4.4 நடுத் திராவிட மொழிகள்

    தென் திராவிட மொழிகளுடன் தெலுங்கு மொழியை
இணைத்து ஆய்வது பழைய மரபு. ஆனால் தெலுங்கு
நடுத் திராவிட மொழிகளுடன் சேர்க்கப்படுகிறது. அவ்வகையில்
நடுத் திராவிட மொழிகளை,

  • தெலுங்கு - குவி கிளை நடுத் திராவிட மொழிகள்
  • கொலாமி - நாய்க்கி கிளை நடுத் திராவிட மொழிகள்

    என்று இரு கூறுபடுத்துகின்றனர். தெலுங்கு-குவி கிளையில்
    தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி, பெங்கோ,
    மண்டா
    ஆகிய மொழிகள் உள்ளன. கொலாமி - நாய்க்கி
    கிளையில் பர்ஜி, கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர் ஆகிய
    மொழிகள் உள்ளன. கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர்
    ஆகியன தனிமொழிகள் அல்ல; ஒரே மொழியின் கிளைகள்
    என்றும் கூறுவர். கொலாமி, நாய்க்கி, பர்ஜி, கட்பா ஆகியன சில
    தனித் தன்மைகளைக் கொண்டுள்ளன. அவை தென் திராவிட
    மொழிகளிலிருந்து வேறுபட்டவை. சான்றாக, ‘ள’கர ஒலி நாய்க்கி
    தவிர ஏனைய மொழிகளில் இல்லை; ‘ட’கர ஒலி மொழி முதலில்
    வருகிறது. அஃறிணைச் சொற்கள் பன்மை உணர்த்த, பலவின்பால்
    விகுதி கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். இவற்றைத் ‘தனிக்
    கிளை’ என்று பரோ, பட்டாச்சார்யா ஆகியோர் கூறுகின்றனர்.
    பேராசிரியர் எமனோவும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    4.4.1 தெலுங்கு மொழி


        நடுத் திராவிட மொழியுள் 3.767 கோடி மக்கள் பேசும் மொழி
    தெலுங்கு மொழி. தொன்மைச் சிறப்பு உடையது. சொல் வளம்
    மிக்கது. இனிமை வாய்ந்தது. ஆந்திர மாநிலத்தில்
    பேசப்படுகிறது.

  • திரிலிங்கம் (மூன்று கோவில்கள்) என்ற சொல் திரிந்து
    ‘தெலுங்கு’ என்றானது.
  • ‘தெனுகு’ என்றால் இனிமை. தெனுகு என்ற சொல் திரிந்து
    ‘தெலுங்கு’ என்றானது.

    என்பர். தெலுங்கு மொழி வட இந்திய மொழிகளிலிருந்து
    வேறுபட்டது என்று யுவான் சுவாங் (Hieun Tsang) கூறுவார்.
    அயல் நாட்டினர் தெலுங்கு மொழிக்குப் பல இலக்கண நூல்களை
    எழுதியுள்ளனர். நன்னய பட்டர் போன்ற வடமொழி
    அறிஞர்கள் தெலுங்கில் இலக்கியம் செய்துள்ளனர். வடமொழிச்
    சாயல் மிகுதியாக உள்ளது. ஆந்திரர்கள் என்றும், கலிங்கர்கள்
    என்றும் இருவகைத் தெலுங்கு மக்கள் சொல்லப்படுகின்றனர்.
    தெலுங்கு மொழியின் வினையடிகள் பற்றிப் பேராசிரியர்
    பி.எச். கிருட்டிணமூர்த்தி
    ஆராய்ந்துள்ளார். தெலுங்கில்
    ஒருமையில், ‘ஆண்பால்’ என்றும், ‘ஆண்பால் அல்லாதன’
    என்றும் பிரிவு உள்ளது. ‘திணை, பால் பாகுபாட்டில் தெலுங்கு
    தொன்மையானது’ என்பார் டாக்டர் பி.என். சுப்பிரமணியன்.
    தெலுங்கு மொழி குயி மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.
    தெலுங்கிலும், குயி மொழியிலும் ஒலி இடம் பெயர்ந்து நிற்கும்
    தன்மை உள்ளது.

    4.4.2 பிற மொழிகள்


        மேற்குறிப்பிட்டவைகளைத் தவிரக் கோண்டி மொழி,
    கோண்டா மொழி, குயி மொழி, குவி மொழி, பெங்கோ மொழி,
    மண்டா மொழி, கொலாமி மொழி, நாய்க்கி மொழி, பர்ஜி மொழி,
    கட்பா ஒல்லாரி மொழி, கட்பா சில்லூர் மொழி ஆகிய
    மொழிகளும் நடுத் திராவிட மொழிகளாகக் கருதப்படுகின்றன.

