6.4 இதர தத்துவங்கள்


    சைவசித்தாந்தத்தில்     அடிப்படையான     முப்பொருள்
கொள்கைகளோடு உயிர்கள் இறைவனுடைய அருள்பெறும்
நிலையை, சாதன, பயனியல்களாகச் சைவசித்தாந்த தத்துவங்கள்
குறிப்பிடுகின்றன. உயிரானது பிறப்பெடுத்து உலகத்தில் பெறுகின்ற
இன்பம் உலக இன்பமாகும். பல பிறப்புகளின் இறுதியில்
இறைவனின் அருளைப் பெறுகின்ற இன்பம் பேரின்பம் எனப்படும்.
இதனை, போகம் என்றும் மோட்சம் என்றும் குறிப்பிடுவர்.
துன்பத்துடன் கூடிய இன்பம் முன்னது. துன்பம் கலவாத இன்பம்
பின்னது.

    துன்பம் கலவாத இன்பமான பேரின்பத்தைப் பெற
இறைவன் அருள்வழங்க வேண்டும். இறைவன் அருள் பெறக்கூடிய
சூழலைச் சத்திநிபாதம் என்று குறிப்பிடுவர். சத்திநிபாதம் என்றால்
இறைவனுடைய அருள் பதிதல் என்பதாகும். இந்த நிலை அடைய
வேண்டுமானால் உயிர்களிடத்தில் இன்பத்தையும், துன்பத்தையும்
ஒன்றாகக் கருதும் நிலை ஏற்படவேண்டும். அதாவது இன்பத்தால்
மகிழாது, துன்பத்தால் துவளாது இரண்டையும் எவ்வித
உணர்வுமின்றி எல்லாம் பிறப்பின் நிலை, அனுபவித்தே
ஆகவேண்டும் என நினைப்பதாகும். இதை அடைய
வேண்டுமானால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு
நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முதல் மூன்றும் உயிர்கள் செய்யவேண்டிய செயல்பாடுகள். சரியை என்பது உடம்பால்
இறைவனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு செய்வது. கிரியை
என்பது இறைவனுடைய வடிவங்களை, மூர்த்தங்களைப் பூசனை
செய்யும் முறையாகும். யோகம் என்பது இறைவனையே நினைந்து
தவமிருத்தல். இம்மூன்று நிகழ்வுகளையும் கடைப்பிடித்தால்
இறைவனின் வடிவாகிய ஞானாசிரியரால் ஞானம் பெறலாம். ஞானம்
பெறுவதால் சத்திநிபாதம் (வீடுபேறு) கிடைக்கும்.

    நால்வகை நெறிகளில் ஐந்தெழுத்து மந்திரங்களை
மெய்ப்பொருளாக உணர்ந்து உச்சரித்தல் என்பது மிகவும் குறிப்பிடத்
தக்கதாகும். சிவாயநம என்பது அந்த ஐந்தெழுத்தாகும். இந்த
ஐந்தெழுத்தில் சி - என்பது சிவத்தையும், வா - என்பது
சக்தியையும், ய - என்பது உயிரையும், ந - என்பது மறைத்தலையும்,
ம - என்பது மலத்தையும் குறிப்பனவாகும். இந்த ஐந்தெழுத்தை
ஞானாசிரியர் வழங்க அதன் மூலம் உபதேசத்தைப் பெற்று உயிர்கள்
தத்தம் தகுதிக்கு ஏற்ப உச்சரித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது
கொள்கையாகும். இவ்வாறு உயிர்கள் பல்வேறு பிறப்பெடுத்து
இறுதியில் சிவபெருமான் திருவடிகளை அடைந்து அவன்
திருவருளில் திளைத்து மாறா இன்பத்தில் அமர்ந்திருப்பது வீடுபேறு
எனக் கொள்ளப்படும். அந்நிலையில் உயிர் தன் தன்மையில்
கெடாது பேரின்பத்தை அனுபவிக்கும். உயிர் அழிவதில்லை
என்பது சைவ சித்தாந்தக் கொள்கையாகும்.