திருமுறைகளில் பத்தாம்
திருமுறையாக விளங்குவது
திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகும். இவருடைய
வரலாற்றைப் பெரியபுராணம் 28 செய்யுட்களில் கூறுகிறது. இவர்
சிவயோகம் கைவரப் பெற்றவர். இவருடைய பிறப்புப் பற்றிய
செய்திகள் தெரியவில்லை. திருக்கயிலாயத்தில் திருநந்தி
தேவரின் மாணாக்கர்களில் இச்சிவயோகி ஒருவர் ஆவார். இவர் அகத்தியரைக்
காண்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.
அவ்வாறு வரும் பொழுது திருவாவடுதுறையில் கால்நடைகளை
மேய்க்கும் மூலன் என்பான் இறந்ததால்,
பசுக்கள் வருந்திக்
கொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் வருத்தத்தைத்
தீர்ப்பதற்காக
மூலன் என்ற அந்த மேய்ப்பானின் இறந்த
உடலில் தன் சிவயோகத் தன்மையால்
சிவயோகி
புகுந்தார். இறையருளால் சிவயோக உடம்பு மறைக்கப்பட்டுச்
சிவயோகி திருமூலராகவே வாழவேண்டி நேர்ந்தது. அதுமுதல்
திருமூலராகச் சிவயோகி வாழ்ந்து
இவ்வுலகத்தார்
வாழ்தற்பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற
நால்வகை நெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும்
திருமந்திரத்தைப் பாடியருளினார். இவருடைய காலம் ஆறாம்
நூற்றாண்டின் பிற்பகுதி என வரலாற்று ஆசிரியர்கள்
கூறுகின்றனர். இவரால் இயற்றப் பெற்ற திருமந்திரம் பத்தாம்
திருமுறையாகச் சேர்க்கப் பட்டுள்ளது. திருமந்திர நூலில்
இப்பொழுது கிடைத்திருப்பவை 3048 பாடல்கள் ஆகும்.
பன்னிரண்டாம் திருமுறையாக
விளங்குவது
பெரியபுராணம் ஆகும்.
பெரியபுராணத்தைப் பாடியவர்
சேக்கிழார் ஆவார்.
இவருடைய வரலாற்றை உமாபதி
சிவாச்சாரியார் திருத்தொண்டர் புராண வரலாறு என்ற
நூலாகப் பாடியுள்ளார். இவருடைய ஊர் குன்றத்தூர்.
வளோளர் குடியில் பிறந்த இவருடைய இயற்பெயர்
அருண்மொழித்தேவர்.
சோழ அரசனிடத்தில் அமைச்சராக
விளங்கியவர். அரசனின் வேண்டுகோளுக்கிணங்க
63 நாயன்மார்கள் வரலாற்றையும் 9 தொகையடியார்கள்
வரலாற்றையும் சேகரித்துத் திருத்தொண்டர் புராணம் என்ற
பெரியபுராணத்தைப் பாடியருளினார். இவருடைய காலத்தை
12ஆம் நூற்றாண்டு என்பர். இவர் பாடிய திருத்தொண்டர்
புராணத்திற்குத் தில்லைக் கூத்தப்பெருமான் உலகெலாம் என்று
அடியெடுத்துக் கொடுத்து இவர் பாடினார் என்ற செய்தியும்
உண்டு.
3.4.1 திருமூலர் அருளியது
திருமூலதேவர் என்று அழைக்கப்படுகின்ற
கயிலைச்
சிவயோகி பாடி அருளியது திருமந்திரம் ஆகும். இதனைத்
தமிழ் ஆகமம்
என்று குறிப்பிடுவர். சிவஆகமங்கள்
உண்மைப் பொருளைச் சரியை, கிரியை, யோகம்,
ஞானம்
என்ற நான்கு நெறிகளாக
வகுத்துரைக்கும். அந்த
அடிப்படையில்தான் நந்தியம் பெருமானிடத்தில் தாம் உணர்ந்த
சிவாகமப் பொருளைத் திருமந்திரங்களாக்கித் தந்துள்ளார்.
இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களாக, தமிழ் மூவாயிரமாக
அருளப் பெற்றுள்ளது. ஒன்பது தந்திரங்களுள் முதல் நான்கு
தந்திரங்கள் சிவஞானத்தைப் பெறுவதற்கு விரும்புகிறவர்கள்
தம்மைத் தகுதியாக்கிக் கொள்வது பற்றிய
செய்திகளைத்
தருகின்றன. 5ஆம் தந்திரம் சைவசித்தாந்த முப்பொருள்
உண்மைகளைத் தருகிறது. இறுதி நான்கு தந்திரங்கள் ஞானம்
பெறுவதால் ஏற்படும் நற்பயன்களை விரித்துக் கூறுகின்றன.
முதல் தந்திரம் 17
தலைப்புகளைப் பெற்றுள்ளது.