  • கோண்டி மொழி

  •     இந்தியாவின் நடுவில் கோண்டுவனம் எனும் காடுகள்
    உள்ளன. அக்காடுகளில் வாழும் மக்கள், கோயிதோர் ஆவர்.
    கோயிதோர் பேசும் மொழி கோண்டி மொழி; 15 இலட்சம்
    பேரால் பேசப்படுகிறது. பேராசிரியர் ஆபிரகாம் லிண்ட்
    (Abraham A Lind), ஏ.என். மிட்சல் (A.N. Mitchell)
    ஆகியோர் கோண்டி மொழி பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
    பேராசிரியர் சி.ஜி. செனிவிக்ஸ் டிரென்ச் (C.G. Chenegvix
    Trench) புனித வில்லியம்சன் ஹென்றி டிரம்மண்டு
    (Williamson Rev. Henry Drummond) ஆகியோர் கோண்டி
    மொழிக்கு இலக்கண நூல்களை எழுதி உள்ளனர். கல்கத்தாவில்
    உள்ள பிஷப் கல்லூரிப் பேராசிரியர் ஜே.சி. டிரிபெர்கு
    (J.C. Driberg) சுருக்கமான இலக்கணக் கட்டுரை எழுதியுள்ளார்.
    கோயிதோர் மக்களது வாழ்வியல் பற்றிய தகவல்களை
    வங்காள மக்களின் வரலாறு
    (Ethnology of Bengal) என்ற
    நூலிலும், மையப் பிராந்திய அரசிதழ் (Gazetteer of the
    Central Provinces) களிலும் காணலாம்.

  • கோண்டா மொழி

  •     ஆந்திரப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் கோண்டா
    மொழி பேசப்படுகிறது. ஏறத்தாழ 13 ஆயிரம் மக்கள் கோண்டா
    மொழி பேசுகின்றனர். உசுமானியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
    பி.எச். கிருஷ்ணமூர்த்தி கோண்டா மொழியின் இலக்கண
    அமைப்பைப் பற்றிப்     பல ஆய்வுக் கட்டுரைகளை
    வெளியிட்டுள்ளார். ‘கோண்டா மொழி’ என்ற தலைப்பில் இதன்
    இலக்கணத்தையும்,     சொல்லமைப்பினையும்     ஆராய்ந்து
    பேராசிரியர் எஸ். பட்டாச்சார்யா நூல் எழுதி உள்ளார்.
    பேராசிரியர் பரோ, பட்டாச்சார்யா ஆகியோர் தொகுத்த
    குறிப்புகள் இம்மொழி பற்றி அறிய உதவுகின்றன.

  • குயி மொழி

  •     ஒரிசா மாநிலத்தில் உள்ள கோராபுத் மாவட்டப் பகுதிகளில்
    குயி மொழி பேசப்படுகிறது. ஏறத்தாழ ஒன்பது இலட்சம் பேர்
    குயி மொழி பேசுகின்றனர். குயி மொழியின் இலக்கணத்தைப்
    பேராசிரியர் டபிள்யூ.     டபிள்யூ.     வின்ஃபீல்டு
    (W.W. Winfield) எழுதியுள்ளார். பேராசிரியர் பெரிரா
    (J.E. Pereira) ஓர் இலக்கண நூல் எழுதியுள்ளார்.
    பரோ, பட்டாச்சார்யா இருவரும் குயிமொழி பற்றி ஆய்வு செய்து
    கட்டுரைகள் எழுதி உள்ளனர்.

  • குவி மொழி

  •     குவி
    மொழிக்கு கோந்த் மொழி என்றும் பெயருண்டு, குவி
    மொழி பேசுவோர் கோண்டுவனக் காடுகளிலும், ஒரிசாவில்
    உள்ள சில குன்றுகளிலும் வாழ்கின்றனர். குவி மொழி பேசுவோர்
    கோண்டர்கள், கந்தர்கள், கூ (ksus) என்றழைக்கப்படுகின்றனர்.
    ஏறத்தாழ இரண்டு இட்சம் பேர் குவி மொழி பேசுகின்றனர். குவி
    மொழிக்கென்று வரி வடிவம் இல்லை. எழுதப்பட்ட
    இலக்கியங்களும் இல்லை. குழந்தைகளைத் திருடி வந்து
    தெய்வங்களுக்குப் பலி தரும் வழக்கம் இவர்களிடையே இருந்தது
    என்று அயல்நாட்டினர் குறித்துள்ளனர்.

