தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய
சமணர்கள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கண, இலக்கியங்களில்
பதிவாகியுள்ளன. தொல்காப்பியம், புறநானூறு, நீலகேசி,
அருங்கலச் செப்பு, சிலப்பதிகாரம், சிறுபஞ்சமூலம்,
மேருமந்தரபுராணம், சூளாமணி, சூளாமணி நிகண்டு, திவார
நிகண்டு, கயாதர நிகண்டு, தேவாரம் உள்ளிட்ட இலக்கண,
இலக்கிய நூல்களில் சமணர்கள் பற்றிய செய்திகள்
நேரிடையாகவோ மறைமுகமாகவோ கூறப்பட்டுள்ளன. அவற்றுள்
சிலவற்றைக் கீழே காணலாம்.
2.3.1
தொல்காப்பியம்
உலகில் வாழும் உயிரினங்களை ஆறு வகையாகப்
பகுத்துத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அந் நூற்பா,
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.
- (தொல். பொருள். மரபு. நூ-27)
சமண சமயத்தில் உலக உயிர்கள் ஐந்து வகையாகக்
கூறப்பட்டுள்ளன. ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை,
பகுத்தறிவை உடையவை என்று இருவகைப்படும். இதை
அடிப்படையாக வைத்து இளம்பூரணர் தொல்காப்பிய
நூற்பாவிற்கு உரை எழுதியுள்ளார்.
2.3.2
மதுரைக் காஞ்சி
மதுரை நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்
சமணர்கள் பெரிதும் வாழ்ந்தனர் என்பதற்குக் கல்வெட்டுச்
சான்றுகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை,
அழகர் மலை, சித்தர் மலை, சமணர் மலை, உம்மண மலை,
முத்துப்பட்டி, பேச்சிப்பள்ளம், கீழக்குடி, கொங்கர் புலியன்குளம்,
கருங்காலக்குடி, கீழக்கடவு, பொய்கை மலை, உத்தம பாளையம்,
ஐவர் மலை ஆகிய 14 இடங்களில் கிடைக்கப் பெற்ற
கல்வெட்டுகள் இப்பகுதிகளில் சமணர்கள் வாழ்ந்திருந்தமையைச்
சுட்டுகின்றன.
மதுரை மாவட்டப் பகுதிகளில் சமணர்கள் வாழ்ந்திருந்த
செய்தியை, பத்துப் பாட்டில் ஒன்றான மதுரைக்
காஞ்சி உறுதி செய்கிறது. மதுரையில் சமணப் பள்ளிகள்
இருந்ததாக இந்நூல் குறிப்பிடுகிறது. அங்கிருந்த அருகதேவன்
கோயில் பற்றி இந்நூலின் 475-482 அடிகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோயில் குளிர்ச்சி மிக்க நிழலை உடையது. கோயில்
சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இவ் ஓவியங்கள்
கண்பார்வைக்கு எட்டாத உயரத்தில் இருந்தன. இக்கோயிலுள்
சாவகர் வணங்குகின்ற காட்சியும் ஓவியமாக்கப் பட்டுள்ளது.
சாவகர் என்பவர் சமணரில் விரதம் காக்கும் இல்லறத்தார்.
முக்காலங்களையும் உணர்ந்து உலகுக்கு உணர்த்தும் ஆற்றலைப்
பெறும் நோக்கில் சமண முனிவர்கள் நோன்பினை
மேற்கொள்கின்றனர். இதுவே மதுரைக் காஞ்சி காட்டும்
காட்சியாகும்.
2.3.3 பட்டினப் பாலை
பட்டினப் பாலை என்பதும் பத்துப்பாட்டில்
ஒன்றாகும். இந்நூல் காவிரிப்பூம்பட்டினத்தில் தவப்பள்ளி ஒன்று
இருந்ததைக் குறிப்பிடுகிறது (அடி 53). இப்பள்ளி சமணர்களுக்கு
உரியது என்றும் பௌத்தர்களுக்கு உரியது என்றும் இரு வேறு
கருத்துகள் உள்ளன. மணிமேகலை எனும் காப்பியம் காவிரிப்
பூம்பட்டினத்தில் அமண் பள்ளிகள் இருந்ததைக் குறிப்பிடுகிறது.
இந்த அமண் பள்ளியும் தவப்பள்ளியும் ஒன்று எனக் கருதவும்
இடமுள்ளது. எனவே, பட்டினப்பாலை நூல் கூறும் தவப்பள்ளி
சமணர்கள் உருவாக்கியது என்றும் அங்குச் சமண முனிவர்கள்
தவம் மேற்கொண்டனர் என்றும் துணியலாம்.
