4.3 தென் திராவிட மொழிகள்

     தமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா, தோடா,
கன்னடம், படகா, துளு
ஆகிய ஒன்பது மொழிகளும் தென்
திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன.

4.3.1 தமிழ்மொழி


    திராவிட மொழிகளில் பழமையான மொழி தமிழ் ஆகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே இலக்கிய,
இலக்கணங்களைக் கொண்ட மொழி தமிழ்மொழி. தமிழகம்,
பர்மா(மியான்மர்), மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவு,
இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் கயானா,
மடகாஸ்கர், திரினிடாட்
போன்ற நாடுகளில் பேசப்படுகிறது.
இன்று தமிழ் பேசுவோர் உலகெங்கும் வாழ்கின்றனர். ஏழு
கோடி மக்களால் தமிழ்மொழி பேசப்படுகிறது. சிங்கப்பூரில்
ஆட்சிமொழிகளில் ஒன்றாக உள்ளது.

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல் உலகத்து

(தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் : 1-3)

என்று தொல்காப்பியப் பாயிரத்தில் தமிழ் வழங்கும் பகுதிகள்
சொல்லப்பட்டுள்ளன.

வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று
அந்நான் கெல்லை

என்று காக்கை பாடினியார் என்னும் புலவர் தமிழ் வழங்கிய
எல்லையினைக் கூறுகிறார். தென் இந்தியாவில் மேற்குத்
தொடர்ச்சி மலைக்கும், வங்காள விரிகுடாவிற்கும் இடைப்பட்டுப்
பழவேற்காடு முதல் குமரி வரை பரந்து கிடக்கும் நிலப்பகுதி
தமிழ் வழங்கும் பகுதி என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.
'இந்திய மொழிகளுள் சமஸ்கிருத மொழிக்கு அடுத்த நிலையில்
பன்னாட்டு அறிஞர்களது கவனத்தைக் கவர்ந்த மொழியாகத்
தமிழ் உள்ளது. பழங்காலத்தில் தமிழ் செவ்வியல் நிலையை
எய்தியது. இது திராவிட நாகரிகத்தின் சிறப்பை உலகிற்குக்
காட்டும் சான்றாக இந்தியா உள்ளது' என்று குல்பெர்ட்
சிலேட்டர்
கூறுவார். 'சங்கத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும்
26,350 வரிகள் உலகின் ஒப்புயர்வற்ற மொழி தமிழ் என்பதை
நிலை நிறுத்துகின்றன' என்று செக்கோ சுலோவாக்கிய நாட்டுத்
தமிழறிஞர் கமில் சுவலபில் தனது முருகனது சிரிப்பு (Smile
of Muruga) நூலில் எழுதுகிறார். 'தமிழ்மொழி கிரேக்க
மொழியை விடப் பண்பட்டது. இலத்தீனை விட அழகானது.
ஆற்றலிலும் முழுமையிலும் ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய
மொழிகளுக்கு இணையானது' என்று ஆங்கில இலக்கிய
ஆக்ஸ்போர்டு துணைநூல் (Oxford Companion to English
Literature 1992 p. 1021) குறிப்பிட்டுள்ளது. 'இன்றுள்ள இந்திய
மொழிகளில் செவ்வியல் மொழியாக அமைந்து அதே
செழுமையுடன் தொடரும் ஒரே மொழி தமிழ்' என்று தமிழ்
இலக்கியங்களை     ஆங்கிலத்தில்     மொழி பெயர்த்த
ஏ.கே. இராமானுஜம் குறிப்பிட்டுள்ளார். மற்றைய மொழிகளின்
உதவியின்றித் தனித்து இயங்கவல்ல மொழி தமிழ்மொழி.
‘திராவிட மொழிகளும் தமிழும்’ என்னும் அடுத்த பாடத்தில்
தமிழ் பற்றி விரிவாகப் படிப்போம்.

