கதை கூறல் (story telling) மரபில் விளங்கி வரும்
கதைப்பாடல்
வகையில் கணியான் கூத்து அமைந்துள்ளது. ஒரு
கதையை எளிய பாடல் வடிவில் வெளிப்படுத்துவதே
கதைப்பாடல் (ballad) என்றழைக்கப்படுகிறது. இது இசைப்பாடல்
வகையில் அமையும். ‘கணியான்’ என்னும் பழங்குடி இனத்தவரால் நடத்தப் பெறுவதால் இக்கலை கணியான் கூத்து எனப் பெயர் பெறுகிறது. குமரி, நெல்லை மாவட்டங்களில் இக்கலை செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. முக்கூடற்பள்ளு, தெய்வச்சிலையார் விறலிவிடுதூது போன்ற நூல்களில் கணியான் கூத்துக் குறித்த செய்திகள் காணக்கிடைக்கின்றன.
கணியான் கூத்துக்கான மேடையானது கோவிலின்
முன்புறத்தில் அமைக்கப்பெறும். விழாக்கால மேடையாக இது
அமைவதால் இதற்கென்று எந்த அளவு கோலும் இல்லை.
பொதுவாக எந்த
மேடையும் கணியான் கூத்திற்கான மேடையாகப்
பயன்படுத்தத்தக்கது ஆகும். கணியான் கூத்து நிகழ்ச்சிக்கான தனிப்பட்ட ஒளியமைப்புக் கருவிகள் ஏதுமில்லை. தற்போது மேடையில் பொதுவாக இடம் பெறும் ஒளியமைப்புக்கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன. சில காட்சிகளின் போது மங்கலான குழல் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதுண்டு. இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்துத் தொடங்குவதால் மின்சார ஒளியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கணியான் கூத்தில் இசை மிகவும் முக்கியமாக இடம் பெறுகிறது. மகுடம், ஜால்ரா போன்றவை முக்கியமான இசைக்கருவிகளாகும். மகுடம், டேப் அல்லது தப்பட்டை என்னும் வாத்தியத்தை ஒத்ததாகும். மகுடத்தின் மரம் வேப்ப மரத்தின் வேர்ப்பகுதிகளால் செய்யப்படுகிறது. தோல் கன்றுக்குட்டியின் தோலாகும். கணியான் கூத்தில் முதலில் மகுடம் இசைக்கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவர். ஆசிரியர் பாடும் போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப்பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வருவதுண்டு. கர்நாடக சங்கீதம், கிராமிய இசை போன்ற இசைக்கூறுகளும் கல்யாணி, ஆனந்த பைரவி, முகாரி, பூபாளம், தோடி, நாட்டை, அடாணா, பைரவி போன்ற இராகங்களும் இடம் பெறுகின்றன. உடம்பு முழுவதும் திருநீறு பூசிக்கொள்வதும் கணியான் கூத்தின் ஒரு பகுதியான ‘அம்மன் கூத்தின்’ போது இலை தழைகளைக் கட்டிக் கொள்வதும் குறிப்பிடத்தக்க ஒப்பனையாக உள்ளது. மேலும் சுடலை மாடன் கோவிலில் கணியான் கூத்துக் குழுவினர் ‘வேதாள ஆட்டம்’ என்னும் நிகழ்வினை நடத்தும்போது விகாரமான தோற்றத்துடனான முகமூடியும் அணிந்து கொள்ளுவதுண்டு. மேலும் இரண்டு கணியான்கள் பெண் வேடம் கட்டி ஆடும்போது பெண்களுக்கான ஒப்பனை செய்திருப்பர். நீளமான கூந்தல் கொண்டையும் விளங்கும். கழுத்தில் ஆபரணமும், கைக்கடிகாரமும் கூட கட்டப்பட்டிருக்கும்.
கணியான் கூத்தின் போது சிறு தெய்வக்கதையே பாடி
ஆடப்படுகிறது.
கணியான் கூத்தின் கதையைக் காண்போம்.
கணியான் கூத்து நடக்கும் கோயிலின் தெய்வம் பற்றிய கதையை முதலில் பாடிப் பின் மக்கள் விரும்பும் கதையைப் பாடும் வழக்கம் உள்ளது. நீலி அம்மன் கதை, சுடலைமாடன் கதை, முத்துப்பட்டன் கதை, முத்தாரம்மன் கதை போன்றன குறிப்பிடத்தக்க கதைகளாகும்.
கணியான் கூத்து இசைப்பகுதி மிகுந்து காணப்படும்.
கதைப்பாடல்களைப்
பாடிய பின் அவற்றை ‘அண்ணாவி’
விளக்கிச் செல்வதாகக் கணியான் கூத்து அமைக்கப்பட்டுள்ளது.
(அண்ணாவி - முதன்மை வேடதாரி) பாடலுக்கு நடுவே பேச்சும்
கலந்து வருவதுண்டு. சிறு தெய்வ வழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. கணியான் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் ‘பேயாட்டம்’, ‘அம்மன் கூத்து’ போன்ற நிகழ்வுகள் நாடகக் கூறுகள் அதிகம் கொண்டனவாகும். எனவே விழாவின்போது சடங்குகளைக் கதை நிகழ்ச்சியாகச் செய்து காட்டுவதும் கணியான் கூத்தின் நோக்கமெனக் கொள்ளலாம். இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்து நிகழ்வு தொடக்கம் பெற்று நடக்கிறது. சுடலைமாடன் கோவிலில் வெள்ளி இரவிலும் அம்மன் கோவிலில் செவ்வாய் இரவிலும் கூத்து நடக்கிறது. நடு இரவு நேரத்தில் ‘சாமியாடி’ கணியானைக் கூப்பிடுகிறார். (வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அவரைச் ‘சாமியாடி’ என்று குறிப்பிடுவார்கள். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும்.) இரத்தப் பலிக்கான வேண்டுகோள் விடும் சாமியாடி தன் ஆட்டத்தை நிறுத்துவதற்கும் கணியான் குழுவினர் ஆடுவதற்குமான சூழல் உருவாக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கலையாகக் கணியான் கூத்து விளங்குவதால் அதன் கால அளவு குறித்த கவலை ஏற்படுவதில்லை.
கணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம்
பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை
கூறிப் பாடும் ஆசிரியர் ‘அண்ணாவி’ எனப்படுவார். ஒரு
துணைப்பாடகர், ஜால்ரா இசைப்பவர், மகுடம் எனும் வாத்தியம்
இசைப்போர் இருவர் என அமைவர்.
வழிபாட்டுக் கலையாக விழாக்காலங்களில் இடம்பெறும்
கணியான் கூத்தின் பயன்பாட்டு நிலைகள் என்னவெனக்
காண்போம். |
|