2.3.4 புறநானூறும் அருங்கலச் செப்பும்
புறநானூற்றில் 14 பாடல்கள் வடக்கிருத்தல் பற்றிக்
கூறுகின்றன. வடக்கிருத்தல் என்பது வடதிசை நோக்கி அமர்ந்து
உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் ஆகும். இதனை
சல்லேகனை என்று சமண சமயம் கூறும். அருங்கலச் செப்பு
இதனை,
இடையூறு ஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை
என்று கூறுகிறது. அதாவது, பொறுக்க முடியாத மனவேதனை,
இடையூறு, தீராத நோய், மிக்க மூப்பு இவை ஏற்படும் காலத்து
சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது இந்நூல் தரும்
விளக்கம் ஆகும். இது தற்கொலைக்கு ஒப்பாகும் என்று
குண்டலகேசி கூறுகிறது; இது தற்கொலை ஆகாது என்று
நீலகேசி மறுத்துக் கூறுகிறது.
பத்திரபாகு எனும் சமணப் பெரியாரும், கவுந்தி அடிகளும்
(சிலப்பதிகாரம் சுட்டும் சமணப் பெண் துறவி) வடக்கிருந்து
(ஸல்லேகனை இருந்து) உயிர் நீத்தனர். அதுபோல, புறநானூறு
65, 66ஆம் பாடல்கள் சேரமான் பெருஞ்சேரலாதன் புறப்புண்
ஏற்பட்டமையால் வடக்கிருந்து உயிர்நீத்ததைக் குறிப்பிடுகின்றன.
கோப்பெருஞ்சோழன் தன் மக்கள் அரசுரிமைக்காகக்
கலகம் செய்தபோது வடக்கிருந்து உயிர் துறந்தான். இதனால்
இவ்வரசனின் உயிர் நண்பரான பிசிராந்தையாரும் வடக்கிருந்து
உயிர் நீத்தார். இச்செய்திகளைப் புறநானூற்றில் 12 பாடல்கள்
(212-223) கூறுகின்றன. சங்கப் புலவர் கபிலரும் பாரி வள்ளல்
இறந்த பிறகு வடக்கிருந்து உயிர் நீத்தார் என்பது அறியத்
தக்கதாகும்.
எனவே சமணர்களுக்கு உரிய சல்லேகனை என்ற
செயல் தமிழ் இலக்கியங்களில் வடக்கிருத்தல் என்ற பெயரில்
பதிவாகி உள்ளதாகக் கருதலாம்.
2.3.5 திருக்குறள்
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் சமணர்
என்ற ஒரு கருத்தும் உண்டு. திருக்குறளில் சமண சமயக்
கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகக் கருதுவோர் காட்டுவன:
● ஆதிபகவன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
ஆதி பகவன் என்ற சொல் அனைத்து மதக் கடவுளையும்
குறிக்கும் பொதுச் சொல். ஆயினும் இச்சொல் அருகக்
கடவுளுக்கும் பௌத்தக் கடவுளுக்கும் பெருவழக்காய் உள்ளது.
இக்குறட்பாவில் இடம் பெற்றுள்ள இச் சொல் அருகப்
பெருமானைக் குறிப்பதாக ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி.
வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.
● மலர்மிசை
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
இறைவன் மலர் போன்ற திருவடிகளை உடையவன்
என்று அனைத்துச் சமயத்தாரும் கூறுவர். ஆனால், அருகக்
கடவுள் மலர்மேல் நடந்த திருவடிகளை உடையவன் என்று
சமண சமயத்தார் கூறுவர். மலர்மேல் நடந்த திருவடிகளை
உடையவன் அருக தேவன் என்ற செய்தி சூடாமணி நிகண்டு,
சேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டு, சிலப்பதிகாரம், சீவக
சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, யாப்பருங்கல விருத்தி,
திருநூற்றந்தாதி ஆகிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.
மேற்காட்டிய குறட்பாக்களே அன்றி மேலும் சில
குறட்பாக்களிலும் சமண சமயக் கருத்துகள் அமைந்துள்ளன.
குறட்பாக்களுக்கு உரை எழுதுவோர் தத்தம் நோக்கில் உரை
எழுதுகின்றனர். அவர்களின் கருத்துப்படி இக்குறட்பாக்களில்
சமண சமயக் கருத்துகள் அமைந்துள்ளன. ஆனால்
திருவள்ளுவர் சமண சமய நோக்கில் அக்குறட்பாக்களை
அமைத்தாரா என்பதும் அவர் சமணரா என்பதும் ஐயத்திற்கு
இடமானவை ஆகும்.
2.3.6 பெரிய புராணம்
சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் என்ற நூலில்
சமணர்கள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.
குலோத்துங்க சோழன் சமணக் காப்பியமாகிய சீவக
சிந்தாமணியைப் படித்து இன்புற்றான். அது காம நூல் என்றும்
அந்நூல் படித்தால் வீடுபேறு கிட்டாது என்றும் அந்நூல் பிற
சமய நூல் என்றும் அவனிடம் சான்றோர்கள்
எடுத்துரைத்தனராம். அவ்வாறாயின், நான் படிப்பதற்கு உரிய
சிறந்த சைவ நூலை எனக்குத் தாருங்கள் என்று சோழ மன்னன்
கேட்டானாம். மன்னனுக்குக் கொடுப்பதற்கு உரிய சிறந்த சைவ
நூல் இல்லாமையால் பெரிய புராணத்தைச் சேக்கிழார் எழுதி
அம்மன்னனிடம் கொடுத்தாராம். பெரிய புராணம்
தோன்றுவதற்கு உரிய காரணங்களுள் இதுவும் ஒன்று. இவ்வாறு
சேக்கிழார் புராணம் குறிப்பிடுகிறது. எனவே, இந்நூலின்கண்
சமண சமயக் கருத்துகள் மறுக்கப்படும் வகையிலும், சமண
சமயத்தைக் காட்டிலும் சைவ சமயமே சிறந்தது என்று
எடுத்துக்காட்டும் வகையிலும் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
சைவ சமயத்திற்கும் சமண சமயத்திற்கும் இடையே
சமயப் போர் நிகழ்ந்தமையையும் அதில் சைவர்கள் வெற்றி
பெற்றமையையும் பெரிய புராணம் விரிவாகக் கூறுகிறது.
