பழந்தமிழ் நாட்டு வரலாற்றில்
கி.பி.6ஆம் நூற்றாண்டு
வரை உள்ள காலத்தைச் சங்கம் மருவிய
காலமாகக்
குறிப்பிடுவர். ஏறக்குறைய கி.பி.2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
முதல் 6ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்று நிகழ்ச்சிகளில்
குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் அல்லது முறையான வரலாற்று
நிகழ்ச்சிகள் களப்பிரர் ஆட்சியால் கிடைக்காத காரணத்தால்
அக்காலத்தை இருண்டகாலம் என்பர். இக்காலத்திற்குப் பிறகு
தமிழகத்தில் மூவேந்தர்களின் ஆட்சியும், பல்லவர்களின்
ஆட்சியும் சிறப்புப் பெற்றன. பழந்தமிழ் நாட்டின் ஒருபகுதியான
தொண்டை நாட்டில் பல்லவர்கள் ஆட்சி புரிந்து
வந்தனர்.
தென்பாண்டி நாட்டில் பாண்டிய வேந்தர்கள் ஆட்சி புரிந்து
வந்தனர். காவிரி பாயும் சோழநாட்டில் சோழர்கள்
ஆட்சி
புரிந்தனர். சேர மன்னர்கள் மலைநாட்டில் குறுநில மன்னர்களாக
வாழ்ந்து வந்தனர். ஏறக்குறைய 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம்
நூற்றாண்டு வரை இவ் அரசர்கள் சிறப்புக்களைப் பெற்றுத்
தமிழகத்தில் ஆண்டனர். இக்காலக் கட்டத்தின் தொடக்கத்தில்
தமிழகத்தில் சமண சமயம் புகழ் பெற்று ஓங்கியிருந்தாலும்
மெல்ல மெல்ல அதன் செல்வாக்குக் குறைந்து சைவ சமயம்
சிறப்பாக வளரத் தொடங்கியது.
பழந்தமிழ் நாட்டில் 6, 7ஆம் நூற்றாண்டுகளில்
திருமுறை ஆசிரியர்களான திருமூலர், திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய பெருமக்கள் தோன்றிச் சைவ
சமயத்தை வளர்த்தார்கள். பிற சமய வழிபாடுகள், கொள்கைகள்
சைவ சமயப் பெரியார்களால் வெற்றி காணப்பெற்றுச் சைவம்
தழைத்தோங்கியது. இக்காலக் கட்டத்தில் தோன்றியவைகளே
திருமுறை இலக்கியங்கள் ஆகும். திருமுறைகளில் காலத்தால்
முந்தியது காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் என்றாலும்
நூல் வடிவில் திருமந்திரம் முதன்மை பெறுகிறது.
6ஆம்
நூற்றாண்டின் இறுதியில் திருமூலரால் பாடப்பெற்ற பாடல்கள்
திருமந்திர நூலாகத் தொகுக்கப்பட்டன. அதனையடுத்து 7ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர் ஆகியவர்கள் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் ஏழு
திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. பின்னர்
9ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த (கால
வேறுபாடு உண்டு)
மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் இரண்டும்
எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டன. எனவே 6ஆம்
நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுவரை இடைப்பட்ட
காலத்தைத் திருமுறைக் காலம் எனக் கூறுவர். இந்நூற்றாண்டில்
சைவ சமயம், சிவவழிபாடு ஆகியவை தமிழகத்தில்
மிகுந்த
செல்வாக்குப் பெற்றிருந்தன. சைவத் திருக்கோயில்களும்,
திருவிழாக்களும் உன்னத நிலையில் இருந்தன.
1.4.1
திருமந்திரத்தில் சிவ வழிபாடு
சிவயோகியாக வாழ்ந்த
திருமூலரின் பாடல்கள்
திருமந்திரம் என்ற
நூலாயிற்று. இத்திருமந்திரம் பத்தாம்
திருமுறையாகும். இந்நூல் 9 தந்திரங்கள் என்ற நிலையில் 3000
பாடல்களைக் கொண்டது. இப்பொழுது கிடைத்திருப்பவை 3100
ஆகும். “மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்”
என்று
திருமந்திரப் பாடலிலேயே
இடம் பெற்றிருந்தாலும் 100
பாடல்கள் அதிகமாகக் காணப்படுவதன் காரணம் சில பாடல்கள்
இருமுறை மூன்றுமுறை நூலில் இடம் பெற்றிருப்பதாகும். சில
பாடல்கள் இடைச்செருகலாகவும் உள்ளன. நூலில் உள்ள
ஒன்பது தந்திரங்களும் சிவாகம நூல்களின் நுண்பொருள்களைத்
தமிழில் தருவன ஆகும்.
