5.1 திராவிட மொழிகள்

    தென் இந்தியாவில் வழங்கும் மொழிகளைத் திராவிட
மொழிகள்
எனப் பெயரிட்டு அழைத்தவர் டாக்டர் கால்டுவெல்
ஆவார். அவர் அயர்லாந்து நாட்டு அறிஞர்; தமிழகம் வந்தவர்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
என்ற நூலை 1856 இல்
வெளியிட்டார். ‘தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து வந்த மொழி
அன்று; மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்றவற்றுடன்
சேர்ந்து தனி மொழிக் குடும்பமாகத் திகழ்வது. எல்லாம்
சேர்ந்து திராவிட மொழிகள் எனப்படும். திராவிட மொழிக்
குடும்பத்தில் தமிழ்தான் பழமையானது. சமஸ்கிருதத்தைப்
போன்று தமிழும் தனித்து இயங்கவல்லது. திராவிட மொழிக்
குடும்பத்தைச் சேர்ந்த தமிழுக்கும், ஆரிய மொழிக் குடும்பத்தைச்
சேர்ந்த சமஸ்கிருதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ என்று
கால்டுவெல் நிறுவினார். தமிழின் தொன்மை, தனித்துவம்
நிறுவப்பட்டது. எழுத்து வடிவமும், இலக்கியங்களையும் உடைய
மொழிகளைத் திருந்திய மொழிகள் என்றும், எழுத்து
வடிவமும், இலக்கியங்களும் இல்லாத மொழிகளைத் திருந்தாத
மொழிகள்
என்றும் கால்டுவெல் பாகுபாடு செய்துள்ளார்.
அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு
ஆகிய ஐந்து மொழிகள் திருந்திய மொழிகள் என்றும்,
தோடா, கோண்டு, கூ, கோடா
என்ற நான்கு மொழிகள்
திருந்தாத மொழிகள் என்றும் 1856 இல் குறிப்பிட்டுள்ளார்.
1875 இல் வெளியிட்ட தமது நூலின் மறுபதிப்பில், கொடகு
என்ற திருந்திய மொழியையும், ராஜ்மகால், ஓரொவன் ஆகிய
திருந்தாத மொழிகளையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார். இன்று
தமிழ் தெலுங்கு முதலான திராவிட மொழிகள் ஈழம், பர்மா,
மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவு, தென் ஆப்பிரிக்கா முதலான
இடங்களிலும் பேசப்படுகின்றன.     1981 ஆம் ஆண்டு
குடிமதிப்பீட்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவில்
ஏறக்குறைய இருபது கோடிக்கு மேற்பட்ட மக்கள் திராவிட
மொழிகளைப் பேசுகின்றனர். ஆனால் 1991 மக்கள் தொகைக்
கணக்கில் திராவிட மொழி பேசுவோர் தொகை குறைந்திருக்கிறது.
திராவிட மொழிகளுள் பழமையானது தமிழ் மொழி ஆகும்.
தமிழில் பழமையான இலக்கியங்கள் உள்ளன. இந்தியா முழுதும்
தமிழர்கள் வாழ்கின்றனர். உலகெங்கும் தமிழர்கள் உள்ளனர்.

5.1.1 தமிழும் தென் திராவிடமும்


    மலையாள மொழி
தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது.
தமிழின் கிளைமொழி என்னும் அளவிற்கு ஒற்றுமைக் கூறுகள்
மலையாளத்தில் உள்ளன. திராவிட மொழிகளுள் பெருவாரியான
மக்கள் பேசும் மொழி தெலுங்கு மொழி ஆகும். வடுகு என்றும்
தெலுங்கு மொழி அழைக்கப்படுகிறது. திராவிட மொழிகளுள்
மூன்றாவது இடம் வகிப்பது கன்னட மொழி ஆகும். கன்னட
மொழி இலக்கியம் பத்தாம் நூற்றாண்டு முதல் உள்ளது. இந்தி,
வங்காளி முதலான மொழிகளில் திராவிட மொழிகளின்
செல்வாக்கு உள்ளது. திராவிட மொழியின் செல்வாக்கால்
வடமொழியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. "வேத காலத்து
வடமொழியில் மூலத் திராவிட மொழிக் கூறுகள் பல
கலந்துள்ளன" என்கிறார் ரைஸ் டேவிஸ்.

