4.1 இடைக்காலத்தில் சோழர் காலம்

    கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பல்லவர்
வீழ்ச்சி     யடைந்த     பிறகு     சோழர்கள் ஆட்சிக்கு
வந்தனர்.அதுவரை     சிற்றரசர்களாகச்     சிறப்பின்றிப்
பின்தங்கியிருந்த சோழர்கள் பேரரசர்களாகச் சோழப் பேரரசை
நிறுவி விரிவுபடுத்தினார்கள். விசயாலயன் முதலாக வந்த
சோழர்களைப் பிற்காலச் சோழர்கள் என்று வழங்குவர்.

    முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன்
போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள மாவீரர்கள் பல நாடுகளை
வென்றனர். கலைகளை வளர்த்துச் சமயங்களைச் செழிக்கச்
செய்தனர். சமயங்களைச் சிறப்பிக்க இலக்கியங்கள் பல
எழுதப்பட்ட காலம் அது. சோழர்கள் காலத்தில்தான்
நம்பியாண்டார் நம்பி, நாயன்மார்களின் பாடல்களைச் சைவத்
திருமுறைகளாகத் தொகுத்தார். நாதமுனி, ஆழ்வார்களின்
பாசுரங்களைத் திரட்டி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாகத்
தொகுத்தார்.

    நாயன்மார்களும்,     ஆழ்வார்களும்     பிற     சமயச்
செல்வாக்கினை அகற்றித் தமிழ்ச் சமயங்களான சைவ,
வைணவத்திற்கு மன்னனிடமும் மக்களிடமும் ஆதரவு பெற்றுத்
தந்தனர். இத்தகைய சூழலுக்குப் பிறகு தான் தத்தம் சமயப்
பெருமை கூறும் காப்பியங்களை உருவாக்கும் போக்குத் தமிழில்
வளர்ந்தது.

4.1.1 சோழர் காலத் தமிழ்மொழி

    கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழப்
பேரரசை ஆண்டு வந்தான் இரண்டாம் குலோத்துங்க
சோழன்
. குன்றத்தூரைச் சேர்ந்த சேக்கிழார் அவனுடைய
அமைச்சராகத் திகழ்ந்தார். மன்னன், சமண சமயக் காப்பியமான
சீவக சிந்தாமணியைப் பலகாலும் பயின்று மகிழ்வதைக் கண்ட
சேக்கிழார், சைவ சமயச் சிறப்புரைக்கும் நாயன்மார்களின்
வரலாற்றை அவனுக்கு எடுத்துரைத்தார். அவர்களின்
வரலாற்றையே ஒரு பெருங்காப்பியமாகப் பாடி அதற்குத்
திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரிட்டார். இவ்வாறு
பெரியபுராணம் தோன்றியது.

    கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ
நாட்டை ஆண்டவன் மூன்றாம் குலோத்துங்கன். அவன்
வைணவன். இம்மன்னன் காலத்தில் சடையப்ப வள்ளலின்
ஆதரவைப் பெற்ற கம்பர் இராம அவதாரம் என்ற நூலை
எழுதிச் சிறப்பித்தார். வைணவமும் கம்பராமாயணம் என்ற
அந்த     உயரிய காப்பியத்தைப் பெற்றது. இவ்விரு
காப்பியங்களேயன்றி, கந்த புராணம், திருவிளையாடற்
புராணம், அரிச்சந்திர புராணம், தணிகைப் புராணம்
முதலிய இலக்கியங்களும் வீரசோழியம், நேமிநாதம்,
வச்சணந்தி மாலை, பன்னிருபாட்டியல், அகப்பொருள்
விளக்கம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம், நன்னூல்
போன்ற இலக்கண நூல்களும் இக்காலத்தே தோன்றின. சோழர்
காலத் தமிழை அறியத் தக்க சான்றுகளாக இவை உதவுகின்றன.

• பிற சான்றுகள்

    சோழர் காலத் தமிழ் மொழியை அறிய மேற்கூறிய
இலக்கிய இலக்கண நூல்களேயன்றி, அக்காலக் கட்டத்தில்
வெட்டப்பட்ட கல்வெட்டுகளும், சோழ மன்னர்களின்
ஆவணங்களும் மற்றும் சாசனங்களும், செப்பேடுகள்
போன்றனவும் பெரிதும் துணையாய் நிற்கின்றன.