சரியை,
கிரியை, யோகம், ஞானம் என்ற
நான்கு
நெறிகளாகச் சிவ வழிபாட்டைச் சிவாகமங்கள் கூறுகின்றன.
அவற்றைத் தத்துவ அடிப்படையில்
திருமந்திரம்
குறிப்பிடுகின்றது. பொதுவாகக் குறிப்பிட்டால் இதற்கு முன்னால்
கிடைக்கப் பெற்ற சிவவழிபாட்டுச் செய்திகள் வரையறையாகக்
கிடைக்கப் பெறவில்லை. சிறுசிறு
நிகழ்ச்சிகளாகவே
கூறப்பெற்றன. ஆனால் திருமந்திரம்தான்
வழிபாட்டினைத்
தொகுத்தும் வகுத்தும் கூறுகின்ற முதல் நூலாகும். நூலில்
உள்ள செய்திகளை முழுவதுமாகக் குறிப்பிட முனைந்தால் தனி
ஒரு நூலாக ஆகிவிடும்.
எனவே திருமந்திரத்தில்
காணப்படுகின்ற முக்கியமான செய்திகள் வரையறையாகத்
தரப்படுகின்றன.
-
சிவன்
ஒருவனே எல்லார்க்கும் தலைவன்.
-
சிவனோடு
ஒக்கும் தெய்வம் தேடியும் இல்லை.
-
நான்முகன்,
திருமால், சிவன் ஆகிய மூவரும் ஒருவரே
ஆவர்.
-
சிவன்
ஆகமப் பொருளை நந்திக்கு உபதேசித்தார்.
நந்தியம் பெருமான் சனற்குமாரர் முதலான நால்வர்க்கு
உபதேசித்தார். அவ்வழித் திருமூலரும் உபதேசம் பெற்றார்.
-
சிவஞானத்தைப்
பெற விரும்புபவர்கள்
சைவ
சாதனங்களால் உள்ளும் புறமும் தங்களைத் தகுதியாக்கிக்
கொள்ள வேண்டும்.
-
சைவ
சித்தாந்தத் தத்துவப் பொருள்கள் பதி, பசு, பாசம்
என்ற மூன்றின் அடிப்படையில் கூறப்படுவன ஆகும்.
-
யாக்கை,
செல்வம், இளமை ஆகியவை நிலையாமை
உடையனவாகும்.
-
பிறனில்
விழையாமை, புலால் உண்ணாமை ஆகியவை சிவ
வழிபாட்டில் மிக இன்றியமையாதன ஆகும்.
-
கல்வி,
கேள்விகளில் அறம் செய்வதில் சைவப் பெருமக்கள்
சிறந்து விளங்க வேண்டும்.
-
அட்டாங்க
யோகம் முதலிய யோகங்கள்
சிவனருள்
சிந்தையை வளர்க்கும்.
-
உடம்பை
வளர்த்து உயிரை வளர்க்க
வேண்டும்.
உடம்புக்குள்ளே உயிரோடு இறைவன் கலந்திருக்கிறான்.
எனச் சைவ சமயத்தின் உண்மைநிலை பலவாறு வகுத்துத் தரப்
பெற்றுள்ளது. சிவ வழிபாட்டில் மலர் கொண்டு அர்ச்சிப்பது
சிறப்பிடம் பெற்றது.
யாவர்க்குமாம் இறைவற்கு
ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே - 109
என்ற திருமந்திரப் பாடல்
அர்ச்சனை வழிபாட்டை வலியுறுத்தும்.
சிவ வழிபாட்டில் ஐந்தெழுத்தை மந்திரமாகக் கொண்டு வழிபடும்
முறையைத் திருமந்திரம் பெரிதும் வலியுறுத்துகிறது.
அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல்
அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும்
- 44
என்று சிவாயநம
என்ற ஐந்தெழுத்தைத் திருமந்திரம்
பெருமையாகப் பேசுகிறது. தத்துவ அடிப்படையில் சிவபெருமான்
உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் வழிபடக்
கூடியவன் என்பதைத் திருமந்திரம்
விளக்குகிறது. எனவே
உருவ வழிபாடு திருமந்திரத்தால்
வலியுறுத்தப் பெறுகிறது
எனலாம்.
பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதே சிவ வழிபாடாகும்.
அன்பும் சிவமும் இரண்டென்பார்
அறிவிலாதார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
தெய்வீக உணர்வைப் பெறலாம் என்பது திருமந்திரத்தின்
கொள்கையாகும். இவ்வாறு தமிழ் ஆகமம்
என்று போற்றப்
பெறுகின்ற திருமந்திரம்
பலவித நிலையில் சிவ வழிபாட்டுச்
செய்திகளையும், தத்துவங்களையும் விளக்குகிறது எனலாம்.
1.4.2
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சிவ வழிபாடு
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று
திருமுறைகளாக
அமைந்த பாடல்கள் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள்
ஆகும். திருஞானசம்பந்தரின் காலம் 7ஆம் நூற்றாண்டின்
முதற்பகுதி ஆகும். திருஞானசம்பந்தர்
தமிழகத்து ஊர்கள்
தோறும் யாத்திரை சென்று அந்தந்த மக்களோடு
தானும்
வாழ்ந்து அங்குள்ள திருக்கோயில் இறைவர்களைப் பாடிய
பாடல்களே தேவார திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன.
ஒவ்வொரு திருக்கோயில் இறைவனுக்கும் பத்துப் பாடல்களைக்
கொண்ட பதிகத்தை ஞானசம்பந்தர் பாடினார். அவருடைய
பாடல்கள் இறைவனின் பெருமைகளை, அவர் காலத்துக்
கடவுள் கொள்கையைக் காட்டுகின்றன.
இறைவன்
உயிர்களிடத்தில் உயிர்க்கு உயிராய், உடனாய் நின்று, காண்பன
கண்டும் காட்டியும் உதவுகிறான் என்பது ஞானசம்பந்தரின்
கருத்தாகும்.
உயிர்க்குயிராய் அங்கங்கே
நின்றான் - (182-4)
ஐம்பூதங்களாயும், மூன்று உருவமாகியும், ஐந்து தொழில்களை
உடையவனாகவும் இறைவன் விளங்குகிறான்
என்று
ஞானசம்பந்தர் குறிப்பிடுவார்.
மறையவன் காற்றோடு தீ
மலையவன் விண்ணாகி
மண்ணுமவன் - (109.6)
என்றும்,
பேணு மூன்று உருவாகிப்
பேருலகம் படைத்து
அளிக்கும் பெருமான் - (132.5)
என்றும் குறிப்பிடுவார். இதுபோல இறைவனைப் பற்றிய தத்துவக்
கருத்துகளைத் தம் பாடலில் குறிப்பிடுகின்றார். இதன்
மூலம்
தேவார காலத்தில் தத்துவ அடிப்படையில்
இறைவனைக்
காணும்நிலை பெருமை பெற்றிருந்தது என
அறியலாம்.
உயிர்களைப் பற்றியும், உயிர்கள் அனுபவிக்கக்
கூடிய
வினைகள் பற்றியும் அவ்வினைகள் ஏற்படுவதற்குக் காரணம்
உயிர்களைப் பற்றி நிற்கும் மலம் என்பதையும் ஞானசம்பந்தர்
தம் பாடல்களில் வலியுறுத்துகிறார்.
ஞானசம்பந்தரின்
பாடல்களில் தத்துவக் கருத்துகளோடு அடியார்களைப் பற்றிய
வரலாற்றுக் குறிப்புகளும் காணப்படுகின்றன.
எனவே
சிவபெருமானைப் போற்றுவது போலவே அடியார்களைப்
போற்றி வணங்கும் முறையும் சிவ வழிபாட்டில்
காணப்
பெற்றதை அறியலாம்.
