2.2 நாட்டுப்புற நாடக வடிவங்கள் |
நாட்டுப்புற மக்கள் உழைப்பையே பெரிதும் நம்பி
வாழ்பவர்கள். உழைத்துக் களைக்கும் நேரங்களில் தாங்கள்
விரும்பும் கலைவடிவங்களைக் காண்பதில் ஆர்வம் உள்ளவர்கள்.
அவர்கள் தங்களுக்கான கலை வடிவங்களைத் தமக்கேற்ற
வகையில் படைத்து ஏற்றுக் கொள்ளும் திறனும் கொண்டவர்கள்.
தங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான கதைகளின் பால் ஆர்வம்
கொண்டு அவற்றை நாடக வடிவில் காண ஆர்வம் கொண்டனர்.
இவ்வகையில் கோயில் விழாக்களிலும், அறுவடை முடிகிற
காலங்களி்லும் நடைபெறும் தெருக்கூத்து எனப்படும்
நெடுங்கதைக் கூத்து முக்கியக் கலையாக விளங்குகிறது.
தமிழகத்தின் தென் கோடியில் கொடை விழாக்களிலும்,
அம்மன் கோவில்களிலும், வில்லுப்பாட்டு என்னும் கதைக்
கூற்றரங்கு (Narrative Theatre) செல்வாக்குப் பெற்று
விளங்குவதைக் காணலாம்.
கிராமத்துக் கோயில்களில் குறிப்பாகச் சுடலைமாடன்
கோயில்களில் நடத்தப் பெறும் கணியான் கூத்தும்
குறி்ப்பிடத்தக்க விழாக்கால நாடகமாகக் கொள்ளத்தக்கதாகும்.
சிற்றரங்க நாடக வடிவங்களான பாவைக்கூத்து, தோற்பாவை நிழற்கூத்து போன்றவையும்
தமிழகத்தில் விழாக்கால நடத்துகலைகளாக விளங்குகின்றன.
மேற்குறிப்பிடப் பெற்றுள்ள நாடக வடிவங்கள் குறித்து இனிக்
காண்போம். |