3.3 இறைச் சின்னங்கள்


    இறை உருவங்களின் சிற்பங்களில் கைகள் அமைக்கும்
முறை பற்றி மேலே கூறப்பட்டது. இனி, இறைவனின்
சின்னங்களுள் சடைமுடி, எருது ஆகியன அமைக்கும் வழக்கம்
பற்றிக் காணலாம்.

3.3.1 சடைமுடி

    சமணரின் முதல் தீர்த்தங்கரர் ரிஷப தீர்த்தங்கரர் என்ற
ஆதிநாதர். இவர் சடைமுடி கொண்டவராகச் சிற்பங்களில்
படைக்கப்பட்டார். இதனை,

ஆல நெடுநிழ லமர்ந்தானை
காலம் மூன்றும் கடந்தானை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயில் கடவுளை

என்று திருக்கலம்பகம் கூறுகிறது.

    சிவபெருமானும் சடைமுடி உடையவனாகப் படைக்கப்
பட்டான் என்பதை ஒப்புநோக்க வேண்டும்.

3.3.2 எருது

    ஆதிநாதரின் அடையாளச் சின்னம் ஏறு. (சிவபெருமானின்
வாகனமும் ஏறு) இதைச் சமணர்கள் விருஷபம் என்பர்.
சமணர்கள் இதனை அறத்தின் அடையாளமாகக் கொள்வர்.
இதனை,

திணிகுமி லேற்றினுக் கொதுக்கம்; செல்வநின்
இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே

என்று சீவக சிந்தாமணி கூறுகிறது.

3.3.3 நந்தியும் கோமுக யக்ஷனும்

    நந்தி சிவபெருமானின் வாகனம் என்பது சைவர்களின்
கொள்கை. சிவன் கோவில்களில் நந்திவாகன சேவை சிறந்ததாகக்
கருதப்படுகிறது. பிரதோஷத் திருநாளில் நந்தி தேவர்க்குச்
சிறப்புப் பூசைகள் செய்வது இன்று மிகப் பெரிய அளவில்
காணப்படுகிறது.

    சைவர்களின் நந்தி போல, சமணர்களுக்கு கோமுக யக்ஷன்
உள்ளது. இது எருது அல்லது பசுவின் முகம் கொண்டது.
திருக்கயிலாய மலையில் வீடுபேறு அடைந்தவர் ஆதிநாதர்
அல்லது விருஷப தேவர். இவருடைய பரிவார தெய்வங்களில்
முக்கியமானது கோமுக யக்ஷன்.

    சைவர்களின் நந்தி உருவமும் சமணர்களின் கோமுக
யக்ஷன் உருவமும் ஒப்பு நோக்கத்தக்கவை ஆகும்.


தன்மதிப்பீடு : வினாக்கள் - I

(1) சமணத்தின் முப்பிரிவுகள் யாவை?
(2) தமிழகத்தில் மிகுதியாக வாழ்ந்த சமணர்
எப்பிரிவினர்?
[விடை]
(3) சமணர்களின் கடவுளர் யாவர்?
(4) சமணக் கடவுளரின் சின்னங்களில்
இரண்டினைக் கூறுக.