பாடம் 1

A01111 : காப்பியம் - ஓர் அறிமுகம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் காப்பியம் என்ற இலக்கிய வகை பற்றிப்
பேசுகிறது. ஆங்கிலத்தில் Epic என்ற சொல்லால் இது
குறிக்கப் படுகிறது. கிரேக்க - லத்தீன் மொழிகளில்
முன்முறைக் காப்பியம் (Primitive Epic) வழிமுறைக்
காப்பியம் (Secondary Epic) வீரயுகக் காப்பியம் (Chivalric
Epic) எனப் பல வகையாகக் கூறப்படுகிறது. வடமொழியில்
இதிகாசம், மகாகாவியம், காவியம், சம்பு காவியம், சந்தேச
காவியம், உத்பாத்தியம், கண்ட காவியம் என வகைப்படுத்தப்
பெறுகின்றது. தமிழில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம்,
புராண காவியம் என அமைகின்றது. இத்தகைய காப்பிய
வகை பற்றிப் பேசுகிறது இந்தப் பாடம்.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
காப்பிய இலக்கியத் தோற்றம், வளர்ச்சி பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
உலக     இலக்கியங்களில்     காப்பியம் பெற்றுள்ள
சிறப்பிடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
காப்பியம்     பல்வேறு     இலக்கிய வகைகளுக்குத்
தோற்றுவாயாக அமைந்துள்ளதை அறிந்து இன்புறலாம்.
காப்பிய வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
சமூகம், சமயம், வரலாறு ஆகியவற்றை மீட்டுருவாக்க
காப்பியம்     துணைபுரிவதை     அறிந்து பெருமிதம்
அடையலாம்.