4.3.2 மலையாளம்


    கேரளத்தில்
     பேசப்படும்     மொழி     மலையாளம்.
இலட்சத்தீவிலும்
பேசப்படுகிறது. தமிழுடன் நெருங்கிய
தொடர்பு உடைய மொழி. திராவிட மொழிகளில் தமிழுக்கு
அடுத்து வைத்து எண்ணப்படும் மொழி மலையாளம். இரண்டு
கோடி மக்கள் பேசுகின்றனர். 'தமிழின் மிகத் திரிந்தமொழி
மலையாளம்' என்பார் கால்டுவெல். இலக்கிய வளத்திலும்,
படைப்பாற்றலிலும் இன்றைய நிலையில் திராவிட மொழிக்
குடும்பத்தில் மிக உயர்ந்த இடத்தை மலையாளமே பெறுகிறது.

  • மலையாள மொழி பால்காட்டும் விகுதிகளை (Pronominal
    Terminations) விலக்கியுள்ளது.
  • வடமொழிச் சொற்களை அதிக அளவு ஏற்றுக்
    கொண்டுள்ளது.
  • தமிழில் ‘ஐ’ கார ஈற்றைக் கொண்டு முடியும் சொற்கள்
    மலையாளத்தில், ‘அ’ கர ஈற்றைப் பெறுகின்றன.

    (எ.கா.)

    தமிழ்
    - மலையாளம்
    மலை - மல

    மலையாள மொழிக்கு டாக்டர் குண்டர்ட் இலக்கண நூலும்,
    அகராதியும் எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து,
    புறநானூற்றில்
    உள்ள சில பாடல்கள் சேரநாட்டில் உருவானவை.
    சேரநாட்டில் இன்று மலையாளம் வழங்குகிறது. முன்னர்த் தமிழ்
    வழங்கியது. இராமசரிதம் போன்ற தொன்மையான மலையாள
    இலக்கிய நூல்கள் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்
    வண்ணம் அமைந்துள்ளன. பழைய மலையாள இலக்கியத்தில்
    பன்னிரண்டு உயிரும், பதினெட்டு மெய்யும் மிகுதியாக உள்ளன.
    பண்டைய மலையாள இலக்கியங்கள் தமிழைப் பின்பற்றி
    இருத்தலை டாக்டர் குண்டர்ட், டாக்டர் கே.எம். ஜார்ஜ்
    ஆகியோர் ஒப்புக் கொள்கின்றனர். மலபார் கடற்கரை சிறந்த
    துறைமுகமாகத் திகழ்ந்தது. கிரேக்கர், யூதர், போர்த்துகீசியர்,
    டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் இவ்வழியே வந்து
    வாணிகத் தொடர்பு கொள்ள முடிந்தது. தென் திராவிட
    மொழிகளில் தமிழும், மலையாளமும் மிகப் பிற்காலத்தே
    பிரிந்தன. "தமிழுக்கும் மலையாளத்திற்கும் மிக நெருங்கிய
    தொடர்பு உண்டு" என்று எமனோ குறிப்பிடுவார்.

