1.4 தமிழ்நாட்டில் சிறப்படைந்த வரலாறு


    சமண சமயம் தமிழகம் முழுவதும் பண்டைக் காலத்தில்
பரவி இருந்ததோடு மட்டுமன்றிச் செல்வாக்குப் பெற்றும்
இருந்தது. இச்சமயம் தமிழ்நாட்டில் பெரும் புகழுடன்
விளங்கியமையைத் மணிமேகலை, சிலப்பதிகாரம், தேவாரம்,
நாலாயிரத் திவ்விய பிரபந்தம், பெரிய புராணம்,
திருவிளையாடற் புராணம்
முதலிய இலக்கியங்கள் மூலம்
அறியலாம்.

1.4.1 தமிழ்நாட்டில் சிறப்புறக் காரணங்கள்

    தமிழ்நாட்டில் சமண சமயம் சிறப்படைந்தமைக்குப்
பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

●  உயர்வு தாழ்வு

     பண்டைத் தமிழ்நாட்டில் பிறப்பினால் உயர்வு தாழ்வு
பாராட்டும் குறுகிய மனப்பான்மை இருந்தது. இந்நிலை சமண
சமயத்தில் இல்லை. சமண சமயக் கொள்கைகளைப்
பின்பற்றுவோர் எவராயினும், எச்சமயத்தவராயினும் அவர்களைச்
சமணர்கள் போற்றினர். எனவே சாதி, மத வேறுபாடு பார்க்காத
சமண சமயத்தை மக்கள் பெரிதும் விரும்பிப் போற்றி வளர்த்தனர்.

●  தானங்கள்

     உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு
தானங்கள் செய்வதைச் சமணர்கள் தங்கள் கடமையாகக்
கருதினர். இவற்றை முறையே அன்னதானம், அபயதானம்,
ஒளடத தானம், சாத்திர தானம்
என்று சமணர்கள் கூறுவர்.

●  அன்னதானம்

     அன்னதானம் என்பது பசியால் வாடும் ஏழை எளிய
மக்களுக்கு உணவு கொடுத்து அவர்களைக் காப்பது ஆகும்.
இஃது அறங்களுள் மிகச் சிறந்தது. இதனால்தான், “உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்று புகழ்ந்து
பேசப்படுகிறார்.

●  அபயதானம்

     அபயதானம் அல்லது அடைக்கல தானம் என்பது
பல்வேறு காரணங்களால் தம்மைக் காக்குமாறு வேண்டி
வருபவர்களை ஏற்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து
பாதுகாப்பது ஆகும். இதற்கெனத் தனியாகக் குறிப்பிட்ட சில
இடங்கள் அக்காலத்தில் இருந்தன. இவை பெரும்பாலும் சமணக்
கோயில்களுக்கு அருகில் இருந்தன. இந்த இடங்களுக்கு
‘அஞ்சினான் புகலிடம்’ என்று பெயர்.

●  ஒளடத தானம்

     ஒளடதம் = மருந்து. சமணர்கள் மருத்துவம் பயின்று
நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து அவர்களை நோயினின்று
மீட்டெடுத்தனர். இதை இலவசமாகச் சமணர்கள் செய்தனர்.
எனவே இது ஒளடத தானம் என்று வழங்கலாயிற்று.

●  சாத்திர தானம்

     சமணர்கள் தங்கள் பள்ளிகளிலே ஊர்ச் சிறுவர்களுக்குக்
கல்வி கற்பித்து வந்தனர். பாடசாலைகளுக்குப் ‘பள்ளி’ என்ற
பெயர் இதனால்தான் ஏற்பட்டது என்றும் அறிஞர் கூறுவர்.
பள்ளி என்றால் சமணப் பள்ளி அல்லது பௌத்தப் பள்ளி என
அக்காலத்தில் பொருள்படும்.

●  தாய்மொழிப் பயன்பாடு

     சமண சமயம் தமிழ்நாட்டில் தழைத்தோங்க மற்றொரு
காரணம் அவர்கள் தம் சமயக் கொள்கைகளைத் தமிழ்மொழி
வழியாக எடுத்துக் கூறினார்கள். சமண மத நூல்களை அந்தந்த
நாட்டுத் தாய்மொழிகளிலேயே எழுதினார்கள். அதுபோலத்
தமிழிலும் நூல்கள் இயற்றினர். சமயக் கொள்கைகளை மக்கள்
அறிய முடியாதவாறு அவர்களின் தாய்மொழி அல்லாத வேறு
மொழிகளில் மறைத்து வைப்பதைப் பெருங்குற்றமாகச் சமணர்கள்
கருதினர்.

●  சமயத் துறவிகள்

     சமண சமயம் தமிழ்நாட்டில் பரவுவதற்குச் சமணத்
துறவிகளும் காரணமாய் இருந்தனர். அவர்கள் ஊர் ஊராகச்
சென்று சமண சமயக் கொள்கைகளை மக்களுக்குப் போதிப்பதில்
கருத்தாய் இருந்தனர்.

●  தொழில்கள்

     மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்
கொலை செய்யும் தொழில்களைச் சமணர்கள் போற்றவில்லை.
உயிர்க் கொலை அல்லாத பிற தொழில்களைச் சமணர்கள்
போற்றி வளர்த்தனர். குறிப்பாக விவசாயம், வணிகம் ஆகிய
தொழில்களைச் சமணர்கள் நன்கு வளர்த்தனர். எனவே
வளோளரும், வணிகரும் சமண சமயச் சார்பு உடையவர்களாக
விளங்கினர். இதனால் மக்களில் பலரும் சமண சமயத்தைத்
தழுவினர். இத்தகைய காரணங்களினால் தமிழ்நாட்டில் சமண
சமயம் நன்கு வேரூன்றித் தழைத்து வளர்ந்தது.