1.5 சிற்றிலக்கிய நாடக வகைகள் |
சங்கம் மருவிய காலத்தைத் தொடர்ந்து
கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டு முதற்கொண்டு சுமார் 430 ஆண்டுகள் (கி.பி. 850 -
1280) தமிழகத்தில் சோழர் ஆட்சி
நடைபெற்று வந்தது.
இக்காலத்தில் நாடகம், சிற்பம்
உள்ளிட்ட கலைகள்
வளம்பெற்றன. இராஜராஜேசுவர நாடகம் உள்ளிட்ட
பல
நாடகங்கள் மேடையில் நடிக்கப்பட்டன. ஆனால்
சோழர்
ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் அமைதியற்ற நிலை உருவாயிற்று.
நாட்டின் சிறு சிறு பகுதிகளுக்குள்ளேயே
பிரிவினைகள்
தோன்றின. மக்கள் தொடர்பில்
இடைவெளி நிலவியது.
அதற்கேற்பத் தங்கள் எல்லைக்குள் செயல்படத் தக்க சிறு
சிறு
கலை இலக்கிய வடிவங்களை உருவாக்கத்
தொடங்கினர்.
இவ்வகையில் உருப்பெற்றவையே சிற்றிலக்கியங்களாக
வளரலாயின. தமிழ் நாடகமும் இசையோடு
இயைந்து
சிற்றிலக்கிய நாடக வடிவம் பெற்று உலா வரத் தொடங்கியது.
இவ்வகையில் நொண்டி, கீர்த்தனை,
பள்ளு, குறவஞ்சி
ஆகியன குறிப்பிடத்தக்க சிற்றிலக்கிய நாடக
வகைகளாகக்
கொள்ளத் தக்கனவாகும். அவை குறித்துக் காண்போம்.
சிற்றிலக்கிய நாடக வகைகளுள் நொண்டி
நாடகம் ஒரு
வகையாகும். மேடையில் தனியொரு மனிதனாகத் தோன்றும்
கதைத் தலைவனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு
‘நொண்டி’ எனப் பெயர் பெற்றது. இதனை
‘ஒற்றைக்கால்
நாடகம்’ என்றும் அழைப்பர்.
திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம்,
சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி
நாடகம், ஞான நொண்டி நாடகம் போன்றவை குறிப்பிடத்தக்க
நொண்டி நாடகங்களாகும்.
நொண்டி நாடகத்தின் தோற்றம் கி.பி
17 ஆம் நூற்றாண்டு
ஆகும். சாதாரண மக்களுக்காக நடத்திக்காட்டப்பெறும் வண்ணம்
இந்நாடகம் மேடையில் நடித்துக்காட்டப்பட்டது.
மக்களுக்கு
அறவொழுக்கத்தினை வலியுறுத்துவதே இந்நாடகத்தின் நோக்கம்.
நொண்டி நாடகம் இசை கலந்த இலக்கிய
நாடகம் ஆகும்.
வெண்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து சிந்து, ஆனந்தக்களிப்பு
ஆகிய பாவினங்களால் இது ஆக்கப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் மக்களிடையே வழக்கில் இருந்து வந்த வழக்குச்
சொற்களைக் கொண்டு நொண்டி நாடகம் ஆக்கப்பட்டிருக்கும்.
இது தமிழ் நாடகப்போக்கில் குறிப்பிடத்தக்க
மாற்றமாகும்.
அனைத்து வகை நொண்டி நாடகங்களும்
ஒரே வகை
வடிவமைப்பையே கொண்டுள்ளன.
நொண்டி நாடகங்கள் யாவும் பொதுவான
கதைக்கருவைக்
கொண்டன. கதைத் தலைவன் தன்னுடைய பழைய வாழ்வை
நினைவு கூர்வதாக நொண்டி நாடகக் கதை அமையும். எனினும்
கதைத் தொடக்கத்தில் பெற்றோரிடம் அவன் வளர்வதாகவும்,
அவ்வாழ்வு பிடிக்காமல் வெளியேறுவதாகவும் நாடகக்
கதை
தொடங்கும். தனது மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி
வீட்டை
விட்டுச் சொல்லாமலேயே வெளியேறுவான் கதைத் தலைவன்.