கோயில் வழிபாடு
சிறந்திருந்தது
என்பதை
ஞானசம்பந்தரின் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
திருக்கோயில்களைப் பற்றியும் அவை அமைந்துள்ள இயற்கைச்
சூழலைப் பற்றியும் ஞானசம்பந்தர் பாடுவதால் கோயில் வழிபாடு
பழந்தமிழ் நாட்டில் 7ஆம் நூற்றாண்டில் சிறப்புடன் திகழ்ந்தது
என அறியலாம். ஞானசம்பந்தரின் திருப்பதிகங்களில் திருநீற்றுப்
பதிகம், நமசிவாயப் பதிகம் ஆகியவை
சிவவழிபாட்டின்
தொன்மை நிலையை எடுத்துக் காட்டுகின்றன.
“மந்திரமாவது நீறு” என்றும்,
“துதிக்கப் படுவது நீறு”
என்றும் திருநீற்றின் பெருமையை ஞானசம்பந்தர் அறிவிப்பார்.
அதுபோல நமசிவாய என்ற ஐந்தெழுத்தின் பெருமையைப்
பலவாறு எடுத்துக் காட்டுவார்.
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
என்றும் அவர் போற்றுகிறார். ஞானசம்பந்தர்
காலத்தில்
பல்வேறு திருவிழாக்கள் நடந்தமை அவருடைய பூம்பாவைப்
பதிகத்தில் தெரிய வருகிறது. ஓணவிழா,
கார்த்திகைத்
திருவிழா, ஆதிரைத் திருநாள், தைப்பூசத்
திருநாள்,
பங்குனி உத்திரத் திருநாள் என்பன
போன்ற விழாக்கள்
நடைபெற்றன என்பது அப்பதிகத்தால் தெரிய
வருகிறது.
இவ்வாறு 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 16 ஆண்டுக்
காலமே வாழ்ந்த திருஞான சம்பந்தரின் தேவாரப் பாக்களில்
சிவபெருமானின் தத்துவங்களும் திருக்கோயில் வழிபாடுகளும்
திருநீற்று ஐந்தெழுத்தின் பெருமைகளும், திருவிழாக்களைப்
பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
1.4.3
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ வழிபாடு
ஞானசம்பந்தரோடு ஒத்த காலத்திலும் அவருக்கு முன்னே
தோன்றி அவருக்குப் பின்னரும் வாழ்ந்த திருநாவுக்கரசரின்
தேவாரப் பாடல்கள் 4, 5, 6 திருமுறைகளாக
வைக்கப்
பெற்றுள்ளன. இவருடைய காலமும் 7ஆம்
நூற்றாண்டு
என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
பிற சமயத்தில்
வாழ்ந்தாலும் திருவாளன் திருநீற்றைத் தன்
சகோதரியார்
அளித்ததால் திருவருள் பெற்ற திருநாவுக்கரசர்
தொண்டு
நெறிக்குச் சான்றாக விளங்கினார். இவருடைய பாடல்களில்
யோகநெறியும் ஞான நெறியும் பெரிதும் இடம் பெற்றுள்ளன.
பொறி புலன்களை ஒடுக்கி, அகக் கண்ணால் இறைவனைக்
கண்டு வழிபடுகின்ற நெறியே யோக நெறியாகும்.
உயிராவணம் இருந்து உற்றுநோக்கி
உள்ளக்கிழியின் உருவெழுதி உயிராவணம்
செய்து
- (239.1)
என்பது அவர் கருத்து. ஞானநெறி என்பது
இறைவனின்
தத்துவத்தை உணர்ந்து மெய்ப் பொருளை அறிந்து கொண்டு
வழிபடுதலாகும்.
ஞானத்தால் தொழுவார்கள்
ஞானிகள் - (205. 5)
என்பது அவர் வாக்கு. நாவுக்கரசரின் பாடல்களில்
7ஆம்
நூற்றாண்டு சிவ வழிபாட்டு
முறைகள் விரிவாகக்
காணப்பெறுகின்றன. அவற்றுள் சில கீழே காட்டப் பெற்றுள்ளன.
-
திருக்கோயில்
இல்லாத ஊர் காடு போன்றதாகும்.
-
திருவெண்ணீறு
பூசி வணங்காதவர் பிணத்தோடு ஒப்பர்.
-
ஆவுரித்துத்
தின்பவரேனும் சிவபெருமானை வணங்கிப்
போற்றினால் அவரும் அடியாரே.
-
நாள்தோறும்
பொழுது புலர்வதன்முன் திருக்கோயில்
சென்று வழிபட வேண்டும்.