  • திராவிட மொழிச் சொற்கள்
  •     வட இந்திய மொழிகளிலும் பல திராவிடச் சொற்கள் இன்றும்
    காணப்படுகின்றன. அவற்றைச் சுதேசிச் சொற்கள் என்று
    வடமொழி இலக்கண நூலார் கூறுவர். ஒரிய மொழியில்
    திராவிட மொழிச் செல்வாக்கு இருப்பதை ஓர் ஒப்பாய்வு
    புலப்படுத்துகிறது. இந்தியாவில் மட்டும் நான்கு மொழிக்
    குடும்பங்கள் பேசப்படுகின்றன. திராவிட மொழிக் குடும்பம்
    ஒன்றே முழுமையான இந்திய நாட்டு மொழிக் குடும்பம் என்று
    கருதும்படி உள்ளது. திராவிட மொழிகளுக்கு என்று பல
    தனித்தன்மைகள் உள்ளன.

    5.1.2 திராவிட மொழிகளின் அமைப்பு

        திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகள் (Agglutinative
    Languages) ஆக உள்ளன. மொழியில் பொருள் உடையதாக
    அமைந்த மிகச் சிறந்த சொல் கூறு உருபன் ஆகும். இதனுடன்
    ஒட்டுகள் சேரும். ஒட்டும் உருபன்கள், ஒட்டு உருபன்கள்
    எனப்படும்.

    சான்று :
        செய்தான் - இச்சொல்லில்

    செய் - வினை நிகழ்ச்சியைக் குறிக்கும் உருபன்.
    த் - இறந்த காலத்தைக் காட்டும் ஒட்டுருபன்
    ஆன் - ஆண்பாலைக் காட்டும் ஒட்டுருபன்.

    எனவே, செய்+த்+ஆன் - என்று உருபன்கள் ஒட்டி நின்று
    ‘செய்தான்’ என்ற சொல் உருவாகிறது.

    அன், ஆன் முதலியன திணை, பால் உணர்த்தச் சேருவன.
    வி, பி முதலியன பிறவினை உணர்த்தச் சேருவன. கிறு, கின்று,
    ஆநின்று முதலியன காலம் உணர்த்தச் சேருவன. இவை சேரும்
    போது அடிச்சொல் சிதையாது. வேறுபடாது இருப்பது
    திராவிடமொழி இயல்பு ஆகும். உயிர் நீளல் அல்லது குறுகல்
    என்ற அளவில் சிறிதளவு வேறுபாடு மட்டுமே ஏற்படும். ஆனால்
    இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் அடிச்சொல்லுடன் பிற
    உறுப்புகள் சேரும் போது, அடிச்சொல்லும், சேர்ந்த சொல்லும்
    இவை இவை எனத் தனித்தனியே பிரித்துக் காண முடிவதில்லை.
    அவை சிதைந்து கலந்து பிரிக்க முடியாதனவாக மாறியுள்ளன.
    எனவே திராவிட மொழிகள் ஒட்டுமொழிகள் எனப்படுகின்றன.

    5.1.3 அடிப்படைச் சொற்கள் - ஒற்றுமை

        பேச்சு வழக்கில் அதிகம் பயன்படும் பொருட்களைக்
    குறிப்பவை அடிப்படைச் சொற்கள் (Basic Vocabularies)
    ஆகும். அவை மொழிக்கு மொழி மாறுபடுகின்றன. எனினும்
    திராவிட மொழிகள் அனைத்திலும் அடிப்படைச் சொற்கள்
    பொதுவாக, மாறாமல் ஒன்று போலவே அமைகின்றன.

    சான்று:

    தமிழ் - கண்
    கன்னடம், மலையாளம் - கண்ணு
    தோடா - கொண்
    கொடகு - கன்னு
    தெலுங்கு - கன்னு
    பர்ஜி - கெண்
    குரூக் - ஃகன்

    எண்களைக் குறிப்பன எண்ணுப் பெயர்கள். இவை ஏறத்தாழ
    திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் ஒன்று போலவே
    அமைந்துள்ளன.

    சான்று:

    தமிழ் - மூன்று
    மலையாளம் - மூணு
    கன்னடம் - மூறு
    தெலுங்கு - மூடு