சில நாட்களிலேயே பொருளனைத்தும் இழந்த நிலையில் திருடத்
தொடங்குவான். திருடிக் கிடைத்த பொருளில் இன்பம் அடைய
நினைப்பான். மதுவுக்கும், மாது (பெண்)வுக்கும் அடிமை ஆவான்.
பொருளை இழந்து துன்பத்திற்கு ஆளாவான். உதவிக்கு யாரும்
முன்வரக் காணாமல் துடிப்பான். பரத்தையரும்
தன்னைத்
துரத்தியடிக்க, மேலும் தீய வழியில் செல்லத் துணிவான்.
அவனுக்குச் சோதனை தொடரும். குதிரையொன்றைத் திருட
முயலுகையில் கையும் களவுமாகக் காவலாளியிடம் பிடிபடுவான்.
அவனது (அவயவங்கள்) கால்கள், கைகள் துண்டிக்கப்படும்.
இவ்வேளையில் அவன் கடவுளை நினைத்துக் கூக்குரலிட்டு,
அழுவான். கடவுள் கருணையால் இழந்த கால்களை
மீளப்
பெறுவான். கடைசி வரை கடவுளைப் போற்றி நல்லவனாகவே
வாழ்வான்.
எடுத்துக்காட்டாக, திருச்செந்தூர் நொண்டி நாடகம் முருகனை
மையப்படுத்தி அமைவதையும், சீதக்காதி நொண்டி
நாடகம்
இசுலாமிய நெறியை மையப்படுத்தி அமைந்துள்ளமையையும்
காணலாம்.
அக்காலச் சூழலில் விபச்சாரம், திருட்டு, ஏமாற்று போன்றவை
சமுதாயத்தில் கொடுஞ்செயல்களாகக் கருதப்பட்ட நிலையினை,
நொண்டி நாடக வடிவம் வெளிப்படுத்துகிறது.
நொண்டி நாடகமானது தனியொரு
கதை மாந்தரை
முன்னிலைப் படுத்தி அமையும் நாடகமென்பதை அறிந்தோம்.
இந்நாடகப் பாத்திரங்களில் நொண்டி ஒருவனே மேடை
மீது
தோன்றுவான். தனது வரலாறு முழுவதையும் தானே
கூறிச்
செல்வான்.
கடவுள் வாழ்த்துடன் நாடகம் தொடங்கும். ‘நொண்டி’ நாடகக்
கதைக்கேற்ப அந்தந்த மதக்கடவுளரைப் போற்றும் வண்ணம்
இஃது அமையும்.
நொண்டி தனக்குத்தானே கேள்வி எழுப்பிக்
கொள்வதும்,
தனது நாட்டுவளம், கல்வி கற்ற முறை, மண நிகழ்வு,
தனது
பயணம் போன்றவற்றை விவரித்தபின்னர், தீய நண்பர்களின்
சேர்க்கையால் தான் திருட நேர்ந்ததைக்
குறிப்பிடுவான்.
திருட்டினால் விளைந்த தீய விளைவுகளைக்
கூறுவதே
இந்நாடகத்தின் மையக் கருத்தாதலால் அந்நிகழ்ச்சி வலியுறுத்திக்
கூறப்படும்.
நடிப்புக் கூறுகளை ஆழமாக வெளிப்படுத்திக் காட்டுவதில்
நொண்டி என்னும் தனிப்பாத்திரம், தனி நடிப்புப்
( Mono -
Acting) பாணியைத் தமிழுக்கு அறிமுகம்
செய்திருக்கிறது
எனலாம்.
கீர்த்தனை, சிற்றிலக்கிய
நாடக வகையைச் சார்ந்தது,
கீர்த்தனை என்பது புகழ்பாடல்; இசை மிகுந்து காணப்படுவது.
இசைக்கூறு என்பதன் அடிப்படையிலேயே இது கீர்த்தனை எனப்
பெயர் பெற்றது. இது கதைகூறல் (story telling)
முறையில்
அமைந்துவருவது. தொடக்கத்தில் ஒரே ஒரு பாத்திரத்தால்
(performer) மட்டுமே நடத்தத்
தக்கதாக இக்கலை
அமைந்திருந்தது. காலப் போக்கில் நாடகமாக
மேடையில்
நடித்துக் காட்டுகையில் அது
வடிவமாற்றம் கொள்ளத்
தொடங்கியது.
இராம நாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக்
கீர்த்தனை,
பராங்குச நாடகம் போன்றவை குறிப்பிடத்தக்க கீர்த்தனை நாடக
வடிவங்களாகும்.
