4.1 சமய நெறி


    சைவ சமயத்தில் கடவுள் கொள்கைகளையும், சிவ
வழிபாட்டு     முறைமைகளையும் விளக்கிக் கூறுகின்ற
முதன்மையான நூல்கள் வேதங்கள், சிவ ஆகமங்கள்
(பிரமாணங்கள்) ஆகும். வேதங்கள் ரிக், யசுர், சாமம்,
அதர்வணம்
என நான்காகும். சிவ ஆகமங்கள் 28 ஆகும்.
வேத, சிவ ஆகமங்கள் சிவபெருமானால் அருளிச் செய்யப்
பெற்றவை ஆகும். இதனை, "வேதமொடு ஆகமம் மெய்யாம்
இறைவன் நூல்" என்று திருமூலர் குறிப்பிடுவார். வேதங்கள்
நான்கும் இந்து சமயத்தின் கொள்கைகளைக் கூறுகின்றன.
ஆனால் சிவ ஆகமங்கள் சைவ சமயத்தின் நெறிமுறைகளை
மட்டும் கூறுகின்றன. சிவாகமங்களில் கடவுளின் இயல்புகள்,
கடவுள் ஆன்மாவிற்குச் செய்யும் அருள்நிலை, கடவுளை
வழிபடும் முறைகள், வழிபடும் இடங்களின் அமைப்புகள்,
கடவுள் திருவுருவங்களின் அமைப்புகள், திருக்கோயில்களில்
நடக்கும் சடங்குகளின் வகைகள், அவைகளை நடத்தும்
முறைகள், வழிபடுவோர்க்குரிய இயல்புகள், சைவச் சாதனங்கள்
ஆகியவை விரிவாக விளக்கப்படுகின்றன.

    28     ஆகமங்களும் இன்றைய நடைமுறையில்
மக்களிடையே     இல்லை.     அவற்றின்     கருத்துகளை
எளிமைப்படுத்திச் சித்தாந்த நூல்கள், சைவத் திருமுறைகள்
தந்து கொண்டிருக்கின்றன. எனவேதான் திருமுறைகளில்
ஒன்றான திருமந்திரம் தமிழ் வேதமாகக் கருதப் பெறும்.
அந்நூல் கூறுகிற முறைமையில் சமய நெறிமுறைகளும், சமய
வழிபாட்டு முறைகளும் கடைப்பிடிக்கப் பெறுகின்றன. மேலும்
14 சாத்திர நூல்கள் கூறுகின்ற சிவ தத்துவங்கள் மக்களால்
அறிந்து கொள்ளப் பெற்றன. தத்துவங்களை அறிவதோடு
மட்டுமல்லாமல்     தத்துவங்கள்     கூறுகின்ற வழிபாட்டு
முறைமைகள் இன்றையத் திருக்கோயில் வழிபாட்டிலும், சமய
வழிபாட்டிலும் கையாளப்படுகின்றன. சாத்திரமும் தோத்திரமும்
பண்டைச் சிவாகமங்கள் வழி சமயநெறி முறைகளை நான்காக
வகுத்துள்ளன.     அந்நால்வகைச்     சமய     நெறிகளைக்
கைக்கொண்டால் என்னென்ன பயன்களை அடையலாம்
என்பதையும்     பண்டைய     ஆகமங்கள்வழி இவைகள்
வலியுறுத்துகின்றன. குறிப்பிட்டுச் சொன்னால் நால்வகைச் சமய
நெறிகளில் ஆகமங்கள் கூறிய அனைத்து நெறிமுறைகளும்
அடங்கியுள்ளன. எனவே நால்வகைச் சமய நெறிகளை
அறிந்தால் சைவ சமய நெறிமுறைகளை அறிந்தது ஆகும்.