-
பூமாலை
சாற்றியும், பாமாலை பாடியும்,
தலையாரக்
கும்பிட்டும் இறைவனை வணங்க வேண்டும்.
-
நாமார்க்கும்
குடியல்லோம், இறைவனுக்கே அடிமையாவோம்.
-
ஒருவரைத்
தஞ்சமென்று எண்ணாது இறைவனின்
திருவடியினைத் தஞ்சம் அடைய வேண்டும்.
-
இறைவன்
திருஆடல் கண்டு வழிபடும் பேறு கிடைத்தால்,
மனிதப் பிறவியும் வேண்டலாம்.
-
உடம்பைக்
கோயிலாகவும், மனத்தை அடிமையாகவும்,
அன்பே நெய்யும் பாலாகவும் கொண்டு
இறைவனைப்
பூசிக்க வேண்டும்.
-
இறைவனைத்
தலைவனாகக் கொண்டு உயிர்கள் தங்களைத்
தலைவியாகக் கொண்டு காதல் வாழ்வு
முறையில்
இறைவனைக் கண்டு வழிபடலாம்.
-
துன்பத்தைத்
தீர்க்கும் மருந்து திருவைந்தெழுத்தாகும்.
-
கல்லைக்
கட்டிக் கடலில் போட்டாலும் துணையாவது
நமசிவாயவே.
-
நிலையாமையை
உணர்ந்து இறைவனை வழிபட வேண்டும்.
-
இறைவன்
கனியைக் காட்டிலும், கரும்பைக் காட்டிலும்
சிறந்தவன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவனின் பெருமைகளும்,
தத்துவங்களும் வழிபாட்டு முறைகளும் காணப் பெறுகின்றன.
1.4.4
சுந்தரர் தேவாரத்தில் சிவ வழிபாடு
நம்பியாரூரர்
எனப்படும் சுந்தரர்
பாடிய பாடல்கள்
ஏழாம் திருமுறை ஆகும். இறைவனின் தோழராக விளங்கிய
சுந்தரர் இறைவனுடைய திருவருளை நேரில் அனுபவித்தவர்.
இறைவனின் திருவருள் நம்பியாரூரரின் வாழ்வில் இரண்டறக்
கலந்தது என்றே கூறலாம். தேவார
ஆசிரியர்கள்
முன்னவர்களைப் போலத் தத்துவங்களையும்,
திருநீற்று,
ஐந்தெழுத்துச் சிறப்புகளையும்
இவருடைய பாடல்கள்
வலியுறுத்தினாலும், இவருடைய பாடல்களில்
சிறப்பிடம்
பெறுவது தொண்டர்களை வழிபடுதல் ஆகும். இவருடைய
திருத்தொண்டத் தொகை
என்னும் பதிகம் 60
சிவனடியார்களை அடையாளம் காட்டுவதாகும். நடமாடும்
தெய்வங்களாம் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்தால் அது
இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும் என்பதை வலியுறுத்துவது
இவருடைய பாடல்களின் தனித் தன்மையாகும்.
எழுத்துகள் எல்லாவற்றிற்கும்
முதலாக அகரம்
இருப்பதைப் போல உலகத்துக்கு முதல்வனாக
இறைவன்
உள்ளான். உயிர்களோடு இறைவன் உடனாகவும், வேறாகவும்,
கலந்தும் இருக்கிறான். பழத்தின் சுவை போல, கண்ணிடை
மணிபோல உள்ளான். இறைவன்பால் அன்பில்லாத வழி
அவனுடைய திருவடி ஞானத்தைப்
பெற முடியாது
என்றெல்லாம் இறைவனின் பெருமைகளைச்
சுந்தரர்
பாடல்களில் காணமுடிகிறது.
ஐந்தெழுத்தின் பெருமைகளை,
உனை நான் மறக்கினும் சொல்லும்நா
நமச்சிவாயவே
என்கிறார். குற்றமே செயினும் குணமாகக்
கொள்ளும்
இறைவனிடத்தில் தீராத அன்புடையவர்களாக
இருக்க
வேண்டும் என்பது சுந்தரரின் வழிபாட்டு
நெறியாகும்.
