6.5 கலைக்கான அமைப்புகள்

நவீனச் சிற்ப, ஓவியப் படைப்பாளிகள் பெரும்பாலோர் கலைக்காக உருவாக்கப் பட்ட அமைப்புகளில் பயின்றவர்கள் ஆவர். ஆங்கிலேயருடைய     ஆட்சிக்     காலத்திலேயே அத்தகு அமைப்புகள் தமிழகத்தில் தோன்றின. இந்திய விடுதலைக்குப் பின் கி.பி. 1949 ஆம் ஆண்டு முதல் பல கலை நிறுவனங்கள் அரசாங்கத்தால் நிறுவப்பட்டன. சென்னையில் தனியார் கலை அரங்குகள் பல தோன்றின. இந்திய அரசின் கலை அமைப்பான லலித கலா அகாடெமி கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கான தனது வட்டார மையத்தைச் சென்னையில் அமைத்தது.

தமிழக ஓவிய நுண்கலைக் குழு என்னும் மாநில அரசின் அமைப்பு கலையின் முக்கியத்துவத்தை, அதன் வரலாற்றை, நவீன மாற்றங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு நுண்கலை என்னும் இதழை வெளியீட்டு வருகிறது.

தென்மண்டலப் பண்பாட்டு மையம் என்னும் அரசின் அமைப்பு ஓவியப் பயிற்சி அளித்தல் முதலான பணிப் பட்டறைகளை நிகழ்த்தி வருகிறது.

தமிழகக் கலை     வரலாற்றில்     மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது சென்னையில், மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழ மண்டல ஓவியக் கிராமம் என்னும் நிறுவனமாகும். இது 1966 ஆம் ஆண்டில் சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில்     நிறுவப்பட்டது     இவ்வமைப்பு. கே.சி.என். பணிக்கர்      தலைமையில்     சென்னையைச் சேர்ந்த பல்வேறு சிற்ப, ஓவியக் கலை அமைப்புகள் ஒன்று கூடி இந்த அமைப்பை நிறுவின.

சென்னையில் ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்தில் சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரி (Madras School of Arts and Crafts) நிறுவப்பட்டது. பிற்காலத்தில் இது சென்னைக் கலைக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது தமிழகத்தைச் சேர்ந்த நவீனச் சிற்ப, ஓவியக் கலைஞர்கள் பலரும் இக்கல்லூரியில் பயின்றவர்கள் ஆவர்.

நெசவாளர் பயிற்சி மையங்கள் என்னும் அரசு அமைப்பு, பயிற்சி பெற்ற நல்ல ஓவியர்களைக் கொண்டு இந்தியாவின் துணிகளின் வடிவமைப்பில் புதிய மாற்றங்கள் படைத்தது. இவை தவிரப், பயிற்சி பெற்ற கலைஞர்கள் சிலர் தனியார் பயிற்சிப் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர்.