சைவ சமயம் உருவ வழிபாட்டை
ஏற்றுக் கொண்ட
சமயமாகும். சிவனுக்குரிய உருவங்களாக ஆலமர்செல்வன்,
ஆடவல்லான், பிட்சாடனர் என்பனவற்றைக் கொண்டனர்.
சிவலிங்க வடிவம் என்பது சைவ சமயம்
இறைவனுக்குக்
கொடுத்த அருவுருவத் திருமேனியாகும். அதாவது சிவலிங்க
வடிவம் எவ்வித உருவத்தையும் குறிக்காது. ஆவுடையார்
என்ற
கீழ்பாகமும், இலிங்கம் என்ற
மேல்பாகமும் கொண்டது. அதில்
எந்த விதமான உருவ உறுப்புகளும் இல்லை.
எனவே
உருவமற்றது என்றும், பார்வைக்கு ஒரு தோற்றம் தெரிவதால்
உருவமுடையது என்றும் கருதப் பெற்று அருவமும் உருவமும்
கொண்டதாக வழங்கப் பெறுகிறது. எனவே சைவத்தின் பக்தி
இயக்கம் தொடக்க காலத்திலேயே உருவ
வழிபாட்டில்
தொடங்கியது எனலாம். இந்த உருவ வழிபாட்டைச்
சங்க
இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதற்குச்
சில
எடுத்துக்காட்டுகள்:
நீலம்
நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த .......
ஆய்
(சிறுபாணாற்றுப்படை
: 96-97)
கால்வல்
தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா
ஆலமர்
செல்வன் அணிசால் பெருவிறல்
(கலித்தொகை-81)
ஆல்அமர்
கடவுள் அன்ன நின்செல்வம்
(புறநானூறு-198)
ஆலமர்
செல்வன் என்பது ஆல்
என்று சொல்லக்
கூடிய மரத்தின்கீழ் மனித வடிவோடு இருக்கின்ற வடிவமாகும்.
மரமும் அதற்குக் கீழ் இறைவடிவமும் கொண்ட இந்த ஆலமர்
செல்வன் இயற்கை வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும்
இணைக்கின்ற வடிவமாகும். எனவே பக்தி
இயக்கத்தின்
தொடக்கம் இயற்கை வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும்
கொண்டு தொடங்கியதாகத் தெரிகிறது.
2.1.1
சடங்குகளும் நம்பிக்கைகளும்
இத்தகைய வழிபாட்டோடு
சடங்கு முறைகளும்
இருந்தமை சங்க இலக்கியங்களால் தெரிய வருகின்றன. சைவ
சமயச் சிறு தெய்வக் கடவுளர்களில் ஒருவன் முருகன் ஆவான்.
அவனுக்குரிய வழிபாடாக வெறியாட்டு என்ற ஒரு வழிபாடு
தமிழர்களால் கொண்டாடப் பெற்றது என்பது தெரிய வருகிறது.
முருகனை வழிபட்டும் அவனுடைய வடிவத்தை மேற்கொண்டும்
இருக்கின்ற தமிழன் ‘வேலன்’
என்று அழைக்கப் பெற்றான்.
அவனைக் கொண்டு முருகனுக்கு வழிபாடு செய்வித்தல்
வெறியாட்டு என
அழைக்கப் பெற்றது. வெறியாட்டு
நிகழ்ந்ததை அகநானூறு
22ஆவது பாடல் சிறப்பாக எடுத்துக்
காட்டுகிறது. வெறியாட்டுக்கென்று
ஓர் இடத்தைத்
தேர்ந்தெடுத்து அதனைத் தூய்மை செய்து நெல்லும் பொரியும்
தூவி வேல் நடுவர். பிறகு வேலுக்கு மாலை
சூட்டிப்
படையல் பொருளாகக் குருதி கலந்த
தினைமாவினைப்
படைப்பர். வேலன் முருகனுடைய மலையையும் அவனுடைய
களிற்றையும் (யானை) பாடி ஆடுவான். இவ்வாறு வேலன்
ஆடுவதால் மக்களும் அவனோடு சேர்ந்து ஆடிப்பாடுவர்.
