தமிழ் மொழியின் வளர்ச்சியில் சமயங்களின் பங்கு
அளவிடற்கரியதாகும். பல்வேறு சமயங்களாலும் வளர்க்கப்பட்ட
மொழி தமிழ்மொழி என்பது மிகையன்று. உலக மொழிகளுள்
தமிழ் மொழிக்கு இத்தகு தனிச் சிறப்பு உண்டு.
சமயங்கள் தமிழ் வளர்த்த வரிசையில் சமண சமயத்தின்
பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் பிற சமயங்களின்
தமிழ்ப்பணி பற்றித் தமிழ் இலக்கிய வரலாற்றில் விரிவாகக்
கூறப்படுகின்றது. ஆனால் சமண சமயத்தாரின் தமிழ்ப் பணி
பரக்கப் பேசப்படவில்லை.
இந்நிலையில் இப்பாடம், சமணர்கள் தமிழுக்குச் செய்த
பணிகளைப் பொது நிலையில் சுட்டிக் காட்டுகிறது. மேலும், தமிழ்
இலக்கியங்களில் சமணர்கள் பற்றிப் பதிவாகியுள்ள செய்திகளைச்
சிறப்பு நிலையில் விரிவாகக் கூறுகிறது. |