1.4 நாடகக் கலைஞர்கள்

பல்வேறு வகையிலான பெயர்கொண்டு அக்கால நாடகக் கலைஞர்கள் அழைக்கப்படலாயினர். பாணர், புலவர், பொருநர், குயிலுவர், பாடினியர், வயிரியர், ஆடுநர், கோடியர், கூத்தர், விறலியர், கண்ணுநர்     போன்றோர் குறிப்பிடத்தக்க கலைஞர்களாவர்.

கூத்தினை நிகழ்த்துவோர்     பொதுவாகக் கூத்தர் என்றழைக்கப்பட்டனர். கோடியர் என்னும் பெயரும் கூத்தரையே குறிக்கும். வயிரியர் என்பதும் கூத்தரையே குறிப்பிட்டு நிற்கும் பெயராகும்.

‘பண்’ என்ற வேர்ச்சொல் கொண்டு பாடும் திறன் கொண்ட கலைஞர்கள் பாணர் என்றழைக்கப்படலாயினர். சீறியாழ், பேரியாழ் போன்றன. பாணர்களுக்கான இசைக்கருவிகளாகக் கொள்ளத்தக்கனவாகும்.
1.4.1 நடிப்புக் குறிப்புகள்

தேர்ந்த அரங்கின் அமைப்பினை வடிவமைத்துச் சொன்ன அடியார்க்கு நல்லார் நடிகர்களுக்கான சில உத்திகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார். இவை அக்கால உரையாசிரியர்கள் கூடத் தமிழ் நாடகத்தில் அதிகமான ஆர்வத்தையும், புரிதலையும் கொண்டிருந்த தன்மையையே காட்டுகிறது எனலாம். சுருக்கமாகச் சில நடிப்பு உத்திகளை மட்டும் இங்கே காணலாம்.

உடம்பு, முகம், கண் இவற்றில் உள்ளத்து உணர்வுகள் பிரதிபலிக்கும் என்னும் நடிப்பின் அடிப்படையைக் குறிப்பிட்டு விளக்குகிறார்.

இதனை,
...எண்ணம் வந்தால் தோற்று முடம்பில்
     உடம்பின் மிகத்தோற்றும் முகத்து ;
முகத்தின் மிகத்தோற்றும் கண்ணில்;

(சிலப் : அடியார்க்கு நல்லார் உரை. ப : 84)

எவ்வளவு அழகான விளக்கம்! காலந்தோறும் பொருந்தி வரும் நடிப்புக் கோட்பாடு அல்லவா இது?

மேலும் ஒன்பான் சுவைகளான வீரம், அச்சம், இழிவு, வியப்பு, இன்பம், அவலம், நகை, நடுவுநிலை மற்றும் உருத்திரச் சுவை என்னும் ஒன்பான் சுவை பற்றியும் பேசப்படுகிறது. அவற்றில் இரண்டின் கூறுகளை உற்று நோக்குவோம்.

  • வீரச்சுவை
  • வீரச்சுவையின்     கூறுகள் என்பது மேலேற்றிய புருவம், சிவந்த கண், பிடித்த வாள், கடித்த எயிறு, மடித்த உதடு, சுருட்டிய நுதல், பகைவரை வீழ்த்தும் திறன் ஆகியவையாகும்.
  • நகை


  • நகையின் கூறுகள் என்பது, மிகைபடு நகை, கோணிய முகம், ஏறியிறங்கும் புருவம்.

    இவை தவிர, இருபத்து நான்கு வகை நடிப்புக் குறிப்புக்களையும் தருகிறார். நடிகன் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்திற்கேற்பத் தன்னை     மாற்றிக் கொள்ளுதற்கான குறிப்புகளாக இவை பயன்பட வல்லவையாகும்.

    மேலும் உட்சொல், புறச்சொல், ஆகாயச்சொல் என்னும் நடிகருக்கான ஒலிக்குறிப்பும் உணர்த்தப்படுகின்றன.
    1.4.2 இசைக்கருவிகள்

    கூத்துகள்     மற்றும்     ஆட்டங்களுக்காக     அவற்றை நிகழ்த்திக்காட்டிய கலைஞர்கள் கலைகளின் தன்மைக் கேற்பவும், தங்களது ஆட்ட நிலைகளுக்கு ஏற்பவும் இசைக்கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நிகழ்ச்சி சிறப்புற அமையும்.

