1.1 பழந்தமிழ் நாட்டில் இறை வழிபாடு


    தெய்வ வழிபாடு தோன்றிய சூழலைப் பலவாறு
ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். என்றாலும் மனிதர்கள்
இயற்கைச் சக்திகளாகிய இடி, மின்னல், காற்று, மழை,
நிலநடுக்கம், கடல்கோள் ஆகியவற்றிலிருந்து தங்களைக்
காப்பாற்றிக் கொள்ளக் கடவுள் வணக்கத்தை மேற்கொண்டனர்.
மேலும் புலி முதலிய விலங்குகளிலிருந்தும் தங்களைக்
காப்பாற்றிக் கொள்ளவும் கடவுள் வணக்கத்தை மேற்கொண்டனர்.
எனவே மனிதர்கள் தங்கள் அச்சத்தைப் போக்கிக் கொள்ள
வழிபாட்டை மேற்கொண்டனர் எனலாம். இந்த வழிபாடு
முழுமுதல் தெய்வமாகிய சிவ வழிபாடாகவும், எவை அச்சத்தைத்
தந்தனவோ அவற்றை வழிபடும் சிறு தெய்வ வழிபாடாகவும்
அமைந்தது. இதில் முழுமுதல் தெய்வ வழிபாட்டில் சைவம் சிவ
உருவத்தை அதாவது லிங்க வடிவத்தைக் கடவுள் வடிவாகக்
கொண்டு விளங்கியது.

1.1.1 சிவ வழிபாடு

    சிவ வழிபாடு மிகவும் தொன்மைக் காலத்திலேயே உலகின்
பல பகுதிகளிலும் விளங்கியது. இதைப் புதைபொருள்
ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி உள்ளன. சிந்து நதிப்
பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களில் சிவ
லிங்கங்கள் இடம் பெற்றன. எகிப்து நாட்டுப் பழஞ் சமாதிகளில்
சிவ லிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஸ்காட்லாந்திலும்
சிவ லிங்க வடிவங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. இத்தகைய
சான்றுகளால் சிவ வழிபாடு உலகளாவியது என்பதும்,
தொன்மையானது என்பதும் புலனாகும்.

    வடவேங்கடத்திற்கும் தென்குமரிக்கும் இடைப்பட்ட
நிலப்பரப்பு பழந்தமிழகமாகும் என்பது முடிந்த முடிவு.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்”
என்பன தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தின் வரிகளாகும்.
இத்தகைய நிலப்பரப்பில் இந்தியச் சமயங்களான சைவம்,
வைணவம், சமணம், புத்தம், சாங்கியம் ஆகிய சமயங்கள்
நிலவி வந்தன. அவ்வச் சமயங்களுக்குரிய தெய்வ வழிபாடுகள்
காலம் காலமாக வழங்கி வந்தன. சிவ உருவத்தை மையமாகக்
கொண்டு வழிபாடுகளை நடத்தியது சைவ சமயமாகும்.
திருமாலின் உருவத்தை வழிபட்ட சமயம் வைணவமாகும்.
அருகனை வழிபட்டது சமண சமயம், புத்தரையே தெய்வமாக்கி
வழிபட்ட சமயம் பௌத்தம். மெய்ப் பொருளாம் அறிவுக்கு
வடிவம் கொடுத்து வழிபட்ட சமயம் சாங்கியம் ஆகும்.
இத்தகைய சமய வழிபாடுகளில் தமிழகத்தில் தலைமை
சான்றதும் பரந்துபட்டு நடந்ததுமாகிய வழிபாடு சிவ
வழிபாடாகும். சிவ லிங்கத்தோடு சிவனின் சக்திகளாகிய முருக
வழிபாடும், சக்தி வழிபாடும் தமிழ்நாட்டில் வழங்கி வந்தன.
இவ்வழிபாடுகளில் பெரும்பாலும் வேலே வழிபடு பொருளாக
விளங்கிற்று.

    இவை தவிர இந்திரன், ஐம்பூதங்கள், நந்தி ஆகியவையும்
வழிபாட்டுக்குரிய தெய்வ வடிவங்களாகக் கொள்ளப் பெற்று
வணங்கப் பெற்றன. இத்தகைய சிவ வழிபாட்டு வரலாற்று
முறைமை அறிய வேண்டிய ஒன்றாகும்.