தமிழ்மொழி பல்வேறு காலக் கட்டங்களில் எவ்வாறு
இருந்தது
என்று வரலாற்று அடிப்படையில் ஆராய்வது அவசியம்.
அவ்வரலாற்றினைக் கீழ்க்காணும் மூன்று கோணங்களில்
அணுகலாம்:
தமிழ்மொழி அக வரலாறு |
தமிழ்மொழி அகப்புற வரலாறு |
தமிழ்மொழி புற வரலாறு |
இவ்வாறு பகுத்துக் கொண்டு நுணுக்கமாக ஆராயும்போது
முழுமையான பார்வை கிடைக்கும்; தெளிவு பிறக்கும்.
தமிழ்மொழியில் இடம் பெற்றிருக்கும் உயிர் ஒலியன்கள்
(Vowels), மெய் ஒலியன்கள் (Consonants), சார்பொலியன்கள்,
பெயர்ச்சொற்கள் (Nouns), அடிச்சொல் (Root Morpheme),
மூவிடப் பெயர்கள் (Pronouns), எண்ணுப் பெயர்கள்
(Numerals), வேற்றுமை (Case), வினைச்சொற்கள் (Verbs),
இடைநிலைகள் (Suffixes), தொடரமைப்பு முறைகள் (Syntactic
Structures) முதலியன பழங்காலத்தில் எவ்வாறு இருந்தன
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எவ்வகை மாற்றங்களை
அடைந்தன என்று 21ஆம் நூற்றாண்டு வரை பரிசீலிப்பதைத்
தமிழ்மொழி அக வரலாறு என்று வரையறை செய்யலாம்.
சான்றாக,
எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப (தொல்.
எழுத்து. நூன்மரபு. நூ. 1) |
எழுத்து என்பது தமிழில், ‘அ’ என்பதில் தொடங்கி ‘ன்’
என்பது
வரையிலான முப்பது என்று தொல்காப்பியத்தின் முதல்
நூற்பா
வரையறுக்கிறது.
ஒளகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப (மேலது. நூ. 8) |
அகரம் முதல் ஒளகாரம் வரை உள்ள பன்னிரண்டும்
உயிர் எழுத்துகள்
ஆகும்.
னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப (மேலது. நூ. 9) |
ககரம் முதல் னகரம் வரை உள்ள பதினெட்டு எழுத்தும்
மெய் எழுத்துகள் என அன்று செய்த வரையறை இன்றளவும்
தொடர்வதை நீங்கள் படித்திருப்பீர்கள். வியப்பாக இருக்கிறது
அல்லவா? இதுபோல் வரலாற்று நோக்கில் ஆராய்வதைத்தான்
'தமிழ்மொழியின் அகவரலாறு’ என்று வசதிக்காக இப்பாடத்தில்
வரையறை செய்யப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தமிழ் ஒலியன், தமிழ்
உருபன், தமிழ்த் தொடர் எங்ஙனம் இருந்தன என்பதை
அந்தந்தக் காலக் கட்டத்துத் தரவுகளின் அடிப்படையில்
ஆராயலாம். தொல்காப்பியர் காலத் தமிழில் ஒலியன், உருபன்,
தொடர் அமைப்பு எவ்வாறிருந்தன
என்பதைத்
தொல்காப்பியத்தையே அடிப்படையாகக் கொண்டு ஆராயலாம்.
சங்க காலத் தமிழ் எங்ஙனம் இருந்தது என்பதைச் சங்க
இலக்கியங்களின் துணை கொண்டு ஆராயலாம். பல்லவர் காலத்
தமிழ் பற்றி அறிந்து கொள்ளப் பக்தி இலக்கியத்தை உதவியாகக்
கொள்ளலாம். சோழர் காலத் தமிழைப் பற்றி அறிய அவர்கள்
வெளியிட்ட கல்வெட்டுகளைப் பயன்படுத்தலாம். இப்படி ஒரு
குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமிழ்மொழி எவ்வாறு இருந்தது
என்று ஆராய்வதை அகப்புற வரலாறு எனலாம்.
தொல்காப்பிய விதிப்படி ‘சகரம்' எந்தவொரு சொல்லுக்கும்
முதல் எழுத்தாக வராது (எழுத்து. மொழிமரபு, நூற்பா. 29).
ஆனால் சிலப்பதிகாரத்தில் ‘சகடு, சண்பகம், சதுக்கம்,
சந்தனம், சந்தி, சதங்கை, சக்கரம், சகடம்,
சங்கமன் போன்ற
சொற்கள் சகரத்தை முதல் எழுத்தாகக் கொண்டு இடம்
பெற்றுள்ளன. அதேபோல் மணிமேகலையில் ‘சம்பாபதி,
சரவணம், சனமித்திரன், சரண், சலம், சபக்கம்,
சண்பகம் போன்ற
சொற்கள் உள்ளன. இவை போன்றவற்றை ஆராய்வது அகப்புற
வரலாறு ஆகும்.
வெவ்வேறு மொழி பேசுவோர் கலந்து பழகும்போது ஒரு
மொழியில் உள்ள சொற்கள் மற்றொரு மொழியில் கலப்பது
உண்டு. அவ்வாறு கடன் வாங்கப்பட்ட சொற்கள் இல்லாத
மொழியே உலகில் இல்லை என்பார்கள். அவ்வகையில் தமிழில்
வந்து கலந்த பிற மொழிச் சொற்களின் கலப்புப் பற்றியும், ஒரு
சொல்லுக்கு உரிய பொருள் ஒவ்வொரு காலத்திலும் மாறி
வருவது பற்றியும், கிளைமொழிகள் பற்றியும் ஆய்வதைப்
புற வரலாறு எனலாம்.
‘தண்ணீர்’, ‘நீர்’, ‘வெள்ளம்’ என்பன நீரைக்
குறிக்கும்
தமிழ்ச்சொற்கள். கடலில் மீன் பிடித்து வாழ்வதை வாழ்க்கை
முறையாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்களின் மத்தியில்,
ஏறிணி |
வத்தொம் |
கலக்கு |
தெளிவு |
பணிச்சல் |
மிதாவது |
சுரப்பு |
மேமுறி |
என்று ‘நீரைக் குறிக்கும் சொற்கள்’ இன்றும் புழக்கத்தில்
உள்ளன. இதைப் பற்றி ஆய்வது புறவரலாறு எனல்
பொருத்தம்தானே!
அதுசரி, தமிழ்மொழியை இப்படி எல்லாக் கோணங்களிலும்,
எல்லாக் காலக் கட்டங்களையும் முன்னிறுத்தி ஆராய்வதற்குச்
சான்றுகள் வேண்டாவா? அவசியம் வேண்டும். மக்கள் எப்படிப்
பேசினார்கள் என்பதை இன்று போல் கணினிக் குறுந்தகட்டில்
பதிவு செய்யும் நிலை பழங்காலத்தில் இல்லை. என்றாலும்
பிற வகைச் சான்றுகள் கிடைத்துள்ளன. பழங்காலத்திய
கல்வெட்டுகள், இலக்கணங்கள்,
இலக்கியங்கள்,
உரையாசிரியர்கள், அகராதிகள், அயல்நாட்டார் குறிப்புகள்
முதலானவை தமிழ்மொழி வரலாறு அறிய உதவும் சான்றுகளாகத்
திகழ்கின்றன. |