3.2 தமிழ் இலக்கிய வரலாற்றில் இராமாயணம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. வெண்பா யாப்பில் அமைந்த இராமாயணமும், ஆசிரியப்பாவில் அமைந்த இராமாயணமும் முன்பு இருந்து, பின்பு அழிந்திருக்க வேண்டும் என்று மயிலை. சீனி வேங்கடசாமி போன்றோர் கருதுகின்றனர்.

3.2.1 புறநானூறும் இராமாயணமும்

மக்கள் இடையே வழக்கத்தில் இருந்த சில இராமாயணக் கதை நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் வரும் ஒரு குறிப்புக் கருதத் தக்கது.

குரங்குகள் அணிந்த நகைகள்

மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றான். அப்போது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண் வழியே கொண்டு செல்லும் போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக் கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டன. இதைப்போல், இளஞ்சேட் சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத பொன் நகைகளை, இவனது வறுமை மிக்க உறவினரும் சுற்றத்தாரும்; அணிந்து கொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் புறநானூற்றில் பாடியுள்ளார். இராமாயண நிகழ்ச்சி சங்கப் பாடலில் இவ்வாறு உவமையாகப் பாடப்பட்டுள்ளது. தெரிந்த ஒன்றைக் காட்டித் தெரியாததை விளக்குவதே உவமையின் முதன்மையான பயன்பாடு. எனவே, இராமாயணக் கதை, அன்று மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது.

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு

(புறம். 378)

(கடும் = கடுமை; தெறல் = சினத்தல் / அழித்தல்; வலி = வலிமை; அரக்கன் = இராவணன்; வௌவிய = கவர்ந்த; ஞான்று = அப்போது; மதர் அணி = மதிப்புமிக்க அணிகள்; இழை = அணிகலன்கள்; செம்முகப் பெருங்கிளை = சிவந்த முகத்தை உடைய குரங்கின் கூட்டம்; பொலிந்து = நகைகளை அணிந்து பொலிவு பெறுதல்.)

3.2.2 அகநானூறும் இராமாயணமும்

மேலே குறிப்பிட்டதைப் போன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமாயணக் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

பறவைகளின் ஒலியும் இராமனும்

காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப் பற்றி ஊரார் பழி தூற்றிக் கொண்டிருந்தனர். இதற்கு அலர் தூற்றுதல் என்று பெயர். ஒருநாள் அத்தலைவன் வந்து அத்தலைவியையே மணம் செய்து கொண்டான். அன்றே ஊரார் பழி தூற்றுவதை நிறுத்திக் கொண்டனர். ஊர் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த பழிப்பேச்சின் ஓசை உடனடியாக நின்றுவிட்டது. இதற்குப் புலவர் ஓர் உவமையை அழகாகக் கூறியுள்ளார். இலங்கைப் படையெடுப்பின் போது இராமன் ‘தொன்முதுகோடி’ எனப்படும் தனுஷ்கோடியில் வந்து தங்கி இருந்தான். அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழல். இராமன் இலங்கைப் படையெடுப்பு தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக் காட்டினான். உடனே அத்தனை பறவைகளும் அமைதி கொண்டு அடங்கிவிட்டன. இதைப் போல, தலைவன் தலைவியை மணமுடித்துக் கைப்பிடித்த உடனேயே, அதுவரை ஊரெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பழிப்பேச்சுகள் அடங்கின என்று தோழி கூறுவதாக அந்தப் பாடலில் புலவர் இராமாயண நிகழ்ச்சியை உவமையாகக் கையாண்டுள்ளார்.

அப்பாடல் வரிகள் இதோ:

வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.

