1.5 தமிழ்நாட்டில் சமண சமய வீழ்ச்சி


    தமிழ்நாட்டில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த சமண சமயம்
தொடர்ந்து நீண்ட காலம் சிறப்புடன் இருக்க முடியவில்லை.
நாளடைவில் சமண சமயத்தின் செல்வாக்குக் குறையத்
தொடங்கியது.

1.5.1 சமயப் பகை

    ஆருகதம், வைதிகம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய
மதங்கள் வடநாட்டில் தோன்றித் தமிழகத்திற்கு வந்தவை. இவை
ஒன்றையொன்று அழிக்கும் முயற்சியில் அவ்வப்பொழுது
ஈடுபட்டன. சமயப் போர் நிகழ்த்தின. இப்போர் தமிழகத்திலும்
நிகழ்ந்தது.

●  வைதிகம் - பௌத்தம் - ஆருகதம்

     ஆருகதம், வைதிகம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய
நான்கு மதங்களுக்கு இடையே நடைபெற்ற சமயப் போரில்
முதன்முதலில் அழிவுக்கு உள்ளான மதம் ஆசீவக மதம் ஆகும்.
மற்ற மதங்களான வைதிகம், பௌத்தம், ஆருகதம் ஆகியவை
தமக்குள் நீண்ட காலம் போரிட்டுக் கொண்டு ஒன்றையொன்று
அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இம்மதங்களுக்கிடையிலான
போராட்டத்தில் வைதிக மதம் பின்னடைந்து அழிந்து போகும்
நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

●  வைதிக மதம் பின்னடையக் காரணங்கள்

  • வைதிகர் கொலை வேள்விகளைச் செய்தனர்.
  • வைதிகர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டினர்.
  • வைதிகர் தங்கள் வேதத்தைத் தங்களைத் தவிர வேறு
    எவரும் படிக்கக் கூடாது எனத் தடை செய்தனர்.
  • நில தானம், கோதானம் (பசுதானம்) போன்ற
    தானங்களைப் பெறுவதிலேயே வைதிகர் கவனமாக
    இருந்தனர்.

    இவை போன்ற காரணங்கள் வைதிக மதத்தைப்
பின்னடைவுக்கு அழைத்துச் சென்றன.

●  சமண, பௌத்தச் சண்டை

     ஆசீவக, வைதிக மதங்களை வென்று புகழுடன்
விளங்கிய சமண, பௌத்த சமயங்களும் ஒற்றுமையாக
இருக்கவில்லை. மாறாக, வன்மையாகப் போரிட்டுக் கொண்டன.
சில காலத்திற்குள் பௌத்த சமயத்தின் செல்வாக்குக் குன்றியது.
பௌத்த சமயத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை
குறைந்தது. எனவே, சமண சமயம் மட்டும் செல்வாக்குடன்
இருந்தது.

1.5.2 சமண சமய வீழ்ச்சி

    ஆசீவக, வைதிக, பௌத்த சமயங்களோடு போரிட்டு
வென்று சிறப்புடனிருந்த சமண    சமயம் காலப்போக்கில்
செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. இதற்குக் காரணமாய்
இருந்தவை புதிதாகத் தோன்றிய இந்து மதமும் பக்தி இயக்கமும்
ஆகும்.

    பக்தி இயக்கத்தைத் துணையாகக் கொண்டு இந்து மதத்தை
நிலைநிறுத்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார்கள்.
இவர்கள் புதிய இந்து மதத்தை ஆதரித்து ஊர் ஊராகச் சென்று
பக்தி இயக்கத்தை வளர்த்தார்கள்.

    அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும்
நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர் தத்தம் கடவுளாகிய
சிவன், திருமால் என்று முறையே நாயன்மார்களும், ஆழ்வார்களும்
பாடல் புனைந்தனர். இதன் காரணமாக இந்து சமயம் வளர்ச்சி
பெறவும் சமண சமயம் வீழ்ச்சி அடையவும் தொடங்கிற்று.

    இந்து மதத்திற்கும் சமண சமயத்திற்கும் இடையில் நிகழ்ந்த
சமயப் போரில் இந்து சமயம் மேலோங்கியது. அதற்கான முக்கியக்
காரணங்களாவன:

  1. சமணக் கடவுளாகிய அருகன் மீது பக்தி செலுத்தினால்
    மட்டும் வீடுபேறு அடைய முடியாது. சமண சமயக்
    கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகி இருவினை நீக்கி வீடுபேறு
    அடையக் கடுமையாக வருந்தி முயற்சி செய்ய வேண்டும்.
  2. வீடுபேறு அடைய வேண்டுமாயின் துறவறத்தை மேற்கொண்டு
    கடுமையான விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
    ஆண்கள் மட்டுமே வீடுபேறு அடைய முடியுமே அன்றி,
    பெண்கள் வீடுபேறு அடைய முடியாது. இவை போன்ற
    கடுமையான கட்டுப்பாடுகள் சமண சமயத்தில் இருந்தன.
    அதுபோலச் சமணர்களின் கொள்கைகள் நடைமுறைக்கு
    எளிதாகவும் ஏற்புடையதாகவும் இல்லை.
  3. இந்து மதக் கொள்கைகள் நடைமுறைக்கு எளிதாகவும்
    ஏற்புடையதாகவும் இருந்தன. ஆண்களும் பெண்களும்
    இல்லறத்தாரும் துறவறத்தாரும் மோட்சம் அடையலாம்.
    பக்தி மட்டும் இருந்தால் போதும், பக்தியினால் முக்தி
    எளிதாகும் என்பது இந்து மதத்தாரின் நம்பிக்கை.

    எனவே, நடைமுறைக்கு எளிதாகவும் ஏற்புடையதாகவும்
அனைவராலும் பின்பற்றக் கூடியதாகவும் இந்து மதக்
கொள்கைகள் இருந்தமையால் சமண சமயம் வீழ்ச்சியுற்று இந்து
மதம் தழைக்க ஆரம்பித்தது.