|
3.2 துளைக் கருவி
துளைக் கருவிகள் தொன்மையான இசைக் கருவிகளாகும்.
இதனை இயற்கை தந்த இணையற்ற கருவி என்பர். வண்டு
துளைத்த மூங்கில் மரத்தின் வழியாகக் காற்றுச் செல்கையில்
எழுந்த இனிய ஓசையைக் கேட்டு, இதன் அடிப்படையில்
இவ்விசைக் கருவிகளை உருவாக்கினர். முல்லை நிலத்து
மக்கள் கண்ட கருவியாகக் குழல் உள்ளது.
குழல் கருவிகளாக நாதசுரம், புல்லாங்குழல்,கிளாரினெட்,
ஒத்து, ஆர்மோனியம், கொம்பு, முகவீணை போன்ற கருவிகள் உள்ளன.
குழலினிது என்று திருக்குறள்குறிப்பிடுகின்றது. மிகவும்
இனிமையான கருவி. இதில் ஒன்பது துளைகள் உள்ளன.
எல்லாத் துளைகளையும் திறந்தும் பிறகு ஒவ்வொன்றாக
முறையே விரல்களினால் மூடியும் வாசித்து வரும் பொழுது
ஏழு சுரங்களும் பிறக்கும். உருண்டை வடிவமான குழலின்
மேல் துளையிடுவர். குழலை வங்கியம் என்றும் அழைப்பர்.
குழல் கருவி மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி ஆகியவற்றால்
செய்யப்படுகிறது.மூங்கில் மரத்தால்
செய்யப்பட்ட குழலே அனைத்திலும் சிறந்த ஒன்றாகும்.
இளமையும் மூப்பும் இல்லாமல் நடுவயதில் வளர்ந்துள்ள
மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஓராண்டு வைத்த பிறகு
குழல் செய்வர்.
|