எனவே சங்க காலத்துப் பக்தி இயக்கம் ஆடலும் பாடலுமாக
இருந்தமை புலனாகிறது. இந்த வழிபாட்டை அகநானூறு
மட்டுமல்லாமல் நற்றிணை,
குறுந்தொகை உள்ளிட்ட
இலக்கியங்களும் கூறுகின்றன. இந்த வழிபாட்டில் ஆடவரும்,
பெண்டிரும் இணைந்தே வழிபாடு செய்வர்
என்பதும்
புலனாகிறது.
ஆடல் பாடலோடு இருந்த பக்தி இயக்கம்
இறைவன்மீது
சூளுரைத்து வாழ்வியல் செயல்களைச்
செய்வதாகவும்
அமைந்திருந்தது. அதாவது பக்தி இயக்கத்தின் ஒரு
கூறாக
நம்பிக்கை அமைந்தது. வாழ்க்கை முறைகளில் தான் தவறு
செய்யவில்லை என்பதை அறிவிப்பதற்குக் கடவுள்மீது சத்தியம்
(சூள்) செய்கின்ற பழக்கம்
இருந்தது. இதனைக்
கலித்தொகையில்,
மலையொடு
மார்பமைந்த செல்வன் அடியைத்
தலையினால்
தொட்டுற்றேன் சூள்
(முல்லைக்கலி - 8:55-56)
என்று இடம்பெற்றிருக்கும் அடிகள் மூலம் அறியலாம்.
பக்தி இயக்கங்களில்
வேதமுறைப்படி யாகங்கள்
வளர்த்துப் பலியிடுகிற முறைமையும் இருந்தமை புலனாகின்றது.
பண்டைத் தமிழர் தாம் வேண்டியதைப்
பெறுவதற்காக
இறைவனை நோக்கி வேள்வி செய்தனர். அதாவது
யாகம்
செய்தனர். பூமியில் தீ வளர்ப்பதற்குரிய
குண்டங்களை
(பள்ளம்) அமைத்துத் தீயை வளர்த்து அதில் பொன், மணி,
நெய் உள்ளிட்ட பலவகைப் பொருள்களை இட்டு வேத
மந்திரங்களைச் சொல்லி வேள்வி செய்தனர்.
அத்தகைய
வேள்வி செய்தல் சமயச் சடங்குகளில் முக்கியத்துவம் பெற்றது.
இந்த வேள்வியைச் செய்வதற்கென்று சில சான்றோர்கள்
இருந்தனர். இவ்வேள்விகள் ஆயிரக்கணக்கில் செய்யப் பெற்றன.
எனவேதான் திருக்குறளில்,
அவி
சொரிந்து ஆயிரம் வேட்டலின் - 259
என்ற தொடர் காணப் பெறுகிறது. இங்கு வேட்டல்
என்பது
வேள்வியைக் குறிப்பதாகும். இத்தகு வேள்வி
செய்வதில்
புறநானூற்று அரசர்களான இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
ஆகியோர்
சிறந்திருந்தனர். அவர்கள் சான்றோர்களாகக் கருதப் பெற்றனர்.
சங்க காலத்தில் வேள்விகள் நடந்தமையைக்
கீழ்வரும்
தொடர்கள் உறுதியாக்குகின்றன.
வேள்வியில்
கடவுள் அருத்தினை
(பதிற்றுப்
பத்து, ப,7, பா-10)
வேள்வி
கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி
வேட்டனை
(பதிற்றுப் பத்து, ப,8, பா-4)
பக்தி இயக்கத்தில் மற்றொரு வகையாக
இறைவனை
நோக்கி நோன்பிருத்தலும் சங்க காலத்தில் அமைந்திருந்தது.
