5.3 சமணர் கோயில் ஓவியங்கள்

தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப் பட்ட கி.பி.8,9 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சமணர் கோயில்களில் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆர்க்காடு பகுதியிலுள்ள மலையாம் பட்டு என்ற ஊருக்கு    அருகிலுள்ள ஆர்மாமலைக் குன்றில் சமணத் தீர்த்தங்கரர் கோயிலும் சமண முனிவர்கள் தங்கிய பள்ளியும் இருந்துள்ளன. இங்குள்ள சமணர் கோயிலின் குகைத்     தளத்தில் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் இறுதியைச் சார்ந்த வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவற்றில் தளிர்களும் இலைகளும் நிறைந்த கொடிகள், சிறகை விரிக்கும் அழகிய அன்னங்கள்     காட்சியளிக் கின்றன.     சுற்றிலும் பெருஞ் சதுரங்களாகவும், நடுவில் ஒரு சதுரமாகவும் வரையப் பட்ட இவ்வோவியம் சிறப்பு மிக்கதாகும்.இச்சதுரக் கட்டங்களின் உட்பகுதியில் வண்ண உருவங்கள் உள்ளன. அனல் மகுடம் அணிந்து தனது தேவியுடன் வெள்ளாட்டின் மீது அமர்ந்து பறந்து வரும் அக்கினி தேவன், எருமைக் கடாவின் மீது அமர்ந்து வரும் யமன் போன்ற திசைக் காவலர்களின் உருவங்கள் இக்கட்டங்களில் காணப் படுகின்றன. குகைத்தள விதானத்தின் மற்றொரு பகுதியில் தாமரைத் தடாகம் வண்ணவோவியம் வரையப் பட்டுள்ளது. ஆர்மா மலையில் காணப்படும் ஓவியங்களைப் பல்லவர்-கங்கர் கலைப் பாணியில் தோன்றியவை எனக் கருதுகின்றனர்.

சமணர் கால ஓவியங்கள்

5.3.1 சித்தன்ன வாசல்

தமிழ்நாட்டுக் கோயில் ஓவியக் கலையின் சிகரங்களில் ஒன்றாகச் சித்தன்ன வாசல்     ஓவியம் திகழ்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்ன வாசல் குடைவரைக் கோயிலின் அகமண்டபம், புறமண்டபம் ஆகியவற்றில் தொழில் நுட்பம் மிக்க ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியம் மகேந்திர வர்மன் காலத்து ஓவியம் என்று இதன் கலைப் பண்பின் செழுமையையும் இதில் காணும் பல்லவர் பாணியின் தாக்கத்தினையும் கண்டு கூறிவந்தனர். கலைகளை வளர்த்த மகேந்திர பல்லவனே இதனை     உருவாக்கியிருக்க வேண்டும் என்று கலை வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதினர். ஆனால்     அண்மைக்     காலத்தில் இக்குடைவரையில் கண்டறியப்பட்ட ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி.815-862) கல்வெட்டினைக் கொண்டு     இங்குள்ள ஓவியங்கள் பாண்டியர் காலத்தைச் சார்ந்தவை என்பதை உறுதிப் படுத்தியுள்ளனர்.

  • சித்தன்ன வாசல் ஓவியம்
  • மகேந்திர பல்லவன் கல்வெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோடு நின்றுவிடுகின்றன. மகேந்திர வர்மனின் கல்வெட்டு என்று உறுதியாகக் கூறும் கல்வெட்டுகள் காவிரிக்குத் தெற்கே இல்லை. இந்நிலையில் மகேந்திர வர்மன் ஆட்சியில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்ன வாசல் குடைவரைக் கோயிலை மகேந்திர வர்மன் காலத்தது என்று கருவது பொருத்தம் அற்றது. குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு மதுரையைச் சார்ந்த இளங்கௌதமன் என்ற சமண முனிவன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னனின் ஆதரவில் சித்தன்ன வாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுக்கி முகமண்டபத்தை எடுத்ததாகக் கீழ்வருமாறு கல்வெட்டுக் கூறுகிறது:

    திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்

    தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்

    அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்

    வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்

    அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத

    லார்கெழு வைவேல் அவநீப சேகரன்

    சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்

    என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை ...... . . . . . . . . . . . . . .

    பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து

    அண்ணல்வாஇ லறிவர் கோஇன்

    முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .

    அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .

    சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்

    புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக

    மெடுத்தான் முன்

    இதனால் சித்தன்ன வாசலிலுள்ள ஓவியங்கள் பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் காலத்தவை என்று கூறலாம். கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில்     சித்தன்ன வாசலின் குடைவரைக் கோயிலின் அக மண்டபம் (கருவறை) முகமண்டபம் (முன்மண்டபம்) புதுப்பிக்கப் பட்டு அவற்றின் தூண்களிலும் விதானங்களிலும் ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன.     வெண்சுதையின் மீது பொருத்தமான வண்ணங்கள் கொண்டு வரையப் பட்ட, உணர்ச்சியின் வெளிப்பாடாய் இங்குள்ள ஓவியங்கள் உள்ளன. சமண சமயத்தின் உட்பொருளை இவை உணர்த்துகின்றன. கருவறையின் உட்புறம் மேற் கட்டி விரிப்பு போன்று விதானத்தில்     ஓவியம் காணப்படுகின்றது. இவற்றில் அறிவனைச் சுமக்கும் சிங்கம் சுமந்த அரியாசனமும் இயக்கர்களின் உருவங்களும் காணப்படுகின்றன.