இரண்டாம் தந்திரம் 25 தலைப்புகளைப் பெற்றுள்ளது. மூன்றாம்
தந்திரம் 21 தலைப்புகளைப் பெற்று யோக உறுப்புகளாகிய
இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், தாரணை, தியானம்,
சமாதி என்பனவற்றை விளக்குகின்றது. நான்காம்
தந்திரம்
13 தலைப்புகளை உடையது. இத்தந்திரத்தில்தான் திருஅம்பலச்
சக்கரம் முதலிய மந்திரச் சக்கரங்களைப் பற்றிய செய்திகள்
உள்ளன. ஐந்தாம் தந்திரம் 20 தலைப்புகளைக் கொண்டு சுத்த
சைவம் முதலாகிய அகச்சமயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
நால்வகை மார்க்கங்களும் அவற்றின் பயன்களும்
அதில்
கூறப்பெறுகின்றன. ஆறாம் தந்திரத்தில் 14
தலைப்புகள்
உள்ளன. சிவதரிதசனம், திருவடிப்பேறு, தவம் ஆகியவை
பற்றிய செய்திகள் இதில் அடங்கியுள்ளன. ஏழாம் தந்திரத்தில்
30 தலைப்புகள் உள்ளன. உபதேசமுறைகள், ஆராதனை
நிலைகள் முதலியவை இதில் உள்ளன. எட்டாம் தந்திரத்தில்
33 தலைப்புகள் உள்ளன. ஒன்பதாம் தந்திரம் 22
தலைப்புகளைக் கொண்டது. இதில் தசகாரியம், அணைந்தோர்
தன்மை விளக்கப் பெறுகின்றன. திருமந்திரம் ஆகம நெறியில்
சைவசித்தாந்தக் கருத்துகளையும், வாழ்வியல் முறைகளையும்
தந்த முதல்நூல் எனலாம்.
3.4.2 சேக்கிழார்
அருளியது
சைவ சமயச்
சிவனடியார்களின் வரலாற்று நூலாக
விளங்கும் பெரிய புராணம் சேக்கிழார்
அருளியதாகும்.
தமிழுக்கே உரிய சிலப்பதிகாரக் காப்பியம் போல,
இதுவும்
தமிழ்மொழிக்கு உரிய பெருங்காப்பியமாக விளங்குகின்றது.
சுந்தரமூர்த்தி அருளிய திருத்தொண்டத்
தொகையில்
அமைந்துள்ள திருப்பாடல்களுக்கு ஏற்ப 13 சருக்கங்களாக
இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. சருக்கங்களாவன : திருமலைச்
சருக்கம், தில்லைவாழ் அந்தணர் சருக்கம்,
இலைமலிந்த
சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற
சருக்கம், வம்பறா வரிவண்டு சருக்கம்,
வார்கொண்ட
வனமுலையாள் சருக்கம், பொய்யடிமை இல்லாத புலவர்
சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப்பணிவார் சருக்கம், மன்னிய சீர் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம் என்பனவாகும்.
முதல் சருக்கமான திருமலைச்
சருக்கத்தில் திருமலைச்
சிறப்பு, திருநாட்டுச் சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம் என்ற
5 பகுதிகள் அமைந்துள்ளன. அடுத்து அமைந்த 11 சருக்கங்கள்
சுந்தரரின் திருத்தொண்டத் தொகையில் உள்ள 11 பாடல்களின்
அடிப்படையில் அமைக்கப் பெற்றுள்ளன. இறுதியில் உள்ள
வெள்ளானைச் சருக்கம் சுந்தரரும் சேரமான்
பெருமாள்
நாயனாரும் திருக்கயிலாயம் அடைந்ததைக் கூறுவதாகும்.
இவ்வாறு 13 சருக்கங்களில் 4286 விருத்தப் பாடல்களில் 63
அடியார்கள், 9 தொகை அடியார்கள்
வரலாறுகள்
கூறப்பெறுகின்றன. வெறும் வரலாறாக மட்டும்
இந்நூல்
அமையாது, சைவ சமயத்திற்குரிய அக, புற வழிபாட்டு
முறைகள், அடியார்களின் தன்மைகள் ஆகியவைகளைத்
தருகின்ற வாழ்வியல் நூலாகவும் விளங்குகிறது. மேலும்
குரு,
இலிங்க, சங்கம அடியார்கள் வழிபாட்டு முறைமைகளும்
சைவ சித்தாந்த முப்பொருள்களின் உண்மைகளும் இலக்கியப்
பாங்கில் கூறப்பெற்றுள்ளன. சேக்கிழார்
அமைச்சராக
விளங்கிய காரணத்தால் நில அமைப்பு முறைகளையும்,
இயற்கை வளங்களையும், நாட்டின்
பிரிவுகளையும்
பெரியபுராணத்தில் இடம்பெற வைத்துள்ளார். பக்திச்சுவை நனி
சொட்டச் சொட்டப் பாடப் பெற்ற பெரியபுராணம் சைவத்
திருமுறைகளின் மணிமுடி போல் விளங்குவதாகும்.
|