தமிழர்கள் உயர்நிலை அடைவதற்காகப் பக்தி உணர்வோடு
நோன்பு இருந்தனர். அதாவது வேண்டியது பெறவும், பாவங்கள்
அழியவும் தமிழர்கள் தத்தம் ஆற்றலுக்கு
ஏற்பச் சில
குறிப்பிட்ட நாட்களில் பக்தியோடு சில
நோன்புகளை
நோற்றனர். இந்நோன்புகளில் திருமணம் நடைபெறுவதற்காக
மேற்கொள்ளப்பட்ட தைந் நீராடல்
நோன்பு, ஐம்புலன்களை
அடக்குவதற்குரிய உண்ணா நோன்பு,
கணவன் இறந்ததால்
மேற்கொள்ளப்பட்ட கைம்மை நோன்பு
ஆகிய நோன்புகள்
குறிப்பிடத்தக்கன ஆகும்.
கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில்
திருவாதிரை நாள்
தொடங்கித் தை மாதம் வரை நோன்பிருத்தல் தை
நோன்பாகும். பெண்கள் தங்களை அழகு பெற அலங்கரித்துக்
கொண்டு பிறர் மனையின்கண் பெற்ற உணவையே உண்டு
மண்ணிலே ஒரு பொம்மையைச் (பாவையை) செய்து அதற்குரிய
வழிபாடுகளைச் செய்வது பாவை நோன்பு
எனப்பட்டது.
இறுதியில்
தைமாதத்தில் ஆற்றில் நீராடுவர். இதுவே
தைந்நீராடல் நோன்பாகும். இந்நோன்பால் மழை பெய்வதும்
உண்டு. இதனைப் பரிபாடல் 11ஆம் பாடல் சிறப்பாக
எடுத்துக்
காட்டுகிறது.
ஐம்புலன்களை அடக்குவதற்காகக்
கடவுளை வணங்கி
உணவு உண்ணாது இருத்தலும் உண்டு. இதற்கு உண்ணா
நோன்பு என்று பெயர். இதனைப்
பதிற்றுப் பத்து,
அகநானூறு ஆகிய இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
உண்ணாப்
பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
(பதிற்றுப்பத்து
ப.4, பா-1)
உண்ணா
மையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர்
(அகநானூறு-123)
என்பன அவ்வெடுத்துக் காட்டுகள்.
கணவன் இறந்தவுடன்
தாமும் உடன் இறப்பது
பெண்கள் சிலர் செயலாகும். என்றாலும் உயிர்விடாத பெண்கள்
தம்
கணவரோடு இனி வரப்போகும் பிறவிகளிலும் தாம்
உடன்
வாழ்வதற்காக நோன்பு இருப்பார்கள். இவ்வாறு மறுபிறவி
வாழ்க்கைக்காக இறைவனை நோக்கி இருக்கும் நோன்பிற்குக்
கைம்மை நோன்பு என்று
பெயர். இந்நோன்பில் உள்ளவர்கள்
நெய் இட்ட சோற்றினை உண்ண மாட்டார்கள். நீரோடு கூடிய
உணவையே உண்பர். தொடுகறியாகத் துவையலும், கீரையும்
கொள்வர். தரையில்தான் படுப்பர். இதனைப் புறநானூறு
246ஆம் பாடல் குறிப்பிடுகிறது.
இவ்வாறு சங்க காலத்துப்
பக்தி இயக்கம் உருவ
வழிபாடாம் தெய்வ வழிபாடாக, வெறியாட்டு ஆடுகிற சடங்காக,
வேள்வி செய்யக்கூடிய வேதநெறியாக நோன்பு இருக்கக்கூடிய
வாழ்வியல் முறையாக அமைந்திருந்தது எனலாம்.
2.1.2
பக்தி இயக்கக் களங்கள்
சைவ சமயம் உருவ
வழிபாட்டினை மையமாகக்
கொண்டதால் அவ்வழிபாட்டிற்குரிய செய்திகள் படிப்படியாக
வளர்ச்சி நிலையை அடைந்திருக்கின்றன.
