நம் சமூக அமைப்புப் பல வாழ்வியல் கூறுகளால் ஆனது.
மனித வாழ்வின் முக்கிய கூறுகள் யாவும் சமூக அமைப்புக்குப்
பங்களிப்புச் செய்கின்றன. இவற்றில் முக்கியமானது விழாக்கள்
எனலாம். மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தவும்,
பங்கிட்டுக்கொள்ளவும், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவும்,
ஆறுதல் தேடிக் கொள்ளவுமான புகலிடமாக விழாக்கள்
அமைகின்றன. பொழுது போக்கிற்கும் இவை பெரும் பங்கு
ஆற்றுகின்றன.
கோயில் விழாக்கள், கொடை விழாக்கள், அறுவடைத்
திருநாள் உள்ளிட்ட பொது விழாக்கள் முதலியவை சமூகத்தின்
முக்கியமான பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன. நாட்டுப்புற
மக்களின் வாழ்க்கையில் இவ்வகைக் கூறுகளின் பங்களிப்பு
மேலும் ஆழமானதாகும்.
விழா நிகழ்வுகளில் வட்டார உணர்வுகளுக்கேற்ப நாடகக்
கலைகள் வடிவமாற்றம் செய்யப் பெற்றுப்
படைத்தளிக்கப்படுகின்றன. நாட்டுப்புற மக்களின் முக்கியமான
வாழ்வியல் கூறாக நடத்து கலைகள் (Performing arts)
அமைவதால் பெரும்பாலும் கூத்து வடிவில் படைப்பாக்கம்
செய்யப் பெறுகின்றன. விழாக்களின் முக்கியக் கூறாகக் கலை
நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. |