினைவில் எழும் திருவரங்கத்தில் பச்சை மாமலை போன்றுள்ள இறைவனின் கிடந்த
கோலத் திருமேனி சுதையால் ஆனதாகும். இத்திருமேனி கல்லால் வடிக்கப்பட்டு,
மேற்புறம் சுதையைப் போன்று தோற்றமளிக்கும் நிலையிலே ஒரு வகைக் கலவைப்
பொருளால் பூசப்பட்டது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அதற்குச் சரியான
ஆதாரம் தெரியவில்லை. அவ்விறை வனுக்குத் தைலக் காப்பே சாத்தப் படுகிறது.
|
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம்
சங்கர மடத்துக்கு அருகில் பாண்டவ தூதுப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இங்குள்ள மூலவர் விசுவ ரூபக் காட்சி தரும் கிருஷ்ணராவார். இவ்வுருவம்
சுதையாலானது. 26 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்டது. இங்கு இறைவன்
உடுத்திருக்கும் பஞ்ச கச்சத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கலைத்
திறமையுடன் கூடிய அணிநலம் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். |
அழகர் கோயில் |
மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோயில்,
திருமாலிருஞ் சோலை என்று பரிபாடலிலும் சிலப்பதிகாரத்திலும் புகழப்
பட்டிருக்கும் திருத்தலமாகும். இங்குள்ள மூலவர், தேவியருடன் நின்ற கோலத்தில்
இருக்கும் இவ்வுருவம் சுதையாலானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்
தைலக் காப்பு நடைபெறும். மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் மூன்று
அடுக்குகளில், கீழிருந்து மலோக முறையே அமர்ந்த, நின்ற, கிடந்த நிலையில்
பெருமாள் திருவுருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சுதை உருவங்களாகும். |
சமயபுரம் |
திருச்சிக்கு
அருகில் உள்ள சமயபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கிராம தேவதைகளில்
மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்று மாரியம்மன் ஆகும். மாரியம்மன் கோயில்களில்
பிரசித்தி பெற்ற ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்குள்ள அம்மன்
சிற்பம் சுதையாலானதாகும். இதுபோன்று பெரும் பாலான அம்மன் கோவில்களில்
மூலவர் சிற்பங்கள் சுதையாலானவை ஆகும். |
சீர்காழி |
சிதம்பரத்திற்கு
அருகில் உள்ள சீர்காழி சிவன் கோயிலில் இறைவனது திருக்கோலங்கள் குரு,
இலிங்கம், சங்கமம் ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளன. இக்கோயிலில் அடித்தளத்தில்
உள்ள பிரம்மபுரீசுவரர் இலிங்க அமைப்பு உடையவர், முதல் தளத்தில் உள்ள
தோணியப்பர் குரு அமைப்புடையவர். இரண்டாம் தளத்தில் உள்ள சட்டையப்பர்
உருவம் சங்கம அமைப்புடையது. தோணியப்பரின் உருவம் சுதையுருவமாகும். |
|
கருவறையின்
அடித்தளத்திலிருந்து மேலே உள்ள கலசம் வரையான மொத்தப் பகுதியும் விமானம்
ஆகும். கருவறையின் மேற்பரப்பில் வெளிப் பக்கத்தில் சுதையாலான உருவங்கள்
வைக்கப்பட்டிருக்கின்றன. தொடக்கக் காலக் கோயில்கள் முழுதும் கல்லாலானவை.
பின்பு கருவறையின் பிரஸ்தரப் பகுதி வரை கல்லிலும் அதற்கு மேல் சுதையாலும்
கட்டி அவற்றில் சுதைச் சிற்பங்களையும் வைத்தனர். சில இடங்களில் கல்லாலான
சிற்பங்களின் மீது சுதையும் பூசியுள்ளனர் உதாரணமாக,
இராமேசுவரம் கோயில்
வளாகத்தில் உள்ள பூந்தோட்டத்திற்குள் கி.பி.