சங்க
இலக்கியங்களில் சிவபெருமானைப் பற்றிய
செய்திகளும்
அவனுக்குரிய சில வழிபாட்டு முறைகளும்
குறிக்கப்
பெற்றதிலிருந்து இயக்க வளர்ச்சி சிறிது மேம்பட்டிருக்கிறது.
அதாவது சிவபெருமானுக்குரிய கோயில்கள் எழுப்பப் பெற்று
விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றிருக்கின்றன.
விழாக்களின் சிறப்பை இரட்டைக் காப்பியங்கள்
எடுத்துக்
காட்டுகின்றன.
சிவபெருமானுக்கு உரிய களங்களாகக்
கோயில்களும்,
மன்றங்களும், அம்பலங்களும் அமைக்கப் பெற்றன.
பிறவா
யாக்கைப் பெரியோன் கோயில் (காதை-5)
கொன்றை
அம் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம்பலத்து
(பதிகம்)
என்று சிவபெருமானின் களங்கள் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்
பெறுகின்றன. இத்தகைய முதன்மையான களங்களோடு
சிறுதெய்வக் களங்களும் அக்காலத்தில் இருந்தன என்பதும்
தெரிய வருகிறது. பூம்புகாரில் மருவூர்ப் பாக்கத்திற்கும்
பட்டினப் பாக்கத்திற்கும் இடையில் சோலைகளுக்கு நடுவில்
நாளங்காடிப் பூத சதுக்கம்
இருந்ததாகச் சிலப்பதிகாரம்
கூறுகிறது. மேலும் வெள்ளிடை
மன்றம் என்றும்,
இலஞ்சி
மன்றம் என்றும், பாவை
மன்றம் என்றும், நெடுங்கல்
மன்றம் என்றும், பூதசதுக்கம்
என்றும் ஐவகை மன்றங்கள்
இருந்தன என்றும் இந்திரவிழவூரெடுத்த காதையில்
குறிப்பிடப்படுகிறது. இச்செய்திகளைப் பார்க்கின்ற பொழுது
2ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம்
கடவுளர்களுக்கு
மன்றங்கள் அமைப்பதில் வளர்ந்திருக்கின்றது எனலாம்.
மேலும், கடவுள் நம்பிக்கையோடு
மக்கள் செய்யும்
குற்றங்களைத் தண்டிக்கக்கூடிய நிலையில்
சிறுதெய்வ
வழிபாட்டு மன்றங்கள் அமைக்கப் பெற்றன என்பதும் தெரிய
வருகின்றது. இச்செய்திகள் அக்கால மக்கள்
கொண்ட
நம்பிக்கைகளையும், பக்தி இயக்கத்தின்
வளர்ச்சியையும்
காட்டுகின்றன எனலாம்.
இத்தகவல்களை உறுதிப்படுத்தும்
வண்ணம்
மணிமேகலையிலும் சான்றுகள்
காணப்படுகின்றன. அதாவது
சிறுதெய்வத்திற்குரிய வழிபாட்டுக் களம்
சக்கரவாளக்
கோட்டம் என அழைக்கப் பெற்று வழங்கியிருக்கிறது. கோயில்
என்பது போலக் கோட்டம் என்ற
பெயரில் வழிபாட்டுக் களம்
அழைக்கப் பெற்றிருக்கிறது.
இக்கோட்டத்திலும்
பூதங்களினுடைய வடிவங்கள் அமைக்கப் பெற்றிருந்தன.
அப்பூதங்கள் தீமை செய்தவரைத் தண்டிக்கும் என்ற நம்பிக்கை
இருந்திருக்கிறது. அக்கோட்டங்களில் பேய்கள்
உலவுவதாக
நம்பப் பெற்றது. வாகை மன்றம்,
வெள்ளி மன்றம், வன்னி
மன்றம், இலந்தை மன்றம், வெள்ளிடை மன்றம் என்ற
மன்றங்கள் இருந்தமையை மணிமேகலைக்
காப்பியம்
சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில்
குறிப்பிடுகிறது.
