3.1 சோழர் காலத்துத் தமிழ்மொழி

    கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு
வரை ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பிற்காலச் சோழர்கள்
தமிழகத்தில் அரசாண்டனர். தமிழ் மக்களின் அரசியல் வாழ்வு
தழைத்தது. சமுதாயப் பொருளாதார நிலை உயர்ந்தது. எனவே,
கலை வாழ்வில் கருத்தூன்றி மிகப் பெரிய கோயில்கள்
பலவற்றைப் பெரும் பொருட்செலவில் கட்டினர். இலக்கியத்
துறையிலும் பல கலைக் கோயில்கள் எழுந்தன. பௌத்தர்களும்
சமணர்களும் பல காவியங்களைப் படைத்தனர். கம்பர் போன்ற
பெருங்கவிஞர்கள், வடமொழிக் காப்பியங்களைத் தம் இயல்பு
குன்றாமல் தமிழில் படைத்தனர். பலர் புராணங்களை
அப்படியே மொழி பெயர்த்தனர். சிலர் புராணங்களில் அமைந்த
கிளைக் கதைகளை நூலாக்கினர். சிற்றிலக்கியங்கள் பலவும்
இக்காலத்தில் எழுந்தன. இலக்கண நூல் ஆசிரியர்கள் பலர்
தோன்றிப் பற்பல வகை இலக்கண நூல்களை இயற்றினர்.

3.1.1 இலக்கிய இலக்கணங்கள்

    பல்லவர் காலத்தில் தோன்றி நாடெங்கும் பரவிக் கிடந்த
பக்தி இலக்கியங்களான தேவார, திருவாசகங்களும், பிற
நூல்களும் தொகுக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டது சோழர்
காலத்தில்தான். சைவ சமயக் குரவர்கள் முதலான சைவ
அடியார்களால்     பாடப்பட்ட     பாடல்களையெல்லாம்
நம்பியாண்டார் நம்பி பன்னிரு திருமுறைகள் எனப்
பெயரிட்டுத் தொகுத்தார்.

    திருமால்     அடியார்களான     ஆழ்வார்கள் பாடிய
பாடல்களையெல்லாம் நாதமுனி தொகுத்து நாலாயிரத்
திவ்வியப் பிரபந்தம்
என்று பெயரிட்டார். அது வைணவ
இலக்கியங்களின் தொகுதியாக விளங்கியது.

    ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை
தவிரச் சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய
மூன்று காப்பியங்களும் இக்காலத்தில் தோன்றின. சோழர்
காலத்தில் ஐஞ்சிறு காப்பியங்களும் தோன்றின. சோழர்
காலத்தைக் காப்பியக்காலம் என்றே கூறுலாம்.

    காப்பியங்கள்     மட்டுமன்றிக்     கம்பராமாயணம்,
பெரியபுராணம், கந்த புராணம்,நளவெண்பா
போன்ற
புராணங்களும் மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்,
தக்கயாகப் பரணி
போன்ற சிற்றிலக்கியங்களும் தோன்றின.

    இத்தகைய இலக்கிய வளம் கொண்ட சோழர் காலத்தில்
தான் நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம்,
வச்சணந்தி மாலை
போன்ற சிறந்த இலக்கண நூல்களும்
எழுதப்பட்டன.

3.1.2 பிற ஆதாரங்கள்

    சோழர் காலத் தமிழை அறிய இலக்கிய, இலக்கண
நூல்களேயன்றிக் கல்வெட்டுகள், சாசனங்கள், ஆவணங்கள்,
செப்பேடுகள்     ஆகியனவும்     மூல     ஆதாரங்களாக
விளங்குகின்றன.     பல்லவர்     காலக்     கோயில்
கல்வெட்டுகள்,வேள்விக்குடிச் சாசனம், சின்னமனூர்ப் பெரிய
செப்பேடு, அன்பில் செப்பேடுகள், முதலாம் இராசேந்திரன்
கல்வெட்டுகள், வீர இராசேந்திரன் கல்வெட்டுகள், சுந்தர
சோழன் ஆவணங்கள், இராஜ ராஜ சோழன் ஆவணங்கள்,
இராசேந்திரன் ஆவணங்கள், வீர இராசேந்திரன் ஆவணங்கள்
ஆகியன சோழர் காலத் தமிழ்மொழியின் பண்புகளை
உணர்த்துவனவாக விளங்குகின்றன.