    4.3.3 கன்னட மொழி


        கர்நாடக மாநிலம், மராத்தி நாட்டின் தென் பகுதியில்
    பேசப்படும் மொழி கன்னட மொழி ஆகும். கருநாடகம்
    என்றும், கானரிஸ் என்றும் கூறுவர். ஏறத்தாழ இரண்டு
    கோடி மக்கள் கன்னட மொழி பேசுகின்றனர். கர்நாடகம் என்னும்
    வடசொல் திரிந்து, கன்னடம் என்றானது என்பர் வடநூலார்.
    ‘கன்னடம்’ என்பது ‘திராவிடச் சொல்’ என்பார் டாக்டர்
    குண்டர்ட்
    . கன்னடத்தில், பழங்கன்னடம், புதுக் கன்னடம்
    என்னும் இரு வகை உள்ளன. புதுக் கன்னடத்தின் எழுத்து முறை
    தெலுங்கு மொழியின் எழுத்து முறையை ஒட்டி அமைந்துள்ளது
    என்பார் ஏ.எஸ். ஆச்சார்யா. அவர் பல ஆய்வுகள்
    செய்துள்ளார். எச்.எஸ். பிலிகிரி (H.S. Biligiri) கன்னட
    மொழியின் ஒலியன்களைப் பற்றி ஆராய்ந்துள்ளார். கன்னட
    மொழியின் வட்டார வழக்குகளில் ஒன்று தேவாங்கா
    கன்னடம்
    ஆகும். தமிழகத்தில் உள்ள சின்னாளப்பட்டி,
    அருப்புக்கோட்டை
    பகுதிகளில் வாழும் தேவாங்கா செட்டியார்
    தேவாங்கா கன்னடம் பேசுகின்றனர். தமிழ்ச் சொற்களை ஏற்று,
    தமிழுடன் நெருங்கிய தொடர்பு உடையதாக இம்மொழி
    உள்ளது. மைசூர்ப் பகுதியிலுள்ள கன்னட மொழியிலிருந்து
    தேவாங்கக் கன்னடம் வேறுபடுகிறது. கன்னடத்தின் மற்றொரு
    வட்டார வழக்கு கௌடா கன்னடம் ஆகும். இதில் 14
    உயிரொலிகள் (9 குறில் 5 நெடில்) 22 மெய் ஒலிகள் உள்ளன
    என்று டாக்டர் கே. குசலப்பா கௌடா குறிப்பிடுவார்.
    கர்நாடகத்தின் தென் பகுதியிலும், கூர்க் மாவட்டத்திலும் வாழும்
    கௌடர்கள் பேசும் மொழி கௌடா கன்னடம் ஆகும். 1968 இல்
    கன்னட மொழியை ஆராய்ந்த போசிரியர் உபாத்தியாயா
    கன்னட மொழியின் நான்கு வட்டார வழக்குகளை ஒப்பிட்டு
    ஆய்ந்துள்ளார். கன்னட மொழியின் பேச்சு வடிவம் பற்றிப்
    பேராசிரியர் வில்லியம் பிரைட் (William Bright) விரிவாக
    ஆய்வு செய்துள்ளார்.

    4.3.4 பிற மொழிகள்


        தமிழ், மலையாளம், கன்னடம் ஆகியவற்றுடன் இருளா
    மொழி, கொடகு மொழி, கோடா மொழி, தோடா மொழி, படகா
    மொழி, துளு மொழி ஆகியவையும் தென் திராவிட மொழியைச்
    சார்ந்தவை.

  • இருளா மொழி

  •     இருளர்கள் பேசும் மொழி இருளா. நீலகிரி மலைப்பகுதியில்
    வாழும் பழங்குடி மக்கள் இருளர் ஆவர். இவர்கள் மலைதேச
    இருளர்கள்
    என்று     குறிக்கப்படுகின்றனர். ஆனைமலைப்
    பகுதிகளிலும் இருளர்கள் வாழ்கின்றனர். வட்டக்காட
    இருளர்கள்
    என்று அழைக்கப்படுகின்றனர். பேராசிரியர் கமில்
    சுவலபில்
    இம்மக்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
    ஜெரார்ட் எப் டிப்லாத்
    (Gerard F. Diffloth),
    ஆர். பெரியாழ்வார்
    ஆகியோர் இருளா மொழியில் ஆய்வு
    செய்துள்ளனர். இருளா மொழியை 4617 பேர் பேசுகின்றனர். இது
    1961 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். குறும்பர்கள்,
    படகர்கள் ஆகியோருடன் இருளர்கள் இணைந்து பழகுகின்றனர்.
    குறும்பா, படகா
    மொழிச் சொற்கள் இருளா மொழியில்
    அதிகமாகக் கலந்துள்ளன. இருளர்கள் ஒதுங்கி வாழ்கின்றனர்.