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னதிகள் உள்ளன. அவற்றின் மேற்பரப்பில்
கல் சிற்பங்களின் மீது சுதை பூசப் பட்டிருப்பதைக் காணலாம். இராமேசுவரம்
இராமநாத சுவாமி விமானத்தின் மேற்பகுதியில் ஏராளமான சுதைச் சிற்பங்கள்
உள்ளன. இவற்றில் குறிப்பிடத் தக்கவை சண்டேசானுக்கிரஹ மூர்த்தி, விஷ்ணு
அனுக்கிரஹ மூர்த்தி, தட்சிணா மூர்த்தியும் அவரது சீடர்களும், உமா சகித
மூர்த்தி, தேவியருடன் சுப்பிரமணியர், இலட்சுமி கணபதி, நரசிம்மர், சரப
மூர்த்தி, இரண்டு தேவியருடன் அமர்ந்துள்ள யோக நரசிம்மர், திருவிளையாடற்
புராணக்கதையைக் கூறும் சிவன், பார்வதி, நாரை உருவங்கள், இலட்சுமி நாராயணன்
போன்றவற்றைக் காணலாம். இது போன்றே சிவன் கோயில் விமானங்கள் பலவற்றில்
அதிக அளவில் சிவ லீலை தொடர்பான சிற்பங்கள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்
தகுந்ததாகும். |
இராமாயண - மகாபாரதச் சிற்பங்கள் |
மதுரை கூடல் அழகர் கோயில் விமானத்தில்
இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச்
செய்து வைக்கப்பட்டுள்ளன. இதில் இராமர் பட்டாபிடேகம், மிக நேர்த்தியாக
அமைக்கப்பட்டுள்ளது. இராவண வதைக் காட்சியும், கிருஷ்ணர் வஸ்த்ர அபகரண
மூர்த்தியாகக் கோபியரின் ஆடைகளை மரத்தின் மீது எடுத்து வைத்திருக்கும்
காட்சியும் அழகாக வண்ணம் தீட்டி வைக்கப் பட்டுள்ளன. அழகர் கோயில் சோமசந்த
விமானத்தில் தல புராணச் செய்திகளும், அவதாரச் செய்திகளும் சுதை வடிவங்களாகச்
செய்து வைக்கப்பட்டுள்ளன. மோகினி அவதாரக் கதை சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
இவை பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சிற்பங்கள் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயில் விமானத்தில் திருப்பாவை தொடர்பான சிற்பங்களும், விஷ்ணு
அவதாரச் சிற்பங்களும் உள்ளன. |
|
தமிழகத்துக்
கோயில் கோபுரங்கள் அனைத்திலும் உள்ள சிற்பங்கள் சுதையினால் செய்யப் பட்டவையாகும்.
மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் உள்ள கோபுரத்தில் விபீடணனுக்கு
இராமர் பட்டாபிடேகம் செய்யும் காட்சியும், இராமர் பட்டாபிடேகக் காட்சியும்
உள்ளன. கோயிலைக் காண்போர் முதலில் நல்லதைக் காண வேண்டும் என்ற நிலையில்
பட்டாபிடேகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு தளத்தில் இராமாயணக் காட்சிகள்
இடம் பெற்றுள்ளன. மற்றொரு தளத்தில் கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்கள்
செய்து வைக்கப் பட்டுள்ளன. அழகர் கோயிலில் வெளியில் உள்ள பதினெட்டாம்
படி கருப்பசாமி கோபுரம் ஏழு அடுக்குகளைக் கொண்டது. இதில் துவார பாலகர்கள்
ஒவ்வோர் அடுக்கிலும் கீழிருந்து மலோக எட்டுக்
கைகளிலிருந்து இரண்டு கைகள் வரை கொண்ட உருவங்களாக உள்ளனர். மேலே செல்லச்
செல்லச் சிறு உருவங்களாக வருவதால் கைகளின் எண்ணிக்கையும் குறைகிறது.
