|      தமிழக நாட்டுப்புற ஆட்டக் கலைகளில் மயில் ஆட்டம்
 ஒன்றாகும். விலங்குகளின் அசைவைப் பார்த்த மனிதன் தானும்
 அதே போல் அசைந்து ஆட நினைத்தான். அதுவே நடனக்
 கலையின் தோற்றமாக அமைந்தது. அவ்வாறே மயில் தோகையை
 விரித்து அழகாக அசைந்து வருவதைப் பார்த்த மனிதன் தன்
 நடனத்தில் மயில் நடனத்தைப் புகுத்தினான்.       இந்தியாவின் பல பகுதிகளிலும் “மயூர் நாட்டியம்”
 என்னும் பெயரால் ஆடப்படுகிறது    இந்நடனம்,     பரத
 நாட்டியம் போன்ற செவ்வியல் நடனங்களில் இடம்பெற்று
 வருவதுடன், தமிழக நாட்டுப்புற நடனங்களில் ஒரு நடனமாகவும்
 விளங்கி வருகிறது.       கலைகளின் சிறப்பிடமான தஞ்சையில் வாழும் நாட்டுப்புறக்
 கலைஞர்களின் கூற்றுப்படி, திருச்சியைச் சார்ந்த சுந்தரராவ்
 என்பவரே மயில் நடனத்தை முதன் முதலில் கண்டுபிடித்து
 ஆடியவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிங்காரம் என்னும்
 கோலாட்டக்கார ஆசிரியர் மயில் தோகை சுருங்கி விரியும்
 தன்மை இல்லாததை மாற்றி, மயில் தோகை இயந்திரத்தை
 அமைத்து, ஆடுபவர் குனிந்தால் தோகை விரிவதற்கேற்பவும்,
 நிமிர்ந்தால் தோகை சுருங்கிக் கொள்வதற்கு ஏற்பவும் அமைத்தார்.
 இவரிடமிருந்து தஞ்சையைச் சார்ந்த வித்துவான் என். சின்னையா
 என்பவர் இந்நடனத்தைக் கற்றுக் கொண்டு புகழடையச் செய்தார்.
 இன்றும் இந்நடனம் தஞ்சை கோந்தளக்காரத் தெருவில் வசிக்கும்
 மராட்டியக் குடும்பங்களின் கலையாக விளங்கி வருகிறது.6.4.1 மயில் ஆட்டமும் பரத நாட்டியமும்      நாட்டுப்புறக் கலையில் புகழடைந்த பிறகு மயில் நடனம்
 பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் இடம் பெறத் தொடங்கியது.
 பரதநாட்டியத்தில் பரதமாடும் பெண் கலைஞர் இம்மயில்
 நடனத்தைச் செவ்வியல் முறையில் நிகழ்த்துவார். மயில் போன்ற
 முகமூடி அணியாமல், மயிலின் நிறத்தைப் போலச் சட்டையும்,
 காலுறையும் அணிந்து கொள்வர். இடுப்பில் சுருங்கி விரியும்
 மயிலிறகைக் கட்டிக் கொண்டு இரு கைகளையும் மயிலின்
 மூக்கைப் போல பாவனை செய்து கொண்டு, மயில் தயங்கி தயங்கி
 வருவதைப் போலவும், மகிழ்ச்சியில் தோகையை விரித்து ஆடுவது
 போலவும், இரையைத் தேடுவது போலவும், பாம்பைத் தாக்க
 முற்படுவது போலவும் அமைப்பர். இதற்கான பாடல்கள் புன்னாக
 வராளி இராகத்தில் அமையும். பக்க இசைக்கேற்ப மயில் ஆடுவது