  • கொடகு மொழி

  •     கொடகு மொழிக்கு என்று எழுத்து வடிவம் கிடையாது.
    கொடகு மொழியில் இலக்கியங்கள் படைக்கப்படவில்லை.
    மக்களிடையே வழங்கும் பேச்சு மொழியாக மட்டுமே கொடகு
    மொழி உள்ளது. ஏறத்தாழ 80,000 மக்கள் கொடகு மொழி
    பேசுகின்றனர். டாக்டர் மோக்லிங் (Mogling) என்பவர் கொடகு
    மொழி பற்றி ஆய்வு செய்தார். தமிழுடன் கொடகு மொழி
    நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
    பின் பேராசிரியர் எல்.வி. இராமசாமி ஐயர் கொடகு மொழியை
    ஆய்ந்து, அது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளுடன்
    கொண்டுள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். மேஜர் கோல்
    (R.A. Cole) கொடகு மொழியின் இலக்கணத்தையும், பல
    பாடல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். கொடகு மொழியின்
    தொன்மைப் பண்பு மாறாமல் உள்ளது. கொடகு மொழியின் உயிர்
    ஒலிகள் குறித்து எமனோ விரிவாக ஆராய்ந்துள்ளார். ஒரு பெண்
    பல ஆடவர்களை மணக்கும் பழக்கம் கொடகு மொழி பேசும்
    மக்களிடம் இருக்கிறது என்று டாக்டர். ஏ.சி. பர்னல்
    (A.C. Burnell) குறிப்பிட்டுள்ளார்.

  • கோடா மொழி

  •     நீலிகிரி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தினர்
    கோடர்கள் ஆவர். கோடர்கள் பேசும் மொழி கோடா மொழி
    ஆகும். ஏறத்தாழ 900 பேர் கோடா மொழியைப் பேசுகின்றனர்.
    கூலி வேலை செய்து வாழும் எளிய மக்கள் கோடர்கள். "கன்னட
    மொழியின் கொச்சை மொழி போலக் கோடா மொழி காட்சி
    தருகிறது" என்று டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.
    எனினும் இம்மொழி தனிமொழி என்று இப்போது நிறுவப்பட்டு
    உள்ளது. கோடா மொழியை டாக்டர் எமனோ விரிவாக
    ஆராய்ந்துள்ளார்.

  • தோடா மொழி

  •     நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் மற்றொரு பழங்குடி
    இனத்தவர் தோடர்கள் ஆவர். அவர்கள் பேசும் மொழி
    ‘தோடா’ மொழி ஆகும். பேராசிரியர் பெர்னாட் ஸ்கிமிட்
    (Bernard Schmid) என்பவர் கி.பி. 1837 இல் தோடா மொழியை
    ஆய்வு செய்தார். திராவிட மொழிக் குடும்பத்துடன் தொடர்பு
    உடைய மொழி தோடா மொழி என்று அவர் குறிப்பிட்டார். 800
    பேர் தோடா மொழி பேசுகின்றனர். 1935-38 வரை பேராசிரியர்
    எமனோ இம்மொழி பற்றியும், இம்மொழி பேசும் மக்களைப்
    பற்றியும் ஆராய்ந்தார். தோடா மொழி பேசும் மக்களின் தொகை
    600 என்று     குறிப்பிடுகிறார். போதைப் பொருட்களை
    உட்கொள்ளும் வழக்கம் இம்மக்களிடையே உள்ளது. பெண்
    குழந்தைகளைப் பிறந்தவுடன் கொல்லும் வழக்கமும் உள்ளது.
    ஆகவே இவர்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டனர் என்று
    கால்டுவெல் குறிப்பிடுவார். தோடர்களைப் பற்றி கர்னல்
    மார்ஷல்
    (Colonel Marshall) விரிவான நூல் ஒன்றினை
    எழுதியிருந்தார். பேராசிரியர் டபிள்யூ. எச். ஆர். ரிவர்ஸ்
    (W.H.R. Rivers) என்பவர் தோடர்களைப் பற்றி 770 பக்க
    அளவில், The Todas என்ற தலைப்பில் 1906 இல் ஒரு நூலை
    எழுதி வெளியிட்டார். "தோடா மொழியின் ஒலிகளும்,
    ஒலியமைப்பு முறையும் உச்சரிக்க அரிதாக உள்ளன. sh, ch, th
    ஆகிய ஒலிகள் தோடா மொழியில் ஒலிநயத்திற்காகச் சொற்களின்
    இடையில் திணிக்கப்படுகின்றன. இது தோடா மொழிக்கே உரிய



