மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிகச் சிறிய
சொற்கூறு உருபன் ஆகும். உருபன்களின் அமைப்பு,
உருபன்களின் வகை, உருபன்களின் இயங்குமுறை பற்றி
ஆராய்வது உருபனியல். கல், நெல் என்பன பொருள் உடைய
மிகச் சிறு சொற்கூறுகள். அவை உருபன்கள், செய்தான் என்ற
சொல்லில் வரும்.
செய் |
- வினை நிகழ்ச்சி |
த் |
- இறந்த காலம் உணர்த்தும் உருபு |
ஆன் |
- ஆண்பாலை உணர்த்தும் உருபு |
செய்தான் என்பதில் உள்ள, செய், த், ஆன் ஆகிய மூன்றும்
தனித்தனி உருபன்களாம். உருபன்களைப் பற்றிய செய்திகள்
தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.
மேலும் பிரிக்க இடம் தராத சொல் வேர்ச்சொல்
ஆகும்.
கல் என்பது வேர்ச்சொல். அதை மேலும் பிரிக்க முடியாது. இது
வேர் உருபன் எனப்படும்.
விகுதிகளை அல்லது ஒட்டுகளை ஏற்க இடமளிக்கும்
சொற்கூறு அல்லது உருபன் அடிச்சொல் என்று பெயர் பெறும்.
செய் என்பது அடிச்சொல், கல் என்பது விகுதியை ஏற்கவும்
வல்லது. அதுவும் அடிச்சொல். அடி உருபன் எனலாம்.
அடிச்சொல்லுடன் உருபுகள் ஒட்டுவதுண்டு. செய்தான்
என்பதில் செய் என்னும் அடிச்சொல்லுடன் ஒட்டும் த், ஆன்
ஆகிய இரண்டும் ஒட்டுகள். அவை ஒட்டு உருபன்கள்
எனலாம். ஒட்டு ஓர் அடிச்சொல்லுக்கு இடப்பக்கம் வந்தால்
முன்னொட்டு என்றும், வலப்பக்கம் வந்தால் பின்னொட்டு
என்றும் அடிச்சொல்லின் நடுவில் செருகப்பட்டால் இடை ஒட்டு
என்றும் பெயர் பெறும். |