கி.பி பதினேழாம் நூற்றாண்டில்
தோன்றி வளர்ந்த
சிற்றிலக்கிய நாடக வடிவம் கீர்த்தனையாகும். இசைப்பாடல்கள்
மூலம் இறைவன் புகழ்பாடும் வண்ணம் தோற்றுவிக்கப்பெற்ற
இந்நாடக வடிவம் பிற்காலத்தில் மக்கள் பிரச்சினைகளையும்
முன்வைக்கத் தொடங்கியது.
கீர்த்தனையின் வடிவம் குறித்துக் காண்போம்.
‘கீர்த்தனை’
எனப்படும் இசைவடிவங்களைக் கொண்டு கீர்த்தனை இலக்கியம்
ஆக்கப்பட்டுள்ளது. ‘சிந்து’ என்ற
பாடல் வகையே
கீர்த்தனைகளாக வளர்ச்சி பெறலாயின.
கதை கூறல் முறையிலும், பாடிச்
செல்லும் நிலையிலும்
திறம்பட்ட ஒருவரால் நடத்திக்காட்டப்படும் பொழுது, நாடகக்கூறு
மிக்கதாக விளங்குவதைக் காணலாம். அதனாலேயே இத்தகு
கீர்த்தனையை ‘நாடகக்கீர்த்தனை’ என்றும் அழைக்கின்றனர்.
கோயில்களில் நடைபெற்று
வந்த புராண, இதிகாச
நாடகங்களே நாளடைவில் கீர்த்தனை
நாடகங்களாயின.
தொடக்கத்தில் பலர் கூடும் அவையில் தனியொருவரால் நடத்தப்
பெற்று வந்தது. பின்னர் காலமாற்றத்திற்கேற்ப நாடக வடிவம்
பெற்றது.
மக்களுக்கு அறிமுகமான கதைகளே இவ்வகை நாடகங்களுக்கு
மூலக்கதைகளாகக் கொள்ளப்பட்டன. அறிமுகமான கதைகள்
மக்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாதிருக்க
வேண்டி, இசை
உள்ளிட்ட உத்திகள் மூலமே புதுப்பொலிவினை ஏற்படுத்தினர்.
சான்றாக, இராம நாடகக் கீர்த்தனையில் கொச்சகம், வெண்பா,
வசனம், கலித்துறை, விருத்தம், தோடயம், திரிபதை, தரு போன்ற
கூறுகளைக் கொண்டு இசையூட்டம்
செய்யப்பட்டதைக்
கொள்ளலாம். (திரியதை, தரு என்பன இசைப்பாட்டு வகைகள்.)
‘கீர்த்தனை’ நாடகங்களுக்கான கதைகள்
ஒன்று போலவே
அமைவதில்லை. கீர்த்தனை என்கிற
இசை வடிவத்தில்
அக்கதைகள் கொண்டு வரப்பெற்று, நடத்திக் காட்டப்பெறும்.
இராம நாடகக் கீர்த்தனையும், நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும்
இரு மாறுபட்ட கதைகளாகும். அவற்றின்
கதைகளைச்
சுருக்கமாகக் காண்போம்.
அ) இராம நாடகக் கீர்த்தனை
அருணாசலக்கவிராயர் இதன்
ஆசிரியர். இவரால்
இயற்றப்பட்ட இந்நாடகத்தில் திருவரங்கத்தில்
கோயில்
கொண்டுள்ள அரங்கநாதர் புகழ் போற்றப்படுகிறது.
இராமயணத்தைத் தழுவி இந்நாடகம்
ஆக்கப்பட்டுள்ளது.
இராமநாடகக் கதை, இராமாயணக்கதையினின்று
சிறிதும்
மாறுபடாமல் அமைக்கப்பெற்றுள்ளது. மக்கள் மிகவும் மதிக்கின்ற,
அறிந்த கதையாக இராமாயணக்கதை இருப்பதால்
அதனை
மாற்றம் செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்
கூடும் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகும்.
ஆ) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபால கிருட்டிண பாரதியாரால்
எழுதப் பெற்றுள்ள
இக்கீர்த்தனை நாடகம் நந்தன் என்பவனின் கதையைக் கூறுகிறது.
பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள திருநாளைப்போவார்
புராணக் கதையே, இக்கீர்த்தனை நாடகத்துக்கான அடிப்படையாக
அமைந்துள்ளது.
தாழ்ந்த குடியில் பிறந்த நந்தன் உயர்சாதியினருக்கு
அடிமை
வேலை பார்த்து வருகிறான். ஆனால்
உயர் குலத்தவர்
வழிபடும் இடத்தில் சென்று கடவுளை வழிபட்டே
தீருவது
என்பதில் நந்தன் உறுதியாக இருக்கிறான். சமுதாய அவலங்களை
எதிர்த்துப் போராடுகிறான்.
தில்லை சென்று சிவனை வழிபடுவதே
அவனது இறுதி
ஆசையாக இருக்கிறது. இதை,
அவனது பண்ணையார்
எதிர்க்கிறார். இறுதியாக, பண்ணை வேலைகள் அனைத்தையும்
முடித்து விட்டுச்செல்ல அனுமதிக்கிறார்.
இறையருளால்
அனைத்துப் பணிகளையும் முடித்து விட்டுத் தூங்கச் செல்கிறான்.
மறுநாள் விழித்துப்பார்க்கும்போது முற்றிய விளை மணிகளுடன்
பூத்துக் குலுங்கிய வயற்காட்டைக் கண்டான். உயர்ந்த குடியைச்
சார்ந்த அவனது பண்ணையார் இவ்வாச்சரியத்தைப் பார்த்து,
நந்தனின் கால்களில் வீழ்ந்து பணிந்தார்.
தில்லை செல்ல
நந்தனுக்கு அனுமதி அளித்தார். எனினும் உயர்ந்த சாதி (குடி)
மக்கள் ஒன்று சேர்ந்து தரிசன முயற்சியை எதிர்த்தனர். எனினும்
கடவுள் அவர்களின் கனவில் தோன்றித் தீயால்
நந்தனை
தூய்மைப்படுத்துமாறு கூறினார். அதன் படி நந்தன் சிவ தரிசனம்
கண்டான். இவ்வாறு கதை முடிவடைகிறது.
கருத்து நிலையில் கீர்த்தனை
நாடகங்கள் எவற்றை
முக்கியப்படுத்துகின்றன எனப் பார்ப்போம்.
இசை கலந்த ஒரு கலையாகக் கீர்த்தனையை
மக்களுக்கு
வழங்கும் போது இசையின் மேல் மக்களுக்கு ஒரு
ஈடுபாடு
ஏற்படுவதுடன், சில கருத்துக்களும் அவர்களின் மனத்தில் இடம்
பெற வழி ஏற்பட்டது.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில்
அதன் ஆசிரியர்
கோபாலகிருட்டிண பாரதி தெளிவான, திட்டமிடப்
பெற்ற
கருத்துகளைச் சமுதாயத்திற்கு முன்மொழிந்திருக்கிறார். உயர்ந்த
சாதியினர் உணர்ந்து கொள்ளத்தக்க வகையில்
அவர்களின்
அடக்கு முறைகளையும்,
சமூக அவலங்களையும்
அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஒரேயொரு திறமைவாய்ந்த
இசைக்கலைஞரே முழு
நாடகத்தையும் நடத்திச் செல்லும் வண்ணம்
கீர்த்தனை
நாடகங்கள் அமையுமென்பதை
அறிவோம். உரிய
இசைக்கருவிகள் முழங்க, கதை வளர்ந்து செல்வதாக அமையும்.
காலம் செல்லச் செல்ல, கீர்த்தனைகள் பலர் சேர்ந்து நடிக்கும்
நாடகமாக உருமாற்றம் பெற்று வருவதைக்
காண்கிறோம்.
சான்றாக, கோபாலகிருட்டிண பாரதியின் நந்தனார்
சரித்திரக்
கீர்த்தனை இன்று பல கலைஞர்கள்
பங்கேற்று நடிக்கும்
வண்ணம் மாற்றம் செய்யப் பெற்றுள்ளது.
கடினமான காப்பியங்களைக்கூட
இசை கலந்து எளிய
நடையில் மக்களிடம் கொண்டு செல்லக் கீர்த்தனை என்ற நாடக
வடிவம் பயன்பட்டிருக்கிறது. இராமநாடகக்
கீர்த்தனை
இவ்வகையில் சிறப்பான செயலைச் செய்துள்ளது.