  • நாட்டிய நங்கையர் ஓவியம்
  • முன் மண்டபத்தின்     நடுவிலுள்ள     தூண்களில் இக்குடைவரைக்கு வருவோரை வரவேற்கும் முறையில் ஆடல் பாடலுடன் நடனமிடும் இரு நாட்டிய நங்கையரின் எழில் கோலங்கள் வண்ண     ஓவியங்களாகக் காட்சி தருகின்றன.நாட்டிய கரணங்கள் இலக்கணத்திற்கும் பொருத்த மாக இவை அமைந்துள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் சிங்காரக் கொண்டை அலங்காரத்துடன் இடக்கரத்தினை இடப்பக்கத்தில் நீட்டி, வலக்கரத்தினை முன்புறம் மடித்து ஆடும் பெண்ணின் உருவம் உள்ளது. இதனை லதா விருச்சிகம் என்னும் நாட்டியக் கரணம் என்கின்றனர். மற்றொரு தூணில் உள்ள நாட்டிய நங்கையின் உருவம் இடக்கரம் வேழ முத்திரை காட்டி வலக்கரம் ஏதோ ஒரு முத்திரை காட்டி ஆடுகிறது. இப்பெண்ணின் வேலைப்பாடு மிக்க கொண்டை அலங்காரமும் கழுத்து, காதுகளில் அணிந்த ஆபரணங்களும் அக்கால ஓவியக் கலைஞனின் அழகியல்     உணர்வைப்     பறை     சாற்றுகின்றன. இப்பெண்ணின் நாட்டியக் கரணம் புஜங்காஞ்சிதகம் என்ற வகையினைச் சார்ந்தது என்று ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றொரு சாரார் இங்குள்ள ஓவியங்களில் காணப் படும் நாட்டியப் பெண்களின் கரணங்கள் ஊர்த்துவ ஜானுவாகவும் புஜங்கத் ராசமாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

  • தாமரைப் பொய்கை ஓவியம்
  • சித்தன்ன வாசல் ஓவியங்களில் தலைசிறந்து நிற்பது தாமரைப் பொய்கையின் ஓவியமாகும். குடைவரைக் கோயிலின் முகமண்டபத்து விதானத்தில் இவ்வோவியம் காணப்படுகின்றது. இவ்வோவியத்தில் பல்வேறு உயிர்களின் உணர்ச்சிகளையும், ஆரவாரத்திற்கிடையே அமைதியாய் அடங்கி நிற்கும் சமணத் துறவிகளின் உணர்ச்சிகளையும் அற்புதமாக ஓவியக் கலைஞன் வண்ணங்களைக் கொண்டு வடித்துக் காட்டியுள்ளான். இவ்வோவியத்திலுள்ள நீர் நிறைந்த தாமரைத் தடாகம் ஒன்றில் செந்தாமரையும் வெண்டாமரையும் பசுமையான இலைகளுக் கிடையே பூத்துக் குலுங்குகின்றன. இதில் முரட்டுக் குணங்கொண்ட எருமைகளும் பேராற்றல் கொண்ட யானைகளும் இறங்கி, தமது வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. களிறுகள் களிப்புடன் தாமரை மலர்களைத் தண்டுடன் பற்றி இழுக்கின்றன. தாமரைப் பொய்கையில் கூடி வாழும் அன்னப் பறவைகள் சிறகை விரித்து, தமது குஞ்சுகளுடன் பரிதவித்து ஒலியெழுப்புகின்றன. இப்பறவைகளின் அச்சத்தை அவற்றின் இமை விரிந்து விழிகள் பிதுங்கி நிற்கும் கண்கள் புலப்படுத்துகின்றன. நீரில் வாழும் மீன்கள் விலங்குகளின் காலடியில் பட்டு அழிந்து போகாமல் இருக்க அஞ்சித் துள்ளுகின்றன. புறவுலக ஆரவாரங்களைக் கண்டு அஞ்சாமல்     அவற்றைப் பொருட்படுத்தாமல் அமைதியாய்த் தாமரைக் குளத்தில் மூன்று துறவியர் அறிவனுக்குப் படைப்பதற்குத் தாமரை மலர்களைப் பறிக்க இறங்கியுள்ளனர். அரையில் கோவணம் அணிந்த ஒரு துறவியின் தோளில் அல்லியும் தாமரையும் தண்டுடன் காணப்படுகின்றன. மற்றொரு துறவி இடக்கரத்தில் மலர்க் கூடையை வைத்துக் கொண்டு வலக்கரத்தால் தாமரை மலரைத் தண்டோடு பற்றி இழுக்கின்றார். மூன்றாவது துறவி தாமரை மலரைத் தாங்கிக் கொண்டு மற்றொரு கரத்தில் முத்திரை காட்டுகின்றார். மொத்தத்தில் இயற்கையின் நாடகத்தை நன்கு உணர்ந்த ஓர் ஓவியன் அவற்றைக் காண்பவர் கண்கள் மனத்தை விட்டு அகலாத முறையில் ஓவியமாக வடித்துக் காட்டியுள்ளான் என்றே சொல்ல வேண்டும். இத்தாமரைப் பொய்கை ஓவியமும் நாட்டிய மகளிரின் ஆடற் காட்சியும் சமணர்களின் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் அமைந்த காதிகா பூமியைக் குறிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    தாமரைப் பொய்கை ஓவியம்

