6.1 தமிழாய்வுத் தளம்

    பொதுமக்கள் பேச்சில் உள்ள இலக்கணக் கூறுகளே வேரூன்றி
நிலைக்கின்றன. மொழிச் செம்மை வேண்டிச் செய்யப்படும்
இலக்கணங்களை நிலைப்படுத்துதல் அருமையாகவே உள்ளது.
பேச்சு மொழி செல்வாக்கு உடையது. அதன் செல்வாக்கு
மொழியின் இலக்கணத்திலும் காணப்படும். பேச்சு மொழி
மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம்,
கல்வித்திறனுக்கு ஏற்பவும், உறவு நிலைகளுக்கு ஏற்பவும், பேசிப்
பெற வேண்டிய பயனின் அடிப்படையிலும் எண்ணற்ற
மாற்றங்களைக் கொண்டு வழங்குகிறது. எழுதுவது நிலைத்த
ஆவணமாகத் திகழ்கிறது எனலாம். அச்சியந்திரம் அதனைப்
பலரது கரங்களுக்கும் கொண்டு சேர்க்கிறது. இணையத் தளங்கள்
உலகினர் பார்வைக்குக் கொண்டு செல்கின்றன. கல்லில்
செதுக்கிய முதல் தமிழ் ஆவணம் தொடங்கி, இன்று
இணையதளத் தமிழ் வரை தமிழாய்வுக் களத்தைப் பரிசீலித்தல்
இன்றிமையாதது.

6.1.1 தமிழ் எழுத்தியல்

    எழுத்தின் வடிவம் இப்படி இருக்க வேண்டும். இந்த எழுத்து
இந்த ஒலியைக் குறிக்கிறது என்று வரையறுத்த பின்புதான்
இலக்கியங்கள், இலக்கணங்கள்     எழுதப்படும்     நிலை
ஏற்பட்டிருக்கும். மொழி தோன்றியதால் மனிதர்கள் தமக்குள்
கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிந்தது. எழுத்து வடிவம்
வந்தபின் எழுதி வைக்கும் நிலை ஏற்பட்டது. எழுதப்படுவது
எழுத்து. எழுத்து பற்றித் தொல்காப்பியம்,

எழுத்து எனப்படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப

என்று கூறுகிறது. தொல்காப்பியர் காலத்தில் தமிழில் எழுத்துகள்
வளர்ச்சி பெற்றிருந்தன. வரையறை செய்யப்பட்டு இருந்தன.
தொல்லை (தொன்மை, பழமை) வடிவின எல்லா எழுத்தும் என்று
நன்னூலில்
சொல்லப்பட்டுள்ளது. தமிழ் எழுத்து கி.மு.3ஆம்
நூற்றாண்டு முதல் தமிழகத்தில் வழங்கி வந்துள்ளது. தமிழக
அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறை கண்டுபிடித்த
பூலாங்குறிச்சிக்     கல்வெட்டு, அறச்சலூர்க்கல்வெட்டு,
புகழூர்க் கல்வெட்டு
ஆகியவற்றில் உள்ள எழுத்துகளின்
அடிப்படையில் அவை     கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்
எழுதப்பட்டவை என்பர். இவற்றில் உள்ள தமிழ் எழுத்துகளில்

  • புள்ளி இல்லாத மெய் வடிவு மெய்யை மட்டும் குறிக்கும்
  • அகரம் ஏறிய மெய்யைக் குறிக்க ஒரு கோடு இடப்பட்டது

    என்றும் எழுத்தின் அமைப்பை ஆய்வு செய்து ஐராவதம்
    மகாதேவன், இரா.நாகசாமி
    போன்றோர் கூறுவர்.

  • பிராமி எழுத்து

  •     தமிழகத்தில் மிகப் பழமையானது தமிழ் எழுத்து ஆகும்.
    இதைப் பிராமி எழுத்து என்றும், தென்னிந்தியப் பிராமி
    எழுத்து என்றும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை வழங்கி வந்தனர்.
    இது பண்டைத் தமிழ் எழுத்து (Archaic Tamil Script) எனலாம்.
    தமிழகத்தின் பழங்கல்வெட்டுகளில்,

  • பத்து உயிரெழுத்துகள்தாம் எழுதப்பட்டுள்ளன.
  • ஐகாரமும், ஒளகாரமும் காணப்படவில்லை.