சமூக சீர்திருத்தத்திற்குத் தேவையான
செயல்பாட்டையும்
கீர்த்தனை நாடகம் செய்யத் தவறவில்லை.
சிற்றிலக்கிய நாடக வகைகளுள் குறிப்பிடத்தக்க
நிலையில்
சிறப்பிடம் பெற்றது பள்ளு நாடகம் எனலாம்.
பள்ளத்தில்
(வயலில்) வேலை செய்யும் மக்களை அடிப்படையாகக் கொண்ட
நாடகம் இது. இலக்கிய வளம் நிறைந்து
காணப்படுவதும்
இதுவெனலாம்.
முக்கூடற்பள்ளு, குருகூர்ப்பள்ளு,
வடகரைப்பள்ளு,
தில்லைப்பள்ளு போன்றன
குறிப்பிடத்தக்க பள்ளு
நாடகங்களாகும்.
பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில்
தோற்றம் கண்ட
சிற்றிலக்கிய நாடக வடிவம்
பள்ளு நாடகமாகும்.
உழவர்களையும், உழவுத் தொழிலையும்
முக்கியப்படுத்திய
நாடக இலக்கியமாகப் ‘பள்ளு’
தோன்றியது
வியப்பில்லையல்லவா?
ஆனால் ‘பள்ளு’ குறிப்பிடத்தக்க சிறப்பினைப்
பெறுகிறது.
அக்காலக்கட்ட வாழ்க்கை முறைமையைப் படம் பிடித்துக்காட்ட
முயற்சி செய்கிறது. இவ்வகையில் தோற்றம் பெற்ற முதற் பள்ளு
கி.பி பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
தோன்றிய
திருவாரூர்ப்பள்ளு ஆகும். ஞானப்பள்ளு,
ஆதிப்பள்ளு,
தியாகேசர் பள்ளு என்பன இந்நாடகத்தின் வேறு பெயர்களாகும்.
தமிழில் ஏராளமான பள்ளு
நாடகங்கள் இருந்துள்ளன.
‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண
முடியாது’ என்பது பழமொழி.
படித்தோராலும், மற்றோராலும்
சுவைக்கத்தக்க நாடக
இலக்கியம் பள்ளு. அதற்கேற்ப வடிவமைப்பைக்
கொண்டு
விளங்குதே இதற்குக் காரணமெனலாம்.
சிந்து, கலிப்பா, கலித்துறை ஆகிய
பாடல் வடிவங்களில்
விருத்தப்பாவும் கலந்துவர அமைக்கப்
பெற்றிருக்கும்.
இப்பாடலின் இசை அனைவரையும்
கவரும் தன்மை
கொண்டதாகும்.
பள்ளு, நாடகமாக நடிக்கத்தக்க
கூறுகளை அதிகம்
கொண்டுள்ளது. ‘கட்டியங்காரன்’
எனப்படும் பாத்திரம்
இந்நாடகத்தில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
‘கட்டியங்காரன்’ என்பவன் நாடகக்
கதையையும், நாடகக்
கலைஞர்களையும், நாடக நிகழ்வுகளையும் அறிமுகம் செய்து
ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ளும் ஒரு நாடகப்பாத்திரம்
ஆகும்.
உழைக்கும் மக்களின் (பள்ளர்)
வாழ்க்கை முறையினை
அவர்கள் பேசும் மொழியிலும்,
பாடும் நிலையிலும்
வெளிப்படுத்தும் நோக்கில்
பள்ளு நாடகங்கள்
ஆக்கப்பட்டுள்ளன.
இந்நாடகத்தின் இரு முக்கிய
கதைமாந்தர்கள் மூத்த
பள்ளியும், இளைய பள்ளியும் இவர்கள் இடையே நடைபெறும்
போராட்டத்தை விளக்கும்
‘ஏசல்’ பாடல்கள்
உணர்ச்சிமயமானவை. இன்றைய தர்க்கப்
பாடல்களுக்கான
முன்னோடி ‘ஏசல்’ பாடல்களேயாகும். மூத்த பள்ளியும் இளைய
பள்ளியும் ஒரே பள்ளனின் இரு
மனைவியர். இருவரும்
|
வெவ்வேறு சமயச்
சார்புடையவர்கள்.