 போல, உடலை அசைத்தும், கால் அடவுகளைச் செய்தும் மயில்
 ஒன்று மேடையில் ஆடுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்துவர். 6.4.2 மயில் ஆட்டமும் நாட்டுப்புற நடனமும்      நாட்டுப்புற நடனத்தில் மயில் நடனத்தை ஆண்களும்,
 பெண்களும் ஆடுகின்றனர். நாட்டுப்புற நடனத்தில் இந்த
 மயில்நடனம் செவ்வியல் முறையிலிருந்து மாறுபடுகிறது.       மயிலின் உடல் களி மண்ணினால் செய்யப்படுகிறது. களி
 மண்ணை நன்கு பதப்படுத்தி அதன் மேல் தாள், காடாத்துணி,
 சாக்கு, பசை போன்றவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டி
 அவை காய்ந்து உலர்ந்த பின் இரண்டாக அறுத்துப்
 பிளந்தெடுத்துப் பின் இவைகளை நூலினால் தைப்பர். இந்த நூல்
 வெளியில் தெரியாமல் இருக்க மேலும் தாள், காடாத் துணி
 ஒட்டிய பிறகு மேடு, பள்ளம் இல்லாமல் இருக்க சாக்குப் பவுடர்,
 கோந்து, வச்சிரம், நீர் சேர்ந்த கலவையைக் கூட்டின் மேல்
 தடவிப் பள்ளம், மேடு இல்லாமல் செய்வர். பிறகு மயிலின் உடல்
 நிறத்திற்கு ஏற்பப் பச்சை, நீல வண்ணத்தைத் தடவுவர். பிறகு
 மயிலின் கூட்டை உடம்பில் சுமக்கும் வண்ணம் காடாத்
 துணியைக் கட்டுவர். இதுவே மயில் கூடு செய்யும் முறையாகும்.       கெட்டியான காகித அட்டையை மயில் இறகுகள் போல்
 இரண்டாக வெட்ட வேண்டும். அட்டையின் மேல் தாள், காடாத்
 துணியை ஒட்டிய பிறகு, பசை கலந்த சாக்குத் தூள் கலவையைப்
 பூச வேண்டும். மயிலின் இறக்கைகள் போல் தோன்றும் படி
 வண்ணமும் சித்திர வேலைப்பாடும் வரையப்பட வேண்டும்.
 இவ்வாறு செய்த மயில் இறகை ஆடுபவர் தோள்பட்டைகளில்
 கட்டிக் கொண்டு ஆடுவர்.       மயிலின் தலை, உடல் மற்றும் தோகையைச் செய்த
 முறையிலேயே களிமண் அச்சிலிருந்து தாள், காடாத் துணி, சாக்கு
 முதலியவைகளை ஒட்டிச் செய்யப்படுகிறது. இம் மயிலின்
 தலையில் மயிலிறகு கோர்க்கப்பட்ட கம்பிகள் கொண்டை போல்
 அமைக்கப்படுகின்றன. மயிலின் கண்ணிற்கு இரு குவிவில்லை
 கண்ணாடி பொருத்தப்படுகிறது. இரண்டாக வெட்டிய இரும்புத்
 தகட்டில் மயில் மூக்கு செய்யப்பட்டுப் பொருத்தப்படுகிறது.
 மயிலின் அலகு மூடித் திறக்கும் வகையில் கயிற்றைப் பொருத்தி
 அவற்றைத் தலைக்குள் செலுத்துவர். இக்கூட்டைத் தலையில்
 அணிந்து ஆடும் கலைஞர்கள் கைகளால் கயிற்றை இழுக்கும்
 பொழுது மயில் அலகைத் திறந்து மூடுவது போல் இருக்கும்.
