3.5 அயல்நாட்டார் குறிப்புகள் |
||||||||
அயல் நாட்டார் குறிப்புகளில் இடம் பெறும் தமிழ்ப் பெயர்கள், தமிழ்ச் சொற்கள் முதலியனவும் தமிழ்மொழி வரலாறு அறிய உதவும் சான்றுகளாகத் திகழ்கின்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த வரருசியும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பதஞ்சலியும் தம் வடமொழி நூல்களில் தமிழ்மொழிச் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர். ‘பாண்டியர்’ என்னும் சொல் மகாபாரதத்து அரசரான பாண்டுவின் பெயரிலிருந்து வந்ததாக வரருசி கூறுகிறார். பாண்டி, சோழர் என்னும் தமிழ்ச் சொற்கள் அரசரையும், நாட்டையும் குறிக்கும் என்கின்றார். பதஞ்சலி காஞ்சி என்ற சொல்லைக் குறிப்பிடுகின்றார். பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த லீலா திலகம் என்ற மலையாள இலக்கண நூல் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் நிலவிய சில மொழி வழக்குகளையும், உச்சரிப்புகளையும் குறிப்பிடுகின்றது. மெகஸ்தனிஸ், ப்ளினி, தாலமி ஆகியோர் தம் நூல்களில் தமிழக ஊர்ப் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். ‘கொற்கை’ நகரைக் ‘கொல்சி’ என்றே கூறியுள்ளனர். இது தமிழ்ச்சொற்கள் பிற மொழியாளர்களால் எங்ஙனம் கேட்கப்பட்டன என்று உணர்த்துவதாகக் கொள்ளலாம். தாலமி ‘மல்லியர்பா’ என்று சென்னைக்கு அருகில் உள்ள துறைமுகத்தைக் கூறுகிறார். இது, ‘மயிலாப்பூர்’ என்பதன் கிரேக்க உச்சரிப்பாகத் தோன்றுகிறது. யுவான்சுவாங், மார்க்கோபோலோ ஆகியோர் குறிப்புகளில் தமிழ்ச் சொற்கள் உள்ளன. 17 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த ராபர்ட்-டி- நொபிலி ‘ச’ என்ற ஒலியை, ‘tch’ என்றே எழுதியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் வந்த வீரமாமுனிவர் ‘ச’ வை, ‘s’ என எழுதியுள்ளார். இங்ஙனம் தமிழ் ஒலியியல் மற்றும் மொழியியல் ஆய்விற்கு அயல்நாட்டார் குறிப்புகள் சான்றுகளாகத் திகழ்கின்றன.
|