தமது சமயம் பற்றியும் கணவன் பற்றியும்
இருவரும் நடத்தும் வாக்குவாதமே ‘ஏசல்’
எனப்படுகிறது. இறுதியில், ஒற்றுமையாய்
வாழ்வதாக இருவரும் உடன்படுகின்றனர். |
பள்ளு நாடகங்களின் கதையமைப்பு
பொதுவாக ஒரே
அமைப்பினதாகவே காணப்படும். இவற்றில் முக்கூடற்பள்ளு
சிறந்த கதையமைப்புடன் விளங்குகிறது எனலாம்.
பண்ணையாரிடம் வேலை பார்க்கும்
பள்ளனுக்கு இரு
மனைவியர். மூத்தபள்ளி முறையான மனைவி, இளைய பள்ளி
பள்ளனின் காதலுக்கு ஆட்பட்டவள். எனவே பள்ளன் இளைய
பள்ளியிடமே தங்கிக் கொள்கிறான். இது கண்டு
கோபமுற்ற
மூத்தபள்ளி தன் கணவன் வயல்வேலைகளைப் புறக்கணித்து
விட்டு இளைய பள்ளியிடம் காலங்கழிப்பதாகப் பண்ணையாரிடம்
முறையிடுகிறாள். பண்ணையார்
பள்ளனை முறைப்படி
கண்டிக்கிறார். பண்ணையார்
சொற்படி நடப்பதாக
உறுதியளித்துவிட்டு மீண்டும் இளைய பள்ளியிடமே பள்ளன்
பொழுதைக் கழிக்கிறான்.
மீண்டும் பண்ணையாரிடம்
மூத்த
பள்ளியின் முறையீடு நடக்கிறது.
பண்ணையார் பள்ளனைத் தொழுவில்
மாட்டிக் கசையடி கொடுக்கிறார். இது
கண்டு மனமிரங்கிய மூத்தபள்ளி
கணவனை விடுவிக்கும்படி |
|
வேண்டுகிறாள். அவ்வாறே பண்ணையார் பள்ளனை விடுதலை
செய்கிறார்.
உழவு வேலை நடைபெறும்போது
பள்ளனை மாடு
முட்டுகிறது. மூத்தபள்ளி மருந்திட்டு அவனைக் காப்பாற்றுகிறாள்.
அறுவடை முடிந்த பின் தனக்குரிய பங்கு கிடைக்காமையைச்
சொல்லி, பள்ளன் மேல் குறைகூறி மூத்தவள் முறையிடுகிறாள்.
இது கண்டு இளைய பள்ளி சண்டை செய்கிறாள்.
ஏசல்
தொடர்கிறது. இருவரும் வழிபடும்
சைவ, வைணவக்
கடவுளர்களும் இந்தச் சண்டைக்குள் இழுக்கப்படுவதைக் காண
முடிகிறது. (இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் நிலவி வந்த சைவ
வைணவப் பூசல்களே பள்ளு நாடகத்துக்குள்ளும் இடம் பிடித்துக்
கொண்டது என்பது குறி்ப்பிடத்தக்கதாகும்.)
பண்ணையார்
தலையீட்டினால் இருவரும்
அமைதியுறுகின்றனர். தலைவன் வாழ்த்தோடு கதை முடிகிறது.
பள்ளு நாடகம் ஒரு சமுதாய நோக்கத்தினை முன்வைக்கும்
நாடக வடிவமாகும்.
காதல், உழவுத்தொழில்,
சமயக்காழ்ப்புணர்வுகள் யாவும் இதற்குள் இடம் பெறுகின்றன.
பள்ளு நாடகம் படைப்புத்தன்மையில்
மேம்பட்ட நிலை
காணப்படுகிறது.
மரபினை ஒட்டிய
நாடகத்தொடக்கம் முறையாக
அமைந்துள்ளது. பள்ளு மேடையேற்றத்தில் கட்டியங்காரனின்
பங்களிப்பு இருந்து வந்துள்ளது.
காப்புச் செய்யுள் பாடல் இசைக்கப்
பெற்று பின் கடவுள்
வாழ்த்துப் பாடலுடன் நாடகம் தொடங்குகிறது.
தொடர்ந்து
பாத்திரங்களின் வருகை அமைகிறது.
முதலில் பள்ளன்
கடவுளைப் போற்றியும், தன்னுடைய
குணநலன்களைக்
குறிப்பிட்டும் பாடிக் கொண்டே அறிமுகம் ஆவான்.
