5.4 தேரவாத, மகாயான பௌத்தங்கள்


    புத்தருக்குப் பிறகு பௌத்த மதத்தில் பிளவுகள்
ஏற்பட்டன. புத்தர் பரிநிர்வாணம் அடைந்து 110 ஆண்டுகளுக்குப்
பிறகு 700 பிக்குகள் வைசாலி நகரத்தில் கூடினர். புத்த மதத்தில்
தோன்றிய சில பழக்கங்களை எட்டு மாதங்கள் வரை ஆய்வு
செய்தனர். ஆய்வுக்குப் பிறகு புதிய பழக்கங்கள் கூடாது என்று
தடுத்தனர். ஏறக்குறைய 10,000 பிக்குகள் கண்டிக்கப்பட்டனர்.
கண்டிக்கப்பட்ட இவர்கள் ஒன்று சேர்ந்து தனிப் பிரிவாகப்
பிரிந்து போயினர்.

     இங்ஙனம் புத்த மதத்தில் புத்தரின் காலத்தில் இருந்த
கொள்கைகளைப் பின்பற்றுவோர் ஒரு பிரிவாகச் செயல்பட்டனர்.
இவர்கள் தேரவாத பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களது தேரவாத பௌத்தமே ஹீனயானம் என்று தவறாக
அழைக்கப்படுகிறது என்பது மயிலை சீனி.வேங்கடசாமியின்
கருத்தாகும்.

     அதுபோல, புத்தர் காலத்தில் இல்லாத புதிய
கொள்கைகளைப் பின்பற்றுவோர் வேறு ஒரு பிரிவாகச்
செயல்பட்டனர். இவர்கள் மகாயான பௌத்தர்கள்.
இவர்களது மதம் மகாயான பௌத்தம்     என்று
அழைக்கப்படுகிறது.