  • வட்டெழுத்து
  •     அசோகனது கல்வெட்டுகளில் புள்ளியிடப்பட வேண்டிய
    இடங்களில் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது. கி.பி.மூன்று-
    நான்காம் நூற்றாண்டளவில் பண்டைத் தமிழ் எழுத்தின் வடிவம்
    மாற்றம் பெறத் தொடங்குகிறது. கல்லில் உளியாலும், தூரிகை
    கொண்டு வண்ணத்திலும் எழுதிய நிலை மாறி, ஓலையில்
    எழுத்தாணி கொண்டு எழுதத் தொடங்கியதால் இவ்வடிவ மாற்றம்
    ஏற்பட்டிருக்கலாம்.     எழுத்தாணியால்     ஓலையில்
    நேர்க்கோடுகளையும், பக்கக் கோடுகளையும் எழுதினால் ஓலை
    கிழிந்து விடக்கூடிய நிலை. ஏற்படும். அதைத் தவிர்க்க,
    நேர்க்கோடுகளிலும், பக்கக் கோடுகளிலும் சிறுவளைவுகளைச்
    சேர்த்து எழுதத் தொடங்கி உள்ளனர். இம்மாற்றத்தை
    ஈரெட்டிலைக் கல்வெட்டில்
    காண முடிகிறது. நாளடைவில்
    மேலும் மேலும் வளைவுகளைப் பெற்று வட்டெழுத்து என்று
    அழைக்கும் அளவுக்கு மாற்றம் பெற்றுவிட்டது. முழு வட்ட
    வடிவம் பெற்ற தமிழ் எழுத்துகளைக் கி.பி. எட்டாம்
    நூற்றாண்டுக்குப் பின் காண முடிகிறது. வேள்விக்குடி,
    சீவரமங்கலம், சின்னமனூர்ச்
    செப்பேடுகளில் இவ்வெழுத்தைப்
    பார்க்கலாம்.

  • வளைவு தந்து எழுதுவதால், ப, ம, ய, வ ஆகிய
    எழுத்துகள் மிகச் சிறு வேறுபாட்டோடு எழுதப்பட்டுள்ளன.
  • ண, த, ற போன்ற எழுத்துகளிடையே அதிக வேறுபாடு
    இல்லை.

  • மற்றொருவகை எழுத்து
  •     சில எழுத்துகளை வேறுபடுத்திப் புரிந்து கொள்ள முடியாத
    நிலை உள்ளது.     கி.பி.பதினேழாம்     நூற்றாண்டளவில்
    எழுதப்பட்டிருக்கும் இவ்வட்ட வடிவ எழுத்துகளைப் படிப்பது
    கடினமாக உள்ளது. மிகப் பிற்காலம் வரை தமிழகத்தின்
    தென்கோடிப் பகுதியிலும், கேரளப் பகுதியிலும் வழங்கி வந்தது.
    எனினும் கி.பி.11-12ஆம் நூற்றாண்டில் இவ்வட்ட எழுத்து
    தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்குப் புரியாத
    எழுத்தாக ஆகிவிட்டது. அதனாலேயே அப்பகுதிகளில் மற்றொரு
    வகைத் தமிழ் எழுத்து உருவாகத் தொடங்கிவிட்டது. இந்த
    மற்றொரு வகை எழுத்துத்தான் இன்று நாம் எழுதும் தமிழ்
    எழுத்து. சிம்மவர்மனின் பள்ளங்கோயில் செப்பேட்டிலும்,
    மகேந்திரவர்மன் காலத்திய வல்லம் குடைவரைக் கோயில்
    கல்வெட்டிலும்
    இவ்வெழுத்தை முதன்முதலில் காண முடிகிறது.
    இந்த எழுத்துகளில் சிலவும், சமஸ்கிருதக் கிரந்த எழுத்துகளில்
    சிலவும் ஒன்று போலக் காணப்படுகின்றன. பல்லவர்கள் தம்
    செப்புப் பட்டயங்களிலும், குடைவரை மற்றும் கோயில்களிலும்
    சமஸ்கிருத மொழியை எழுதக்     கிரந்த     எழுத்தைப்
    பயன்படுத்தினர். பாண்டிய மன்னர்களும் தமது செப்புப்
    பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் சமஸ்கிருத மொழியையும்,
    கிரந்த எழுத்துகளையும் பயன்படுத்தினர். வேள்விக்குடிச்
    செப்பேடு, ஆனைமலை, திருப்பரங்குன்றம், குடைவரைக்
    கோயில் கல்வெட்டுகள்
    மற்றும் வைகைக் கரைக் கல்வெட்டு
    ஆகியவற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். சோழர்கள் தாங்கள்
    வென்ற பகுதிகளில் எல்லாம் இப்புதிய தமிழ் எழுத்தையே
    பயன்படுத்தினர். பிற்காலப் பாண்டியர்கள், பிறகு வந்த விசயநகர
    மன்னர்கள், அவர்களை அடுத்து வந்த நாயக்க மன்னர்கள்
    இப்புதிய தமிழ் எழுத்தையே பயன்படுத்தினர். அதன் பின்னர்
    அச்சு இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இப்புதிய
    எழுத்து முறை மாற்றமின்றி நிலைத்துவிட்டது. இன்று நாம்
    எழுதும் தமிழ் எழுத்து முறை இதுதான். வட்டெழுத்து பழந்தமிழ்
    வடிவம். அது பழங்கல்வெட்டுகளில் உள்ளது. படிக்கக் கடினமாக
    உள்ளது.