மூத்தபள்ளியும் இளையபள்ளியும்
மேடையில் அறிமுகம்
ஆகும் நிகழ்வு அடுத்து அமையும். அவர்கள் தங்களுடைய
பிறப்பு, வளர்ப்பு குறித்த
செய்திகளோடு தங்களை
அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.
நாட்டுவளம் விரிவாகப் பேசப்படும். குயில்களின்
பாடல்கள்,
மழைவேண்டல், மழைக்கான அறிகுறிகள், மழை
பெய்தல்,
ஆற்றில் நீர் வருதல், ஐவகை நிலங்கள் குறித்த செய்திகள் மிகச்
சிறப்பாக வெளிப்படுத்தப்படும். விவசாயத்துக்கான பின்னணிச்
சூழல் உருவாகியுள்ள இந்த நிலையில் பண்ணையார்
அறிமுகமாகிறார்.
பண்ணையாரிடம் தங்களது குறைகளை இரண்டு பள்ளியரும்
முறையிடும் நிகழ்வுகள் இடம் பெறும். இளைய பள்ளியின்பால்
மோகம் கொண்டு தனது கடமையை மறக்கும்
பள்ளனைப்
பண்ணையார் தண்டிக்கும் நிகழ்வு அடுத்ததாக அமையும்.
பண்ணையாரின் கோபத்தைக் குறைக்கும்
முயற்சியாகப்
பள்ளன் வித்துவகை, மாட்டுவகை, ஏர்வகை எனக் குழைந்து
பேசுகிறான்.
அந்தக் காட்சியில் பள்ளன் மேல் மூத்தபள்ளி
தொடுக்கும்
குற்றச்சாட்டும், தொடர்ந்து பண்ணையார் பள்ளனுக்குக் கசையடி
கொடுக்கும் காட்சியும் இடம்பெறும். மூத்தபள்ளி பள்ளன் மேல்
இரக்கம் கொண்டு பள்ளனை விடுவிக்க வேண்டுதல் திருப்பு
முனையாக நிகழ்கிறது.
மீண்டும் அறுவடைக்கான கூலியைப் பங்கிடுவதில்
இரண்டு
பள்ளிகளுக்கிடையே சண்டை. பின்பு நல்ல அறுவடையைக்
கொடுத்த ஆண்டவனுக்கு இருவருமே நன்றி கூறிச் சமாதானம்
ஆதல் எனக் காட்சி முடிகிறது.
கதை நிகழுமிடமாக மூத்தபள்ளியின் ஊரும், பண்ணையார்
வாழும் மருத நிலமும் அமைகின்றன.
இந்நாடகம் மேடைகளில் படைக்கப்பட்ட
தன்மை இதன்
நாடகக் கூறுகளின் மேம்பாட்டை
வெளிப்படுத்துகின்றது.
திருவாரூர்க் கோயிலில் திருவிழாவின்போது திருவாரூர்ப்பள்ளு,
மேடை நாடகமாக நடிக்கப்பெற்றது என்றும், நாடகம்
முடிந்த
பின்னர் நாடகக் கலைஞர்கள் நூலாசிரியரின் பரம்பரையினர்
வாழும் இல்லத்திற்கு வந்து ஆசி பெற்றதாகவும்
கிடைக்கும்
செய்தி, இதனை நிறுவுகிறது.
பிற சிற்றிலக்கிய நாடக வடிவங்கள் போலவே
குறவஞ்சியும்
தனித்தன்மை வாய்ந்த நாடக இலக்கியமாக
விளங்குகிறது.
குறவஞ்சி என எப்படிப் பெயர்பெற்றது என்பதை அறிய ஆர்வம்
எழலாம் ! குறத்தியின் சமுதாய வாழ்வின் அடிப்படையில் இஃது
அமைந்துள்ளதால் குறவஞ்சி எனப் பெயர் பெறலாயிற்று. குறம்,
குறத்திப்பாட்டு போன்றவற்றோடு இது தொடர்பு
கொண்டு
விளங்கும் வண்ணம் அமைந்துள்ளது.
மீனாட்சியம்மைக்குறம்,
திருக்குற்றாலக் குறவஞ்சி,
இலட்சனைக் குறவஞ்சி, சரபேந்திர
பூபாலக் குறவஞ்சி,
பெத்லகேம் குறவஞ்சி போன்றவை குறிப்பிடத்தக்க குறவஞ்சி
நாடகங்களாகும்.