இவ்வாறு பக்தி இயக்கமானது சங்க
காலத்தில் உருவ
வழிபாட்டில் தோன்றிக் காப்பிய காலத்தில்
முதன்மைத்
தெய்வத்திற்குரிய வழிபாட்டுக் களங்களாகக் கோயில்களும்,
மன்றங்களும் அமைக்கப் பெற்று வளர்ச்சியடைந்தது.
அத்துடன் சிறு தெய்வங்களுக்கும் மன்றங்கள் என்ற பெயரில்
களங்கள் அமைக்கப் பெற்றுப் பக்தி இயக்கம்
வேகமாக
வளர்ந்தமையும் தெரிய வருகிறது.
2.1.3
விழாக்கள்
பக்தி இயக்கம்
காப்பிய காலத்தில் மிகவும்
வளர்ச்சியடைந்திருந்தது. கோயில்களும் அம்பலங்களும்
ஏற்படுத்தப்பட்டு அக்களங்களில் மிகப்பெரிய விழாக்களும்
கொண்டாடப் பெற்றன. சிலப்பதிகாரம்,
மணிமேகலை
இரண்டு காப்பியங்களிலும் இந்திரவிழா
எடுத்த செய்தி
கூறப்படுகிறது. சைவ சமயத்தில் தேவர்களுக்குத் தலைவன்
இந்திரன் என்பதும், அவன்
சிவனடியார்களில்
முதன்மையானவன் என்பதும் வழங்கப் பெறும் செய்தியாகும்.
எனவே இந்திரவிழாவைச் சைவ சமயப் பக்தி இயக்கத்தின் ஒரு
கூறாகக் கொள்வதில் தவறில்லை.
இந்த விழாவைத்
தொடங்குகின்ற பொழுது விழாவிற்குரிய நாள்
முதலில்
மக்களுக்கு அறிவிக்கப் பெற்றிருக்கிறது. மக்கள் வாழுகின்ற
நகரங்கள் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப் பெற்றன. அந்த
நாளில் இந்திரனுடைய திருவுருவத்திற்குச் சிறப்பு வழிபாடுகள்
நடைபெற்றிருக்கின்றன. நகரத்தில் இருக்கக்கூடிய, அனைத்துக்
கோயில்களிலும் சமய வேறுபாடின்றிச் சிறப்பு வழிபாடுகள்
நடைபெற்றிருக்கின்றன. வேள்விகள் மிகவும்
சிறப்பாக
நடந்திருக்கின்றன. இசை நிகழ்ச்சிகள், நடன அரங்கேற்றங்கள்
நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய செய்திகளைச்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
ஒரே நிலையில்
சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. எனவே பக்தி இயக்கம்
காப்பிய காலத்தில் சிறந்த விழாக்களின்
இயக்கமாக
வளர்ந்திருக்கிறது எனத் தெரிகிறது.
மேலும் மக்களுக்குரிய பொதுத்
துன்பமான வறட்சி
ஏற்பட்டால் அதற்குக் காரணம் தெய்வக் குற்றமே
என்ற
நம்பிக்கை இருந்தது மணிமேகலையால் தெரிய வருகிறது.
விடுத்தபூதம்
விழாக்கோள் மறப்பின்
மடித்த
செவ்வாய் வல்எயிறு இலங்க
இடிக்குரல்
முழக்கத்து இடும்பை செய்திடும்
(காதை.1,
20-22)
என்பது மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்ற தொடராகும்.
அதுபோலச் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில்
மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிக் கொள்வதற்காகக்
குரவைக் கூத்து ஆடப்பெற்ற
செய்தி இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு பக்தி இயக்கமானது கோயில்களாம் களங்களை
ஏற்படுத்தி விழாக்களைக் கொண்டாடுவதிலும், துன்பம் தீர
விழா எடுத்தமையிலும் வளர்ந்திருக்கிறது எனத் தெரிகிறது. |