 மேலும் மயிலின் தலைக்கூட்டிற்குப் பல வண்ண நிறங்கள்
 பூசப்படுகின்றன. இக்கூட்டின் வட்ட வடிவக் கழுத்துப் பகுதியில்
 உள்ள உள்ளீடற்ற பகுதியை ஆடும் கலைஞர் தன் தலையில்
 பொருத்திக் கொண்டு ஆடுவர். கழுத்துப் பகுதியின் விளிம்பில்
 நீலநிறத் துணி இணைத்துத் தொங்கவிடப்பட்டிருக்கும். இத்துணி
 ஆடும் கலைஞனின் முகத்தைக் கழுத்து வரை மறைத்துக்
 கொள்ள உதவுகிறது.       மயிலின் உடல் கூட்டின் அடிப்புறத்தில் ஒரு சிறிய அரை
 வட்ட தகடு பொருத்தப்பட்டிருக்கும். இது பக்க வாட்டில்
 இயங்கும் வண்ணம் இருக்கும். இவற்றில் மயிலிறகுக் கட்டுகள்
 செருகப் பட்டிருக்கும். இத்தகரக் குழல்கள் ஒரு கம்பியில்
 இணைத்துச் சொருகப்பட்டிருக்கும். இது மயிலின் உடல் கூட்டின்
 அடிப்புறத்தில் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். இவ்வாறு
 கட்டப்பட்டிருப்பதால் ஆடுபவர் குனிந்து ஆடும் பொழுது
 தோகை விரிந்தும், நிமிர்ந்து ஆடும் பொழுது மயில் இறகு
 குவிந்தும் இயங்கும் வகையில் இயந்திரம்அமைக்கப்பட்டிருக்கும்.       கழுத்துப் பகுதியில் நீல நிறத் துணி தொங்கவிட்டிருப்பது
 போல, உடல் கூட்டின் விளிம்பில் பச்சை நிறத் துணி
 தொங்கவிடப்படும். ஆடுபவரின் சலங்கை மட்டும் வெளியில்
 தெரியுமளவிற்கு இத்துணி தொங்கவிடப்படும். இவ்வாறு பல்வேறு
 வேலைப்பாடுகள் செய்யப்படுவதால் மயிலே தோன்றி ஆடுவது
 போலக் காட்சியளிக்கும். 6.4.3 இசைக்கருவிகள்      நாட்டுப்புற நடனமான மயில் நடனத்தில் நையாண்டி மேள
 இசை பக்க இசையாக விளங்குகிறது. இதில் இரு நாகசுரங்கள்,
 இரு தவில்கள், இரு பம்பைகள், ஒரு கிடுகிட்டி போன்ற இசைக்
 கருவிகள் இருக்கும். இப்பக்க இசைக்கேற்ப அசைவுகள்
 தலையசைப்பு, தோகையை     விரித்தல் போன்றவற்றைச்
 செய்கின்றனர்.       மேலும் மயில் நடனம் ஆடுபவர், எதிரில் உள்ளவருக்கு
 மாலை போடுதல், தரையில் உள்ள பணத்தை எடுத்தல், மயிலின்
 வாயில் உட்பகுதியில் முன்னரே மறைவாகப் பொருத்தப்பட்டுள்ள
 சிறிய இரப்பர் குழாயைக் கலைஞர் தன் வாயில் வைத்துக்
 கொண்டு மயில் தன் அலகால் நீரை உறிஞ்சிக் குடிப்பது போன்று
 பல வியக்கத்தக்க செயல்களைச் செய்வது போன்ற நிகழ்ச்சியை
 மயிலாட்டத்தின் இடையில் அமைத்துப் பார்வையாளரை
 மகிழ்விப்பர்.       இன்றைய     நிலையில்     மயிலாட்டம்     தனியாக
 ஆடப்படுவதில்லை. கரகம், காவடி, பொய்க் குதிரை போன்ற
 நாட்டுப்புற நடனங்களுடன் இணைந்து நிகழ்த்தப்படுகிறது.
 தற்போது மயில் ஆட்டம் தஞ்சை, மதுரை, சேலம், பாண்டிச்சேரி,
 சென்னை போன்ற மாவட்டங்களில் இன்றும் சிறப்பாக நடந்து
 வரும் ஒரு கலையாகத் திகழ்ந்து வருகிறது.  |