    6.1.2 தமிழ் எழுத்து

        வட்ட எழுத்து, தமிழ் எழுத்து ஆக மாற்றம் பெற்றதைப்
    படத்தின் மூலம் விளக்குவர். ஒவ்வொரு காலத்திலும்
    உருவாக்கப்பட்ட கல்வெட்டில்     எழுதப்பட்ட எழுத்தைப்
    படம்பிடித்து அவ்வக்காலத்தில் அப்படி எழுதப்பட்டது என்று
    முடிவு சொல்லப்படுகிறது. முதல் கட்ட வளர்ச்சி, இரண்டாம்
    கட்ட வளர்ச்சி என்று படிப்படியே நேர்ந்த மாற்றங்கள்
    குறிக்கப்படுகின்றன.

  • எழுத்து ஆய்வு
  •     தமிழில் மிகப் பழைய எழுத்து பண்டைத் தமிழ் எழுத்து.
    இதைப் பிராமி எழுத்து என்கின்றனர். தென்னிந்தியப் பிராமி
    என்றும் குறிக்கின்றனர். ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதும்
    முறை பரவிய பின்னர்ப் பண்டைத் தமிழ் எழுத்து பிராமி
    முறையிலிருந்து, வட்டெழுத்தாக வடிவம் பெற்றது. வட்டெழுத்து
    ஒரு நிலை, சமஸ்கிருதக் கிரந்த எழுத்தைப் போன்ற தமிழ்
    எழுத்துகள் கையாளப்பட்டது. மற்றொரு நிலை, அச்சு இயந்திரம்
    வந்ததால் எழுத்தமைப்பில் பின் மாற்றம் நேரவில்லை. அச்சில்
    எளிமை கருதி, தமிழ் எழுத்தமைப்பில் சீர்திருத்தங்களை
    வீரமாமுனிவர்
    செய்தார். தந்தை பெரியார் செய்தார். அவை
    பின்பற்றப்படுகின்றன. அவ்வளவே, ஒருவரது எழுத்தும்,
    மற்றொருவரது எழுத்தும், எழுதும் முறையால் வேறாக
    அமைகின்றனவே அல்லாமல், தமிழ் எழுத்தமைப்பில் இக்காலக்
    கட்டத்தில் எம்மாற்றமும் நிகழவில்லை. எது தமிழ் எழுத்து?
    எங்குத் தொடங்கியது? எப்படி வளர்ந்தது? இன்றைய எழுத்து
    உருவானது எப்படி? என்றெல்லாம் பரிசீலிக்கப் பட்டுள்ளது.