(அகம். 70)

(வெல்வேல் = வெற்றி பொருந்திய வேல்; கவுரியர் = பாண்டியர்; தொன்முது கோடி = பழமையான தனுஷ்கோடி எனும் ஊர்; இரும் = பெரிய; பௌவம் = கடல்; இரங்கு = ஒலிக்கும்; முன்துறை = துறைமுகம்; வெல்போர் = வெற்றி பொருந்திய போர்; அருமறை = மந்திர ஆலோசனை / போருக்கு முன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம்; அவித்த = அடங்கிய; வீழ் = விழுது;ஆலம் = ஆலமரம்; அவிந்தன்று = அடங்கியது; அழுங்கல் = ஆரவாரம்)

மேலே கூறப்பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளுமே வான்மீகி இராமாயணத்திலோ, கம்பராமாயணத்திலோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3.2.3 சிலம்பும் இராமாயணமும்

இராம அவதாரம் பற்றிய புராணக் கதையைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது. இராமாயணக் கதை சுருக்கமாகச் சிலப்பதிகாரத்தில் இரு இடங்களில் பேசப்படுகிறது.

ஊர்காண் காதையில்

தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ

             (சிலம்பு. ஊர்காண் காதை. 46-49)

(தாதை = தந்தை / தயரதன்; மாது = பெண் / சீதை; வேதமுதல்வன் = நான்முகன் / பிரம்மன்; வேதமுதல்வன் பயந்தோன் = பிரம்மனைப் பெற்றெடுத்த திருமால்; நெடுமொழி = பழங்கதை.)

இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்). அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான். பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?

இப்பகுதி, கோவலனுக்குச் சொல்லப்படும் ஆறுதல் மொழியாக இடம்பெற்று உள்ளது.

ஆய்ச்சியர் குரவை

திருமாலைப் போற்றி இடைக்குல மக்கள் பாடும் ஆய்ச்சியர் குரவையிலும் அவனது இராம அவதாரம் பற்றிய குறிப்பு வருகிறது.

மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த
சேவகன்சீர் களோத செவிஎன்ன செவியே

             (சிலம்பு- ஆய்ச்சியர் குரவை)

(மூஉலகு = மூன்று உலகம் / மேலுலகம், கீழ் உலகம், பூமி ; ஈரடி = கால்கள்; நிரம்பா வகை = குறைவுபடும்படி; சேப்ப = சிவக்க; சோ அரண் = சோ என்ற மதில்; சீர் = புகழ்.)

திருமாலின் பத்து அவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. வாமன அவதாரத்தில் மாவலி மன்னன் தானமாகத் தந்த மூன்றடி மண்ணையும் அளந்து பெறுவதற்காக வாமனன் பேருருக் கொண்டான். மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளால் அளந்தான். அத்தகைய திருவடிகள் சிவக்க, இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.

சிலம்பு தரும் செய்தி

சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறாதது. ஆனால் சிலப்பதிகாரம் கூறும் செய்தி வான்மீகி இராமாயணத்தை அடி ஒற்றியது. மேலும் திருமால் அவதாரமாக இராமன் கருதப் பெற்றதையும் விவரிப்பது.

3.2.4 பிற்கால இராமாயணங்கள்

கம்பருக்கு முன் தமிழ்நாட்டில் நிலவிய இராமாயணம் பற்றிய செய்திகளை இதுவரை தெரிந்து கொண்டோம். இவையே தமிழ் இலக்கியத் தொடக்க காலத்தில் உள்ள செய்திகளாக அறிய முடிகிறது. பின்னாளில் பல்லவர் காலத்தில் ஆழ்வார்கள் இராம அவதாரத்தின் பல்வேறு செய்திகளைப் பாடி இருக்கிறார்கள். இவை யாவும் கம்பருக்கு முன் உள்ள இராமாயண இலக்கியங்களாக அறிய முடிகிறது. கம்பருக்குப் பின்னரும் தமிழில் இராமாயணங்கள் தோன்றி உள்ளன. அவை வருமாறு.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

கம்பர் பற்றி வழங்கும் பழந்தொடர்கள் இரண்டினையும் சுட்டுக.

விடை

2.

கம்பர் இயற்றிய நூல்களில் இரண்டினைச் சுட்டுக.

விடை

3.

கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?

விடை

4.

கம்பருக்குப் பின் தமிழில் தோன்றிய இராமாயணங்கள் இரண்டினைச் சுட்டுக.

விடை

5.

சங்க இலக்கியம் சுட்டும் இராமாயண நிகழ்ச்சி ஒன்றினை விவரிக்க.

விடை