  • பெங்கோ மொழி

  •     பெங்கோ
    மொழியை ஏறத்தாழ 1300 பேர் பேசுகின்றனர்.
    திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பெங்கோ மொழி ஒரு
    தனிமொழி என்று பேராசிரியர் பரோ நிறுவியுள்ளார்.

  • மண்டா மொழி

  •     மண்டா
    மொழி பற்றிய எந்த ஆய்வும் இதுவரை நூலாக
    வரவில்லை.     எனினும்     பேராசிரியர்கள் பரோவும்,
    பட்டாச்சாரியாவும் மண்டா மொழி குறித்துப் பல ஆய்வுகளை
    மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.

  • கொலாமி மொழி

  •     மத்தியப் பிரதேசத்தில் கொலாமி மொழி பேசப்படுகிறது.
    ஏறத்தாழ ஐம்பது ஆயிரம் பேர் கொலாமி மொழி பேசுகின்றனர்.
    பேராசிரியர் சேது மாதவராவ் 1950 இல் கொலாமி மொழி
    இலக்கணம்
    பற்றி நூல் எழுதி வெளியிட்டார். பேராசிரியர்
    எமனோ 1955 இல் கொலாமி மொழி பற்றி ஆய்வுக் கட்டுரை
    எழுதினார். வில்லியம் பிரைட் கொலாமி மொழி பற்றி ஆய்வு
    செய்துள்ளார். பேராசிரியர் பரோவும், பட்டாச்சார்யாவும்
    கொலாமி மொழியில் பல ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

  • நாய்க்கி மொழி

  •     மத்தியப் பிரதேசப் பகுதிகளிலும், மகாராட்டிரத்திலும்
    நாய்க்கி
    மொழி பேசப்படுகிறது. ஏறத்தாழ 1500 பேர் நாய்க்கி
    மொழி     பேசுகின்றனர்.     பேராசிரியர் பரோவும்,
    பட்டாச்சாரியா
    வும் சேர்ந்து நாய்க்கி மொழி குறித்து ஆய்வு
    செய்துள்ளனர்.

  • பர்ஜி மொழி

  •     மத்தியப் பிரதேசப் பகுதிகளில் பர்ஜி மொழி பேசப்படுகிறது.
    19847 பேர் பர்ஜி மொழி பேசுகின்றனர். இம்மொழி பேசும்
    பகுதியின் மேற்கில் பஸ்தர் பகுதியும், கிழக்கில் கோராபுட்
    பகுதியும், வடக்கில் ஜகதல்பூர் பகுதியும், தெற்கில் ஜெய்ப்பூரும்
    அமைந்திருக்கின்றன. பேராசிரியர் கிரியர்சனின் மொழிநூலில்
    பர்ஜி மொழி குறித்து இரண்டு பக்கங்களில் தரப்பட்டுள்ளது.
    இம்மொழியைத் தவறுதலாகக் கோண்டி மொழியின் வட்டார
    வழக்கு என்று குறித்து விட்டனர். 1953 இல் பேராசிரியர்கள்
    எமனோவும், பட்டாச்சாரியாவும் ஆய்வு செய்து பர்ஜி மொழி
    தனிமொழி என்று நிறுவினர். பர்ஜி மொழிக்கு நான்கு விதமான
    வட்டார வழக்குகள் இருப்பதாகவும் சுட்டிச் செல்கின்றனர்.

  • கட்பா ஒல்லாரி மொழி

  •     ஒரிசாவிலும், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கட்பா
    மொழி பேசப்படுகிறது. கட்பா ஒல்லாரி மொழி பற்றிப்
    பேராசிரியர்கள் பரோ, பட்டாச்சார்யா ஆகியோர் 1957 இல்
    ஆய்வு செய்து நூல் வெளியிட்டுள்ளனர்.

  • கட்பா சில்லூர் மொழி

  •     ஒரிசாவிலும், மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும்
    இம்மொழி பேசப்படுகிறது. கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர்
    ஆகிய இரண்டையும் ஒரே மொழியாகச் சிலர் கருதுவர். ஆனால்
    இவை தனித்தனி மொழிகள். கட்பா சில்லூர் பற்றிப்
    பேராசிரியர் பி.எச். கிருட்டிணமூர்த்தியும், பட்டாச்சார்யாவும்
    ஆய்ந்துள்ளனர். சிலர் இம்மொழியைத் தவறாகப் போயா
    என்றழைத்தனர் என்பர். கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர் ஆகிய
    மொழி பேசுவோர் ஏறத்தாழ எட்டாயிரம் பேர் உள்ளனர்.