5.0 பாட முன்னுரை


    உலக சமயங்களுள் மிகவும் பழமையான சமயம் சைவ
சமயம் ஆகும். இச்சமயத்தின் கொள்கைகளை வகைப்படுத்தித்
தருவன சாத்திரங்கள் ஆகும். சாத்திர நூல்களுக்கு
அடிப்படையான நூல்களாக விளங்குவன வேத, ஆகம
நூல்களாகும். சைவ சித்தாந்த வரலாற்றை ஆராய்ந்தால் வேத
ஆகமங்களின் அடிப்படையில் சைவ சித்தாந்தக் கருத்துகள்
தோற்றம் கொண்டன என்பதை அறியலாம். வேதம் அறிவுக்கு
நிலைக்களம் என்று     கருதப்படுவதாகும். இவ்வேதங்கள்
மனிதர்களால் ஆக்கப் பட்டவை அல்ல என்பதும் இறைவனால்
ஆக்கப் பெற்றவை என்பதும் காலம் காலமாக நிலவி வரும்
நம்பிக்கையாகும். இவ்வேதங்கள் ரிக், யஜுர், சாமம்,
அதர்வணம்
என நான்கு நூல்களாகப் பேசப் பெறுகின்றன. இவ்வேதங்கள் தருகின்ற கடவுள் கொள்கைகளும் சித்தாந்தக் கருத்துகளும் சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு அடிப்படையாக
அமைந்தன. வேதங்களை அடுத்துச் சைவ சித்தாந்தக்
கருத்துகளைத் தந்தவை சைவ ஆகமங்களாகும்.

    ஆகமங்கள் பலவாகும். இவற்றுள் சைவத்திற்கே உரிய
ஆகமங்கள் 28 என்பார்கள். இவ் ஆகமங்களையும் சிவபெருமானே
அருளிச் செய்தான் என்பது மரபாகும். இவ்வாகமங்களில் 4
பிரிவுகள் உள்ளன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன
அவை. ஞானம் என்ற பகுதியில் அமைந்துள்ள தத்துவக்
கருத்துக்களே     சைவசித்தாந்த சாத்திரக் கருத்துக்களுக்கு
அடிப்படையாகும். வேதமும், ஆகமமும் கல்வி அறிவுடையாரே
உணர்ந்து கொள்ளத் தக்கனவாக இருந்தன. அவற்றைப் பின்னால்
தோன்றிய 12 சைவத் திருமுறைகள் எளிமையாக்கிச் சைவ
சமயத்தார்க்குத் தோத்திரப் பாடல்களாக அளித்தன. எனவே சைவ
சித்தாந்த தத்துவக் கருத்துகளை முழுமையாகத் தந்த சாத்திர
நூல்களுக்கு வேத, ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும்
அடிப்படையாக அமைந்தன எனலாம். சைவ சித்தாந்த சாத்திர
நூல்கள் பதினான்கு ஆகும். அவை பற்றிய குறிப்புக்களை
இப்பாடத்தில் அறிய உள்ளோம்.