உள்ளன்போடு இறைவனை வழிபட்டால் அவன்
நமக்கு
ãø¢ð´ñ¢ துன்பங்களை நீக்குவதோடு,
தோழனாக நின்று
ஏவும் பணிகளைச் செய்வான் என்பதை,
குண்டையூர் சில நெல்லுப்
பெற்றேன்
அவை அட்டித்தரப் பணியே
என்று அவர் கூறுகின்ற திருவாக்கால்
அறியலாம்.
பாடுவார்க்கும் பணிந்து ஏத்துவார்க்கும் இறைவன் வயிற்றுப்
பசியைப் போக்குவான் என்பதும் சுந்தரர் கண்ட முடிவாகும்.
இவ்வாறு 100 திருப்பதிகங்களைக் கொண்ட
சுந்தரர்
தேவாரத்தில் சிவ வழிபாட்டின்
பெருமைகளை உணரலாம்.
1.4.5
மாணிக்கவாசகர் பாடல்களில் சிவ வழிபாடு
தேவார
ஆசிரியர்களுக்கு முன்னவர் என்றும், பின்னவர்
என்றும் கால ஆராய்ச்சியில்
வேறுபட்டு நிற்கும்
மாணிக்கவாசகர் 7ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பதே
பெரும்பாலானோர் முடிவாகும். மாணிக்கவாசகரின் பாடல்களான
திருவாசகமும், திருக்கோவையாரும்
எட்டாம் திருமுறையாக
வைக்கப் பெற்றுள்ளன.
“அவனருளாலே அவன்தாள் வணங்கி”
அருள்பெற்ற
மணிவாசகப் பெருமான் பாடிய பாடல்களில் சிவ தத்துவக்
கருத்துகள் பெரிதும் காணப் பெறுகின்றன. சிவ தத்துவத்தை
உணர்ந்து சைவர்கள் வழிபாட்டைச் செய்தார்கள் என்பதை
அவரின் பாடல்கள் மூலம் அறியலாம்.
இறைவனின்
பெருமைகளை அவருடைய முதல் பதிகமான சிவபுராணம்
ஒவ்வொரு அடியிலும் தத்துவங்களாகக் குறிப்பிடுகின்றது.
-
கறந்த
பால் கன்னலொடு நெய் கலந்தாற்போல் அடியார்
உள்ளத்திருப்பான்.
-
இமைப்பொழுதும்
நெஞ்சத்தை விட்டு அகலாதிருப்பான்.
-
வேத
ஆகமங்களாக இருப்பான்.
-
பாசமாம்
பற்றறுக்கும் சிறந்த தலைவன்.
-
மலங்களை
அறுக்கின்றவன்.
-
வினைப்பிறவி
சாராமே காப்பவன்.
-
சொல்லிய
பாட்டின் பொருளுணர்ந்து சொல்லி வழிபட்டால்
சிவபுரத்தில் கொண்டு சேர்ப்பவன்.
என்று பலவாறாகச் சிவபெருமானின்
பெருமைகளைச்
சிவபுராணம் எடுத்துக் காட்டுகிறது.
வேண்டத்தக்கது அறிந்து,
வேண்டும் பொருளை
உயிர்களுக்கு அளிக்கின்ற இறைவன் தத்துவங்களுக்கு எல்லாம்
அப்பாற்பட்டவன் என்பதும், அவனை வழிபட ‘மெய்தான்
அரும்பி விதிர்விதிர்த்து அவனுடைய திருவடிக்
கீழ்
வணங்கினால் திருவருள் பெறலாம்’ என்பதும்
மணிவாசகர்
காட்டும் வழிபாடாகும்.
அடியார்களைப் போல
நடித்து இறைவனுடைய
திருவடியை வழிபட முனைந்தால் அந்த நடிப்பே உண்மையாகி
இறையருளைக் கூட்டுவிக்கும் என்பதும்
அவர் கண்ட
வழிபாடாகும். பால் நினைந்தூட்டும் தாயினும் சால அன்பு
காட்டுகின்ற இறைவனை நீரும் பூவும் கொண்டு வழிபட்டால்
முக்தி கிடைக்கும் என்பதும் அவர் கூறும் வழி முறையாகும்.