    ஜி.யு. போப்

    தனிச் சிறப்பு" என்று ஜி.யு. போப் (G.U.Pope)
    குறிப்பிடுவார். தோடர்களுடன் நெருங்கி வாழும்
    கோடர்கள், படகர்களுக்கும் கூடப் புரிந்து
    கொள்ள முடியாதபடி தோடா மொழி உள்ளது.
    இம்மொழியின் வினைமுற்றுகளில் பாலறி
    கிளவிகள் உள்ளன. தோடா மொழியின்
    இலக்கண அமைப்புகளில் பல பழந்தமிழுடன்
    நெருங்கிய உறவு கொண்டுள்ளன. ர், ற் ஆகிய
    ஒலி வேறுபாடு திராவிட மொழிகளைவிடத்
    தோடாவில் மிகத் தெளிவாக உள்ளது.

  • படகா மொழி
  •     நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர்ப் பகுதிகளில்
    வாழும் படகர்கள் பேசும் மொழி ‘படகா மொழி’ ஆகும்.
    படகா மொழி கன்னட மொழியின் வட்டார வழக்கு என்றே
    எண்ணினர். தற்பொழுது படகா மொழி     தனிமொழி என்று
    கண்டறியப்பட்டுள்ளது. 70 ஆயிரம் மக்கள் இம்மொழியைப்
    பேசுகின்றனர். படகா மொழி பற்றிப் பேராசிரியர் எமனோ
    ஆய்வு செய்தார். நீலகிரிப் பகுதியில் தோடர், கோடர்
    ஆகியோர் வந்து குடியேறிய பின் நீண்ட காலம் கழித்தே படகா
    மொழியினர் வடக்கிலிருந்து வந்து குடியேறினர். இவர்களின்
    மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்புடையது என்று
    எமனோ குறிப்பிட்டுள்ளார்.     பழந்தமிழ் இலக்கியத்தில்
    குறிக்கப்படும் வடுகர்களே படகர்கள் என்பது பலர் கருத்து.
    படகா மொழியை டாக்டர் ச. அகத்தியலிங்கம் விரிவாக
    ஆய்வு செய்துள்ளார்.

  • துளு மொழி

  •     துளு மொழியைத் திருந்திய மொழி என்று டாக்டர்
    கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். துளு மொழிக்கு வரிவடிவம்
    இல்லை. இலக்கிய வளமும் இல்லை. பேசில் மிஷனைச் சார்ந்த
    பாதிரிமார்கள் (Basle Missionaries) துளு மொழியில் பல
    நூல்களை எழுதினர். அவற்றைக் கன்னட வரிவடிவில்
    அச்சிட்டனர். மைசூர் மாநிலத்தை அடுத்து ஓடும் ஆறுகள்,
    ‘சந்திரகிரி’, ‘கல்யாணகிரி’ என்பன. அவ்விரு ஆறுகளுக்கும்
    இடைப்பட்ட பகுதியில் துளு மொழி பேசப்படுகிறது. எனினும்
    இப்பகுதி மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர். அவற்றுள்
    துளுவும் ஒன்று. அவ்வகையில் 5.1 இலட்சம் மக்கள் துளு மொழி
    பேசுகின்றனர். துளு மொழிக்குப் பேராசிரியர் ஜெ. பிரிகல்
    (J.Brigal) இலக்கணம் எழுதியுள்ளார். ஏ, மார்னர் (A. Marner)
    துளு - ஆங்கில அகராதியை 1886 இல் வெளியிட்டார்.
    ஆங்கில - துளு அகராதியை 1888 இல் வெளியிட்டார்.
    எல்.வி. இராமசுவாமி ஐயர்
    இம்மொழியில் பல ஆய்வுகளைச்
    செய்துள்ளார். பேராசிரியர் உபாத்தியாயா துளுமொழிக்குப்
    பேரகராதி (Lexicon) தயாரித்துள்ளார். "தென் திராவிடக்
    கிளையிலிருந்து துளு, கன்னடம், கோடா, தோடா, கொடகு,
    மலையாளம் என்பன படிப்படியாகப் பிரிந்திருக்க வேண்டும்"
    என்பார் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணியம்.