6.3 பன்னிரு சார்புகள் - விளக்கம்


    பௌத்தர்களின் பன்னிரு சார்புகள் பற்றிச் சற்று
விளக்கமாகத் தெரிந்து கொள்வது அவற்றை நன்கு விளங்கிக்
கொள்ள மிகவும் இன்றியமையாதது ஆகும்.

6.3.1 பேதைமையும் செய்கையும்

    பேதைமை என்றால் அறியாமை என்று பொருள்.
உண்மைகளை அறியாமை; மெய்ப்பொருளை     மறுத்தல்;
முயலுக்குக் கொம்பு உண்டு எனப் பிறர் கூறுவதை நம்புதல்
போன்றவை பேதைமையாகும்.

பேதைமை என்பதை மணிமேகலை 30ஆவது காதையில்,

ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல்

என்று சாத்தனார் குறிப்பிடுகிறார்.

●  செய்கை

    செய்கை என்றால் செயல் என்று பொருள். இங்குக்
கூறப்படும் செய்கை அறியாமையினால் நிகழ்வது. எனவே,
இதனைத் தீவினை என்பர். இத் தீவினைகள் உடல், வாய், மனம்
ஆகியவற்றால் நடைபெறும். இவை பத்து:

●  உடலால் விளைவன: 3

கொலை, கொள்ளை, காமம்.
●  வாயால் விளைவன: 4
பொய் பேசல், கோள் சொல்லல், கடுஞ்சொல்
பேசல், பயனற்ற சொற்களைப் பேசல்.
●  மனத்தால் விளைவன : 3
பிறர் பொருளை விரும்புதல், கோபம் கொள்ளல்,
பொல்லாக்காட்சி

    இச் செய்கைகள் பற்றி மணிமேகலை 30ஆவது காதை
குறிப்பிடுகிறது. விளக்கம் வேண்டுவோர் அங்குக் காண்க.

6.3.2 உணர்வும் அருவுருவும்

    செய்கையை அடுத்துக் கூறப்படுவது உணர்வு ஆகும்.
இது கண் உறங்குவோரின் உணர்வைப் போன்று விளக்கம்
எதுவும் இல்லாதது. ஈடுபாடும் செயலும் இன்றி இருக்கும் நிலை.
இதற்கு உணர்ச்சி, உள்ளம், சித்தம், மனம் என்ற பெயர்களும்
உண்டு.

●  அருவுரு

    அருவமானது உயிர், உருவமானது உடல், இரண்டும்
ஒன்று சேர்வது அருவுரு. இரண்டும் சேர்ந்து மனிதனின்
ஆளுமையைத் தீர்மானிக்கின்றன.

6.3.3 வாயில்கள்

    வாயில்கள் என்றாலும் அறிகருவிகள் என்றாலும் ஒன்றே.
அறி கருவிகள் ஆறு. அவை:

  • மெய்
  • வாய்
  • கண்
  • மூக்கு
  • செவி
  • மனம்

இவை அகவாயில்கள் என்றும் கூறப்படும். இவற்றால்
அறியப்படும் பொருள்கள் புறவாயில்கள் என்று கூறப்படும்.
ஆளுமையை உருவாக்குவன இவ் வாயில்கள் ஆகும்.

6.3.4 ஊறும் நுகர்வும்

    அக வாயில்கள் உதவியுடன் புறப் பொருள்களுடன்
தொடர்பு கொள்வது ஊறு எனப்படும். ஊறு என்றால் ஸ்பரிசம்
என்று பொருள்.

●  நுகர்வு

    நுகர்வுப் பொருள்களை (புறப் பொருள்களை) நுகரும்
திறம் நுகர்வு ஆகும். அதாவது புலன்களை உணர்ந்து அவற்றின்
பயனை அனுபவித்தல்.

  • இன்பம் தருவது
  • துன்பம் தருவது
  • இரண்டும் அற்றது

என்று நுகர்வு மூவகைப்படும்.

6.3.5 வேட்கை - பற்று - பவம்

    வேட்கையை விருப்பம் அல்லது அவா என்பர்.
பொருள்களின் மேல் மேலும் மேலும் ஆசையை வளர்த்துக்
கொள்வது இந்நிலை ஆகும்.

    பொருள்களின் மேல் ஆசை வளர்ந்து கொண்டே
செல்லும். இந்த ஆசை நிறைவடையாது. நுகர்வின் காரணமாக
வேட்கை மிகும்.

●  பற்று

    பொருள்களின் மேல் ஏற்படும் நெருக்கம் - சொந்தம் -
பந்தம். கட்டுக்கு அடங்காத ஆசை அல்லது அவா. இந்த
அவாவைப் பற்றி நிற்கும் நிலை. இதையே பற்று என்பர்.
வேட்கையின் விளைவாகப் பற்று உண்டாகும். இதுவே
அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் ஆகும்.

●  பவம்

    இது கருமங்களின் கூட்டம் அல்லது தொகுதி. இது
வேட்கை, பற்று முதலியவற்றால் தோன்றும்.

6.3.6 தோற்றம்

    தோற்றம் என்பதைப் பிறப்பு என்றும் கூறுவர். நுகர்வு,
வேட்கை, பற்று ஆகியவற்றால் உருவான வினைத் தொகுதிகள்
புதுப்பிறவியை உண்டாக்குகின்றன.

6.3.7 வினைப்பயன்

    வினைப் பயன் பிணி, மூப்பு, சாக்காடு என்று
மூவகைப்படும்.

●  பிணி

    உடலுக்குத் துன்பத்தைத் தருவது பிணி. முன்வினைப்
பயனால் உயிரோடு பிணித்து (கலந்து) வருவது.

    பசியைப் பிணி என்பர். ஏனெனில், பசி நம்மை விட்டுப்
போகாது. அவ்வப்பொழுது சாப்பிட்டுப் பசியைத் தணிக்கலாம்.
சாப்பிட்டாலும், சாப்பிடாது விட்டாலும் மீண்டும் பசி ஏற்படும்.
இதனால் தான் பசிப்பிணி என்கிறோம்.

●  மூப்பு

    மூப்பு என்பது வயதான நிலை; அதனால் உடலில்
தளர்ச்சி ஏற்படுதல். இது சாகும் வரை உடன் வருவது.

●  சாக்காடு

    சாக்காடு என்பது இறப்பு. சூரியன் மறைவதைப் போல
உடலும் மறைவது. இது அருவாகவும் உருவாகவும் உள்ள
தன்மையது.

    எனவே, இதுகாறும் கூறிய பன்னிரு சார்புகளையும் நீக்கி,
வாழ்ந்தால் பிறவித் துன்பம் நீங்கும் என்ற பௌத்த மதக்
கொள்கையை நன்கு தெளியலாம்.