வானாக, மண்ணாக, காற்றாக விளங்கும்
இறைவனை,
அம்மானை விளையாடுகின்ற போதும், ஊஞ்சல் ஆடுகின்ற
போதும், பூக்கொய்து மாலை சூட்டுகின்ற போதும், திருச்சாழல்
விளையாடுகிற பொழுதும் சொல்லிச் சொல்லி வழிபட்டால்
இறைவனுடைய திருவருளைப் பெறலாம் என்பது மணிவாசகர்
காட்டும் வழிபாடாகும். தென்னாட்டுக்கு உரிய சிவபெருமான்
எந்நாட்டவர்க்கும் உரியவராய் விளங்குவதால்,
உற்றாரை
வேண்டாது, பேர் வேண்டாது, அண்மையில் கன்றை ஈன்ற
பசு அதன் மீது மனம் வைப்பது
போல மனம் வைத்து வழிபட
வேண்டும் என்று கூறுகிறார். நமச்சிவாய வாழ்க
என்று
இறைவனைப் போற்ற ஆரம்பித்து
சிவாயநம என்று
சொல்கின்ற நிலை ஏற்பட்டால் முக்திப்
பேற்றினை
அடையலாம் என்கிறார். ஐந்தெழுத்தினைச் சொல்லி
இறைவனை
வழிபடும் முறைகளையும் மாணிக்கவாசகர்
கூறுகின்றார்.
முத்திநெறி அறியாத மூர்க்கர்களைப்
பக்தி நெறி
அறிவிக்கச் செய்து, வினைகளை
எல்லாம் மாற்றி
அருள்புரிகின்ற இறைவனை நாயகன் நாயகி
பாவத்தில்
வழிபடுகின்ற முறையினைத் திருக்கோவையார்
மூலம்
புலப்படுத்துகின்றார். இவ்வாறு குருந்த
மரத்தடியில்
ஞானாசிரியரால் அருள்ஞானம் பெற்ற மணிவாசகப் பெருமான்
தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த தமிழகத்துச் சிவ வழிபாட்டு
முறைமையைப் பலவாறாகச் சித்திரித்துக்
காட்டியுள்ளார்
எனலாம்.
1.4.6
பிற திருமுறைகளில் காணும் சிவ வழிபாடுகள்
பன்னிரு திருமுறைகளில் 9ஆம்
திருமுறையும், 11ஆம்
திருமுறையும் பல்வேறு அருளாளர்களின் பாடல்களைக்
கொண்டதாகும். திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு என்ற
9ஆம் திருமுறையும், 12 புலவர்கள்
பாடிய 11ஆம்
திருமுறையும் முழுக்க முழுக்கச்
சிவபெருமானையும்
அடியார்களையும் போற்றிப் புகழுகின்ற பாமாலைகள் ஆகும்.
ஒவ்வொரு புலவரும் பாடிய பாடல்களைக்
கொண்டு
சிவபெருமானின் பெருமைகளையும், பல்வேறுபட்ட காலக்
கட்டங்களில் நடைபெற்ற வழிபாட்டு முறைகளையும் அறிந்து
கொள்ளலாம். விரித்து நோக்கினால் மிகையாகும் என்பதால்
சுருக்கிக் காட்டப் பெறுகிறது.
11ஆம் திருமுறையில்
இடம்பெற்ற ஐயடிகள்
காடவர்கோன் எழுதிய
சேத்திர வெண்பாவால்
பண்டைத்
தமிழகத்தில் புகழ்
பெற்ற திருத்தலங்களின் சிறப்புப் பற்றித்
தெரிந்து கொள்ள முடிகிறது. அதுபோலச் சேரமான் பெருமாள்
நாயனாரின் பாடல்களால் இறைவனைப் பற்றிச் சிந்திப்பதற்கு
மனமும், புகழ்பாட நாவும், வணங்கத் தலையும், தொழுவதற்குக்
கையும், நீறு பூசுவதற்கு மெய்யும் இறைவனால் தரப் பெற்றவை
என்பதால் அவற்றைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும்
என்பதும் தெளிவாகிறது. பட்டினத்தடிகள்
பாடிய பாடல்களால்
தமிழகத்தில் சிவாகம முறைகள் சிறந்திருந்தமை
தெரிய
வருகிறது. மேலும் விவசாயம், போர்த் தொழில்,
வணிகத்
தொழில் ஆகியவற்றை நடத்துகின்ற பொழுதும் இறைவனை
வழிபட்டால் சிறப்பினைப் பெறலாம் என்பதும் பெறப்படுகின்றது.
