பெரியபுராணம் பாடிய சேக்கிழாரின் காலம் குறித்து
ஆராய்ச்சியாளர்
பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் தர்மவரம் வட்டத்திலுள்ள
முத்தூர்ச்
சிவன் கோயிலில் வீரராசேந்திர சோழனின் கல்வெட்டு
ஒன்று
உள்ளது.
இக்கல்வெட்டு சோழனின் நான்காம் ஆட்சி
ஆண்டில்
வெட்டப்பட்டது.
இதில் உத்தம சோழப்
பல்லவராயனுடைய மகன் சிவன் கோயிலுக்குத்
திருநந்தா விளக்கு (கோயிலில் பயன்படுத்தப்படும் விளக்குகளுள்
ஒன்று)
வைத்த
செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னனது
காலம் கி.பி.1207
முதல் 1252 வரை. இக்காலம் பற்றிய கருத்தை
அறிஞர்
மு.இராகவையங்கார்
மறுத்துக் கூறியுள்ளார்.
சேக்கிழாரின் வரலாற்றைக் கூறும் நூல் சேக்கிழார் புராணம்
என்பதாகும். இந்நூல், சேக்கிழார் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னனை
அநபாயன் என்று குறிப்பிட்டுள்ளது. சேக்கிழார் தமது
பெரியபுராணத்தில் தம்மை ஆதரித்த சோழ மன்னனை அநபாயன்
என்றே பத்து இடங்களில்
குறிப்பிட்டுள்ளார். சேக்கிழார் போன்றே
சோழர் காலத்தில் வாழ்ந்த
இன்னொரு புலவர் ஒட்டக்கூத்தர் என்பவர்.
இவர் தம்மை ஆதரித்த
மன்னனையும் அநபாயன் என்றே கூறியுள்ளார்.
சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் கூறும் அநபாயன் பற்றிய செய்திகள்
ஒத்துக்
காணப்படுகின்றன. ஒட்டக்கூத்தர் குறிப்பிடும் அநபாயன்
இரண்டாம்
குலோத்துங்கச் சோழன் ஆவான். எனவே சேக்கிழாரை
ஆதரித்த
அநபாயன் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் என்று
கருதலாம்.
இரண்டாம் குலோத்துங்கனுடைய மகன்
இரண்டாம்
இராசராச சோழன் ஆவான். இவனது 17 - ஆம் ஆட்சியாண்டில்
பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு
திருமழபாடி சிவன் கோயிலில்
பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில்,
“ஜயங்கொண்ட சோழ மண்டலத்து.......
குன்றத்தூர்ச்
சேக்கிழான் மாதேவடிகள்
ராமதேவனான
உத்தம சோழப் பல்லவராயன்”
என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. இத் தொடரில் உள்ளகுன்றத்தூர்
என்பது ஊரின் பெயர். இவ்வூரில்தான் சேக்கிழார்
பிறந்தார்.சேக்கிழான்
என்பது
வளோள மரபைச் சேர்ந்த ஒரு
குடியின் (குடும்பத்தின்) பெயர்.
இக்குடியில் தான் சேக்கிழார் பிறந்தார்.
மாதேவடிகள் ராமதேவன்
என்பது ஒருவரின் பெயர். உத்தம சோழப் பல்லவராயன் என்பது
சேக்கிழாருக்குச் சோழன் அளித்த பட்டப் பெயர் ஆகும். மாதேவடிகள்
ராமதேவன் என்பது சேக்கிழாருக்கு அவர் முன்னோர்கள் வைத்த
இயற்பெயராக இருக்கலாம் என்று அறிஞர் க.வெள்ளைவாரணன்
குறிப்பிடுகின்றார். எனவே இக்கல்வெட்டு, பெரியபுராண ஆசிரியர்
சேக்கிழாரையே குறிப்பிட்டுள்ளது
என்று கருதுகின்றனர்.
இவற்றால் சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும்
அவன் மகன் இரண்டாம் இராசராச சோழன் காலத்திலும் வாழ்ந்தவர்
என்பது தெரிய வருகின்றது. இவர்களுள் சேக்கிழார் குறிப்பிடும்
அநபாயன் என்ற பெயருடையவன் இரண்டாம் குலோத்துங்கன்
ஆவான். எனவே இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்
பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார், அம்மன்னனி்ன் மகன்
காலத்திலும் வாழ்ந்துள்ளார் என்பது தெரிய வருகின்றது. இரண்டாம்
குலோத்துங்கனின் காலம் கி்.பி. 1133- முதல் 1146 வரை ஆகும்.
இவன் காலத்தவரே சேக்கிழார் என்ற கருத்தை வரலாற்றறிஞர்கள்
மா. இராசமாணிக்கனாரும், மு. இராகவையங்காரும் உடன்பட்டு எழுதி
உள்ளனர்.
வரலாற்று அறிஞர்.
சதாசிவ பண்டாரத்தார், சேக்கிழார் மூன்றாம்
குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர் என்பதை
விரிவாக விளக்கி
உள்ளார். இவற்றை எல்லாம் ஆராய்ந்த அறிஞர் க.வெள்ளை
வாரணனார்,
சேக்கிழார் “இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியின்
இறுதிக் காலத்தில் தொடங்கி அவன் மகன் இரண்டாம் இராசராசன்
காலத்திலும் இவனது மகன் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியின்
முற்பகுதியிலும் வாழ்ந்துள்ளார்” என்று முடிவு கூறி உள்ளார். எனவே
சேக்கிழாரின் காலம் 12- ஆம் நூற்றாண்டு என்பது உறுதிப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில்தான் பெரியபுராணமும் இயற்றப்பட்டுள்ளது என்று
கருதப்படுகிறது.
|