    இவ்வகையில் உடுக்கை, மத்தளம், சுத்த மத்தளம், படகம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, யாழ், குழல், முழவு, தண்ணுமை, பேரிகை, களப்பறை - தமருகம் - தடாரி, அந்தரி - அரசு - சந்திர வளையம், மொந்தை, நிசாளம், தூம்பு, துடிமை, சிறுபறை அடக்கம், தகுனிச்சம், பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை, துருத்தி, சிறு வங்கியம், சல்லி, கடப்பறை, குறுந்தாம்பு, கோடு, பாண்டில் போன்ற பல இசைக்கருவிகளைக் கலைஞர்கள் பயன்படுத்தினர்.

    உடுக்கை

    யாழ்

    மேற்குறிப்பிடப்பெற்றுள்ள இசைக் கருவிகள் ஒன்றிரண்டின் சிறப்பினை நோக்குவோம்.

  • யாழ்


  • பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என யாழ் நான்கு வகைப்படும். பேரியாழ்     இருபத்தொரு நரம்புகளையும், மகரயாழ் பத்தொன்பது நரம்புகளையும், சகோட யாழ் பதினான்கு நரம்புகளையும், செங்கோட்டியாழ் ஏழு நரம்புகளையும் கொண்டிருக்கும்.

  • குழல்
  • மூங்கிலால்     செய்யப்     பெறுவது. புல்லாங்குழல், வேய்ங்குழல், வங்கியம், வேணு     எனப்     பலவாறு அழைக்கப்படுவதுண்டு. ஏழு துளைகள் அமைக்கப்பெற்றது. சரி க ம ப த நி என்ற

    புல்லாங்குழல்

    ஏழு முத்திரைகள் மாத்திரைப்படுத்திட இசை பிறக்கும்.

    1.4.3 நாடகக் கலைஞர் நகர்வுகள் (Movements)

    சங்ககாலக் கலைஞர்கள் நாடகக் கலையினை நடத்திக் காட்டும்போது தாம் ஏற்றுக்கொண்ட கூத்து அல்லது ஆடலினை முன்னிறுத்தி தங்கள் நகர்வுகளை மேற்கொண்டனர்.

    தொடக்ககால ஆட்டங்கள் வரைமுறையற்ற, கட்டுப்பாடில்லாத நகர்வுகளைக் கொண்டு விளங்கின. கூத்தின் தன்மை இன்பியல் கூறுகளையே அதிகம் கொண்டிருந்தமையால் நகர்வுகள் கட்டுப்படுத்தப் படவில்லை. இத்தகைய நிலையால் அரங்கின் பரப்பு நிலைப்படுத்தப்படவில்லை. ஆட்ட நகர்வுக்கேற்ப அரங்கின் பரப்பும் மாறுபட்டது.

    ஆனால் வேத்தியல் நிலையில் நாடகம் நடத்திய கலைஞர்கள் பெரும்பாலும் தனியாக அமைக்கப்பெற்ற அரங்கில் தங்கள் நிகழ்ச்சியை நடத்தியதால் ஆடுபரப்பு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆடுபரப்பிற்கேற்ப, தங்கள் நகர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. தமிழின் முத்தமிழ்க் கூறுகள் எவை?

    விடை

    2. தொல்காப்பியம் குறிப்பிடும் ‘நாடக வழக்கு’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?

    விடை

    3. சங்ககால நாடகக் கலை வடிவங்கள் பொதுவாக எவ்வகையனவாய் அமைந்தன?

    விடை

    4. கூத்து வகைகளில் இரண்டினைக் கூறுக.

    விடை

    5. ஆடல் வகைகளில் இரண்டினைக் கூறுக.

    விடை

    6. மரக்காலாடல் இன்றைய எந்த ஆடல் வடிவத்தின் முன்னோடி வடிவமாகக் கருதப்படுகிறது?

    விடை

    7. ‘ஆடுகளம்’ என்றால் என்ன?

    விடை

    8. திருக்குறள் கலை நிகழும் இடத்தை எவவாறு குறிக்கிறது?

    விடை

    9. சிலப்பதிகாரம் குறிப்பிடும் இருவகைப் படைப்பு நிலைகளைக் குறி்ப்பிடுக.

    விடை

    10. சங்ககாலக் கலைஞர்களில் இரண்டு வகையினரைக் குறிப்பிடுக.

    விடை

    11. சங்க கால இசைக்கருவிகள் ஐந்தினைக் குறிப்பிடுக.

    விடை

    12. சிலப்பதிகாரம் குறிப்பிடும் திரை வகைகள் எவை?

    விடை