இதில் இராமாயணச் சிற்பங்களும், முனிவர்கள், அடியவர்கள் மற்றும் பாலியல்
தொடர்பான சிற்பங்களும் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் விஷ்ணு கோயில் கோபுரத்தில்
இராமாயணம், கிருஷ்ணாவதாரம் தொடர்பான சிற்பங்கள் உள்ளன. |
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள வெளிக் கோபுரங்களில் ஆயிரக் கணக்கான சுதை உருவங்களைக் காணலாம். இவற்றில் சிவபுராணம், திருவிளையாடற் புராணம், இலிங்க புராணம், தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகிய கதைத் தொடர்ச்சிகளைக் காண முடிகிறது. இச்சிற்பங்களில் அசுரர்களை வதம் செய்கின்ற காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும் காட்சி மிக நேர்த்தியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. நன்மையும் - தீமையும், பகலும் - இரவும் போல, பாற்கடலில் தோன்றிய அமிர்தமும் ஆலகால விஷமும் தவிர்க்க இயலாதவை என்ற கோட்பாட்டை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரத்தில் முருகன் வரலாறு தொடர்பான சுதைச் சிற்பங்களும், ஆறு படை வீடுகள் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பர நாதர் கோயிலின் விசயநகர் காலத்துக் கோபுரம் ஏராளமான சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. சிதம்பரம் நடராசர் கோயில் கோபுரங்களில் சிவபுராணச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. |
|
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிற்பம் |
|
தமிழ்நாட்டுச்
சிவன் கோயில்கள் பலவற்றிலும் கருவறைக்கு முன்னால் சுதையாலான நந்திகள்
வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் மிகப் பெரிய ஒன்று இராமேசுவரம் இராமநாத
சுவாமி கோயிலில் உள்ளதாகும். ஒரு பக்கம் பார்த்தால் நந்தி போன்றும்,
மற்றொரு பக்கம் பார்த்தால் ஆஞ்சநேயர் போலவும் தோன்றும் இவ்வுருவம்
சுதையால் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் நீளம் பன்னிரண்டு
அடி, அகலம் ஒன்பதடி ஆகும். இராமேசுவரத்தின்
தல புராணக் கதை சிற்ப வடிவத்தில் தனி ஒரு சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளது.
அது இராமலிங்கப் பிரதிட்டை சன்னதி என்று அழைக்கப்படுகிறது. அதில்
உள்ள இராமர், சீதை, சிவலிங்கம், தேவர்கள் ஆகிய அனைவரது உருவங்களும் சுதையால்
செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டவையாகும். திருவிடை மருதூரில்
மகாலிங்கேசுவரர் ஆலயத்தின் உட்புறத்தில் புராண நிகழ்ச்சிகள் சில, சுதைச்
சிற்ப வடிவங்களில் அமைந்துள்ளன. மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்து
மண்டபங்கள் பலவற்றிலும், சிறப்பான வகையில் கலைத்திறன்
மிக்க சுதை வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இவை நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட
சிற்பங்களாகும். |
|
விழாக் காலங்களில் சுடுமண் சிற்பங்கள் செய்து வைக்கப்படுவது போலவே சுதைச் சிற்பங்களும் செய்யப்பட்டன. விழா முடிந்ததும் அச்சிற்பங்கள் நீரில் கரைக்கப்பட்டன. கிராமப் புறங்களில் அய்யனார், மதுரை வீரன், சுடலை மாடன், காளியம்மன், முத்தியாளம்மன் (முத்தாலம்மன்), அங்காளம்மன், மாரியம்மன், எல்லையம்மன் முதலிய தேவதைகளின் கோயில்களில் கல் மற்றும் சுடுமண் சிலைகளேயன்றிச் சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப்படுகின்றன. பல சிற்பங்கள் திறந்த வெளிகளில் செய்து வைக்கப்பட்டுள்ளன. |