குறவஞ்சியின் தோற்றம் 17 ஆம் நூற்றாண்டில்
அமைந்தது.
பொதுவாக, சிற்றிலக்கியங்களின் தோற்றம் இக்காலக்கட்டத்தைச்
சார்ந்து வந்துள்ளது.
அன்று முதல் இன்று வரை மக்கள் மனத்தைக் கவர்ந்த நாடக
இலக்கியமாக குறவஞ்சி நாடகங்கள் விளங்குகின்றன. இதற்குக்
காரணம், மக்களுக்குத் தேவையான சந்தப்பாடல்களும், நாடகக்
கூறுகளும் கொண்டு குறவஞ்சி தோன்றி வளர்ந்தது தான்.
முதல் குறவஞ்சி நாடகம்
என்னும் பெருமையினை
மீனாட்சியம்மை குறம் பெறுகிறது. இது 17 ஆம் நூற்றாண்டில்
குமரகுருபரரால் இயற்றப்பட்டது.
அமைப்பு நிலையில் குறவஞ்சி நாடகங்கள்
யாவும் ஒரே
வகையில் தான் உள்ளன என்பதை நாம் மனத்தில் வைத்துக்
கொள்ள வேண்டும்.
கட்டியங்காரன் வருகை
இந்நாடகத்தில் இடம்
பெற்றுள்ளது.
கட்டியங்காரன், ஆடியபடி பாட்டுடைத்
தலைவன் பவனி
வரும் நிலையை முதலில் கூறிச் செல்வான்.
தலைவன் பவனி வருகையில் தலைவி ஒருத்தி
அவனைக்
கண்டு காதல் கொள்வதுடன்
தலைவனின் உடல்
வருணனைகளையும் கூறி நிற்பாள்.
தலைவன்பால் தன்னை இழந்து
வாழும் தலைவிக்கு,
குறத்தியின் அறிமுகம் கிடைக்கிறது. தலைவியின் கையை விரித்து,
குறத்தி சொல்லும் எதிர்கால நிகழ்வுகள் குறித்த செய்தி நாடக
வடிவத்தில் குறிப்பிடத்தக்க திருப்பமாக உள்ளது.
குறவஞ்சி நாடகத்தின் இரண்டாவது பகுதியில்
குறத்தியின்
கணவனான குறவனின் அறிமுகம் நிகழ்கிறது. குறத்தியை நீண்ட
இடைவெளிக்குப் பின் அவன்
சந்திக்கும் காட்சியும்
இருவருக்குமிடையே நிகழும்
உரையாடலும் மிகவும்
சுவையானவை. இதோ ஒரு காட்சி .... !
சிங்கன் :
|
பாதகி நீ என்னை விட்டுப்பிரிந்து |
பரதேசம் போவானேன் - சிங்கி ! |
சிங்கி : |
பக்குவத்தில் ஒரு சக்களத்தி வாய் |
பார்த்தும் இருப்பே னடா - சிங்கா? |
(கும்பேசர் குறவஞ்சி. 108 - 109)
|
குறவஞ்சி நாடகங்களின் கதையமைப்பு
மரபு சார்ந்த
பொதுவான கதையமைப்பே எனலாம்.
தலைவனின் அழகில் தன்னை மறந்து தவிக்கும் தலைவியின்
கைகளில் தன்னுடைய மந்திரக் கோலைச் சுழற்றிக் குறி சொல்லும்
குறத்தி, இந்த மண்ணின் மக்கள்
யாவரும் விரும்பும்
மனிதநேயமிக்கவள்.
அமைப்பு நிலையில் குறிப்பிடத்தக்க
கதைமாந்தர்களுடன்
நாடகம் படைக்கப்பட்டுள்ள முறை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அப்பாத்திரங்களின் குணநலன்கள் வெளிப்படும்
வண்ணம்
சிறப்பாக அமைக்கப் பெற்றுள்ளது.
தமிழுக்கு இசை நாட்டிய நாடகம் என்னும்
வகையில் ஒரு
தனித்துவம் வாய்ந்த இலக்கியமாகக் குறவஞ்சி உள்ளது. அது
நமக்கு நல்ல வரவுதானே !
குறவஞ்சி நாடகம் குறித்த விரிவான செய்திகளை நாட்டிய
நாடகங்கள் என்ற பாடத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
|