3.2 வழிபாட்டு நெறிகள்


    சமணர்களின் கடவுளர், கடவுளரின் திருச்செயல்கள்,
இறைச் சின்னங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றித் தெரிந்து
கொள்வது சமணர்களை நன்கு விளங்கிக் கொள்ள வழி வகுக்கும்.

3.2.1 சமணக் கடவுளர்

    சமணர்களின் வழிபடு தெய்வங்கள் அருகர் அல்லது
இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களும் ஆவர். தீர்த்தங்கரர்
என்பவர் அருகபதவியை (பேரின்ப நிலையை) அடைந்தவர்.
ஆகவே தீர்த்தங்கரரை அருகன் என்றும் குறிப்பிடுவதுண்டு.
எனவே அருகனை வணங்குவோர் ஆருகதர் எனப்பட்டனர்.
மகாவீரர் 24ஆம் தீர்த்தங்கரர் ஆவார். இக்கடவுளர்
சமணர்களின் உயர்ந்த தெய்வங்கள் ஆவர். இந்திரன், யக்ஷி,
ஜ்வாலாமாலினி, சாஸ்தா
ஆகியோர் சமணர்கள் வழிபடும் சிறு
தெய்வங்கள் ஆவர்.

●  உயர்ந்த தெய்வங்கள்

    சமணர்களின் உயர்ந்த தெய்வங்கள் அருகக் கடவுள்
அல்லது இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களும் ஆவர். இவர்கள்
முதன்மைக் கடவுளர் என்றும் அழைக்கப்படுவர்.

    சமணர்களின்     தீர்த்தங்கரர்கள் உண்மையிலேயே
மனிதர்களாகப் பிறந்து, வாழ்ந்து உயர்நிலையை அடைந்தவர்கள்.
எனவேதான், இவர்கள் தெய்வ நிலைக்கு உயர்ந்த
பொழுதும்கூட இரண்டு கைகளை உடையவர்களாகச் சிற்பங்களில்
படைக்கப்பட்டனர். இவர்கள் மனிதர்களைவிட உயர்ந்தவர்கள்
ஆயினும் மீவியற்கை ஆற்றல் (நம்பமுடியாத ஆற்றல்)
இவர்களுக்குக் கிடையாது. இக்கருத்தை வெளிப்படுத்தும்
நோக்கில் இவ்வுருவங்களுக்கு இரண்டு கைகள் படைக்கப்பட்டன.

    ஆனால், சைவ வைணவ சமயத்தார் முறையே
சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட
கைகளைச் சிற்பங்களில் படைத்தனர். அதாவது இவர்கள்
மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த ஆற்றல் மிக்கவர்கள் -
மீவியற்கை ஆற்றல் மிக்கவர்கள் என்பதைக் காட்டுவதற்காக
இரண்டுக்கு     மேற்பட்ட கைகள் இக்கடவுளர்களுக்குப்
படைக்கப்பட்டன.     மேலும் இக்கடவுளர்கள் எல்லாத்
திசைகளிலும் பரவியிருக்கின்றனர் (வியாபித்திருக்கின்றனர்)
என்பதைக் காட்டுவதற்காகவும் சைவ, வைணவர்கள் தங்களின்
உயர்ந்த     தெய்வங்களான     சிவபெருமான்,     திருமால்
ஆகியோர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகளைப்
படைத்தனர்.

    சமணர்கள் தங்களின் முதன்மைக் கடவுளர்களுக்கு
இரண்டு கைகளையும் சைவ, வைணவர்கள் தங்களின் முதன்மைக்
கடவுளர்களுக்கு இரண்டுக்கு     மேற்பட்ட கைகளையும்
படைத்தனர் என்பதை இதன் மூலம் அறியலாம்.

●  சிறு தெய்வங்கள்

    சமண சமயத்தாரின் சிறு தெய்வங்கள் யக்ஷி, ஜ்வாலா
மாலினி, சாஸ்தா ஆகியோர். இக்கடவுளர் சிற்பங்களுக்குச்
சமணர்கள் இரண்டுக்கு மேற்பட்ட கைகளைப் படைத்தனர்.

    ஆனால், சைவ வைணவ சமயத்தார் தங்களின் சிறு
தெய்வங்களுக்கான சிற்பங்களில் இரண்டு கைகளை மட்டுமே
படைத்தனர். இரண்டுக்கு மேற்பட்ட கைகளைச் சிற்பங்களில்
அமைப்பது இல்லை. ஏனெனில் இவை சிறு தெய்வங்கள்;
உயர்ந்த தெய்வங்களைக் காட்டிலும் ஆற்றல் குறைந்தவை சிறு
தெய்வங்கள் என்பதைக் காட்டுவதற்காக இம்மதத்தினர் இவ்வாறு
படைத்தனர்.

●  ஓர் ஐயம்

    மனிதர்களைக் காட்டிலும் ஆற்றல் மிக்கவர்கள் தங்களின்
உயர்ந்த தெய்வங்கள் என்பதைக் காட்டுவதற்காகச் சைவர்களும்
வைணவர்களும் அத்தெய்வங்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட
கைகளைப் படைத்தனர்.

    சமணர்கள், தங்களின் தீர்த்தங்கரர்கள் மனிதர்களாக
இருந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் என்பதைக்
காட்டுவதற்காக இரண்டு கைகளை மட்டுமே படைத்தனர்.
அங்ஙனம் இருந்த சமணர்கள் தங்களின் சிறு தெய்வங்களுக்கு
இரண்டுக்கு மேற்பட்ட கரங்களை அமைத்ததன் காரணம்
தெரியவில்லை என்று ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி.
வேங்கடசாமி குறிப்பிடுவது கவனத்தில் கொள்ள வேண்டிய
செய்தியாகும்.