தமிழ் நாடகம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இது தொடக்க
நிலையில் கூத்து, ஆடல் (ஆட்டம்) ஆகிய இரு நிலைகளின்
செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. தமிழர் தம் வாழ்க்கை
முறையின் ஒரு கூறாக இக்கலையைக் கொண்டுள்ளனர்.
நாடகக் கலைக்கேற்ப ஆடுகளங்கள் அமைந்திருந்தன. மேலும்
திறந்த வெளி மற்றும் அடைப்பு அரங்கின் செயல்பாட்டு
நிலையையும் அறிய முடிகிறது. ஆண், பெண் இருபால்
கலைஞரும் இக்கலைகளி்ல் ஆர்வமுடன் பங்கு கொண்டிருந்தனர்.
இவ்வாறு, நாடகக் கலை தொன்மைக் காலத்தில் தமிழகத்தில்
சிறப்புற்றிருந்ததை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழ் நாடக வரலாற்றில்
சிற்றிலக்கிய நாடகங்கள்
குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் அதனதன்
நோக்கத்தில் தெளிவாகப் படைக்கப்பெற்றுள்ளன.
நொண்டி, கீர்த்தனை, பள்ளு, குறவஞ்சி ஆகிய சிற்றிலக்கிய
நாடகங்கள், வடிவம், கதையமைப்பு, கருத்து, நாடக
வழங்கு
முறை, நாடகப் பங்களிப்பு ஆகியவற்றில் தனித்தன்மை கொண்டு
விளங்குகின்றன.
நொண்டி, குறவஞ்சி போன்றவை
முக்கிய பாத்திரத்தின்
தன்மையாலும், கீர்த்தனை இசை வடிவத்தாலும், பள்ளு வாழ்க்கை
முறைச் சித்திரிப்பாலும்
பெயர் கொண்டமைகின்றன.
மக்களுக்கான வாழ்வியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும்,
அறிவுரை கூறுவதிலும், கருத்துப் பிரச்சாரம்
செய்வதிலும்
இவ்வகை நாடக வடிவங்கள் தனித்தன்மையான பங்களிப்புச்
செய்கின்றன.
படிப்பதற்கும், நாடக வடிவமாக்குதற்கும்
ஏற்ற வகையி்ல்
இவை அமைந்துள்ளன.
|