மேலும் 11ஆம் திருமுறையின் மூலம் மூத்தபிள்ளையார் என
வழங்கப் பெறும் விநாயகர் வழிபாடும், முருக
வழிபாடும்
தமிழகத்தில் விளங்கியமை பெறப்படுகிறது.
11ஆம் திருமுறையில்
கபிலதேவர்
பாடிய
மூத்தநாயனார் திருஇரட்டை மணிமாலை, அதிரா
அடிகள்
பாடிய மூத்தபிள்ளையார்
திருமும்மணிக் கோவை
ஆகியவை மூலம் விநாயகர்
வழிபாட்டைத் தெரிந்து
கொள்ளலாம். அதுபோல நக்கீரர்
பாடிய
திருமுருகாற்றுப்படை
இத்திருமுறையில் இடம்பெற்று முருக
வழிபாட்டின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.
11ஆம்
திருமுறையில் இடம்பெற்றுள்ள கண்ணப்பர்,
ஞானசம்பந்தர்
ஆகியோரைப் பற்றிய பாடல்களும்,
திருத்தொண்டர்
திருவந்தாதியும் அடியார் வழிபாட்டை வலியுறுத்துகின்றன.
அடியார் வழிபாட்டை
மையமாகக் கொண்டு
சேக்கிழாரால் பாடப்பெற்ற
பெரியபுராணம்
12ஆம்
திருமுறையாகும். இப்பெரிய புராணத்தில்
குரு, இலிங்க,
சங்கம (அடியார்) வழிபாட்டு முறைகள்
கூறப் பெறுகின்றன.
63 நாயன்மார்களின் வரலாற்றைப் பெரிய புராணம் எடுத்துக்
காட்டி இறைவனை மூன்று வழியிலும் (சரியை, கிரியை, ஞானம்) வழிபடலாம் என்பதை நிலை நாட்டுகிறது. அடியார்களுக்குச் செய்யும் தொண்டே
ஆண்டவனுக்குச்
செய்யும் தொண்டு என்ற கோட்பாட்டைத்
தமிழ் நாட்டில்
வலியுறுத்தியது பெரிய புராணமே ஆகும். சிவ
வழிபாடானது
சிவனை வழிபடுவதோடு மட்டும் அமையாது
திருக்கோயில்களுக்குச் செய்யும்
தொண்டாகவும்,
அடியார்களுக்குச் செய்யும பணிவிடைகளாகவும் வளர்ந்து
அமைந்தன என்பதைப் பெரிய புராணம் சுட்டிக் காட்டுகிறது
எனலாம்.
கட்டடத்தால் திருக்கோயில் அமைப்பதும்,
மனத்தால்
திருக்கோயில் அமைப்பதும், இறைவனை நீராட்டி மகிழ்வதும்,
பூசனை செய்து போற்றுவதும், இறைவனுக்கு
உணவு
படைப்பதும், தீப தூபங்கள் காட்டுவதும், விளக்கு எரிப்பதும்,
சிவத்தொண்டாம் வழிபாடாகும் என்பதைப் பெரிய புராணம்
நிகழ்ச்சிகளின் அடிப்படையில்
வலியுறுத்துகிறது.
அதுமட்டுமன்றி அடியார்களுக்கு உணவு படைப்பது, கீழாடை
கொடுப்பது, துணி துவைத்துக் கொடுப்பது,
திருவோடு
அளிப்பது ஆகிய மனிதநேயப் பண்புகளும்
சிவத்
தொண்டாகும். மேலும் அடியார்கள் வேண்டும் விருப்பமான
பொருள்களைக் கொடுப்பதும் வழிபாட்டு முறைமைகளாகும்
என்பதையும் பெரிய புராணம் வலியுறுத்துகிறது. இவ்வாறு
9ஆம் திருமுறையில் இறைவனுக்குத் திருப்பல்லாண்டு பாடும்
வழிபாடு தொடங்கி, அடியார்களுக்குச் செய்யும் தொண்டு
12ஆம் திருமுறையில் வற்புறுத்தப் பெறுவது
ஈறாகத்
திருமுறைகள் பழந்தமிழ் நாட்டு வழிபாட்டு
முறைகளை
வரையறுத்தக் காட்டுகின்றன எனலாம்.
|