  • ஓவியத்தின் காரண கர்த்தாக்கள்
  • இத்தகைய     அரிய     ஓவியங்கள் உருவாவதற்குக் காரணமானவர்களின் உருவங்களும் சித்தன்ன வாசல் ஓவியத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. முகமண்டபத் தூண் ஒன்றின் உட்புறத்தில் நவரத்தின மகுடம் அணிந்த அரசனும் அவனது தேவியும் சமணத் துறவி ஒருவருடன் காட்சியளிக்கின்றனர்.     இவர்களில் சமணத் துறவி இவ்வோவியங்கள் உருவாவதற்கும் குடைவரை புதுப்பிக்கப்     படுவதற்கும்     காரணமாக     இருந்த இளங்கௌதமனாக இருக்க வேண்டும். அரசன், அரசியின் உருவங்கள் சமண முனிவர்க்கு ஆதரவளித்த பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மற்றும் அவனது     தேவியின் உருவங்களாக இருக்க வேண்டும். எனவே உலகப் புகழ் பெற்ற சித்தன்ன வாசல் ஓவியங்கள் பாண்டியர் கலைப் படைப்பே எனலாம். இதனை இங்குள்ள பாண்டிய மன்னனின் கல்வெட்டு அடிப்படையில்     உலகிற்கு உணர்த்தியவர்     டி.என்.இராமச்சந்திரன்     ஆவார். இதனைக் கண்டறிந்தவர் பேராசிரியர் லூவோ துப்ராயே ஆவார்.

  • திருமலாபுரம் குடைவரைக் கோயில் ஓவியம்
  • கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் கால வண்ண ஓவியச் சிதைவுகள் திருமலா புரம் குடைவரைக் கோயிலின் முன் மண்டப விதானத்தில் காணப் படுகின்றன. இதில் அன்னம், தாமரை மலர்,வேட்டுவர்,சிம்மாசனம் போன்ற பல உருவங்கள் ஓவியமாகக் காணப் படுகின்றன. இவ்வோவியம் மிகவும்     சிதைவுற்றமையால்     இதன் உட்பொருளை உணர முடியவில்லை. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்பருத்திக் குன்றம் சமணர் கோயிலில் நேமி நாதரின் வரலாறும், சமவ சரணக் காட்சிகளும் இயக்கியர் வரலாறும், ஆதி நாதர் வரலாறும், அங்குள்ள மண்டபங்களின்     விதானங்களில் ஓவியமாக வரையப் பட்டுள்ளன. ஆர்க்காட்டுப் பகுதியிலுள்ள திருமலையிலும் சமணர் சமய     வரலாற்றை விளக்கும்     ஓவியங்கள் காணப் படுகின்றன.

    திருமலாபுரம் குடைவரைக் கோயில் ஓவியம்

    5.3.2 சமணப் பள்ளி ஓவியங்கள்

    மதுரையைச் சூழ்ந்துள்ள குன்றுகளில்     சமணர்கள் தீர்த்தங்கரர் சிற்பங்கள் வடித்து அவற்றை     அறிவன் கோயிலாகக் கருதி வழிபாடு செய்துள்ளனர். ஆனை மலை, அரிட்டா பட்டி, கீழ வளவு போன்ற இடங்களிலுள்ள சமணத் தீர்த்தங்கரர்கள் மீது வண்ண ஓவியங்கள் இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. ஆனை மலையில் தீர்த்தங்கரர் உருவம் ஒன்றிற்கு அருகில் அழகிய தாமரை மலர்கள்,     குத்து     விளக்குகள், வெண்சாமரங்கள்     ஓவியமாகத்     தீட்டப் பட்டுள்ளன. இவ்வோவியங்கள்     கி.பி.ஒன்பதாம்     நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. `எழுத்து நிலை மண்டபம்' எந்த இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது?

    விடை

    2. `சித்திரகாரப் புலி' என்று எந்த மன்னன் அழைக்கப் பட்டான்?

    விடை

    3. காஞ்சி கயிலாச நாதர் கோவில் ஓவியங்கள் யார் காலத்தவை?

    விடை

    4. சித்தன்ன வாசல் ஓவியங்கள் எந்த மன்னன் காலத்தில் வரையப்பட்டன?

    விடை

    5. சித்தன்ன வாசல் தாமரைப் பொய்கை ஓவியம் எதனைக் குறிப்பிடுகிறது?

    விடை