- திருஞானசம்பந்தர் மதுரையில் எண்ணாயிரம் சமணர்களைக்
கழுவேற்றினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இச்
செய்தி திருவிளையாடல் புராணம், தக்கயாகப் பரணி
ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மதுரையில்
உள்ள பொற்றாமரைக் குளத்து மண்டபச் சுவரில்
ஓவியமாகத் தீட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரைக்
கோயிலில் நடைபெற்று வரும் விழாக்காலங்களில் ஐந்தாம்
நாள் கழுவேற்று உற்சவம் இன்றும் நடைபெற்று வருவதைக்
காணலாம். (எண்ணாயிரம் என்பது ஓர் ஊரின் பெயர்
என்று பின்னால் வந்த ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.)
- காஞ்சிபுரத்துக்கு அடுத்து உள்ளது திருவோத்தூர்.
இவ்வூரில் வாழ்ந்த சைவர் ஒருவர் பனை மரங்கள்
வளர்த்தார். அவை அனைத்தும் ஆண் பனைகளாக
இருந்தன. இதனைக் கண்ட சமணர்கள் இந்த ஆண்
பனைகள் பெண் பனைகள் ஆகுமா என்று கேலியாகக்
கேட்டனர். திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபொழுது
இச் செய்தியை அச் சைவர் அவரிடம் கூறினாராம்.
திருஞானசம்பந்தர் இப்பனைகள் பெண் பனையாக மாற
வேண்டிப் பாடல் பாடினார். மறுநாள் காலையில் அப்
பனைகள் பெண் பனைகளாக மாறி விட்டன. இதைக் கண்ட
சமணர் அவ்வூரை விட்டு ஓடி விட்டனர். இவ்வாறு பெரிய
புராணம் கூறுகிறது.
● சமண சமய எழுச்சி
திருஞானசம்பந்தருடைய தந்தையார் சிவபாத இருதயர்.
இவர் காலத்தில் சமணம் பெருவளர்ச்சி பெற்றிருந்தது. இதைக்
கண்டு இவர் மனம் வருந்தி “மேதினிமேல் சமண்கையர்
சாக்கியர்தம் பொய்ம் மிகுத்தே” என்று கூறுகிறார்.
பாண்டிய
நாட்டிலும் சமண சமயம் பெருகி இருந்தது.
இதைப் பெரிய புராணம்,
பூழியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி
என்று குறிப்பிடுகிறது. இங்ஙனம் தமிழ்நாடு முழுவதும் சமண
சமயம் பெருகி இருந்ததைப் பெரிய புராணம் வழி அறிய
முடிகிறது.
அதுபோல மகேந்திரவர்மனைச் சமண சமயத்தில் இருந்து
சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் என்று பெரிய
புராணம் கூறுகிறது. ஆனால் இந்நூல் மகேந்திரவர்மன் என்னும்
பெயரை நேரிடையாகக் கூறவில்லை. குணதரன் என்ற
பெயரையே இந்நூல் குறிப்பிடுகிறது. குணதரன் என்ற பெயர்
மகேந்திரவர்மனைக் குறிக்கும் என்பது வரலாற்றறிஞர்களின்
முடிபாகும்.
அப்பர் என்று அழைக்கப் பெறும் திருநாவுக்கரசர் சைவ
சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். இவரது இயற்பெயர்
மருள்நீக்கியார் ஆகும். இவர் சைவ சமயத்தினின்றும் விலகி,
சமண சமயத்தில் சேர்ந்துள்ளார். தருமேசேனர் என்ற பெயரைப்
பெற்றுச் சமண சமயத்தில் இருந்தார். பின்னர் அவரது
தமக்கையார் திலகவதி அம்மையாரின் முயற்சியால் மீண்டும்
சைவ சமயத்தைத் தழுவினார். அப்போதுமுதல் அப்பர்,
திருநாவுக்கரசர் முதலிய பெயர்களால் அழைக்கப்பட்டார். ஓர்
உயர்ந்த சைவ சமயத்தவர் மனம் மாறிச் சமண சமயத்திற்குச்
சென்றுள்ள இந்நிகழ்ச்சியின் மூலம் சமண சமயம்
திருநாவுக்கரசர் காலத்தில் தமிழகத்தில் எத்தகைய உயர்ந்த
நிலையில் இருந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம். |