2.0 பாட முன்னுரை
தமிழ்மொழி நீண்ட வரலாற்றினை உடைய மொழி ஆகும்.
மரபு இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுகள்
ஆகியவற்றையும், ரேனியஸ், கிரால், போப், பெஸ்கி, ஆர்டன்
போன்ற அறிஞர் பெருமக்கள் எழுதிய புதிய இலக்கண
நூல்களையும் அடிப்படையாக வைத்துத் தமிழ்மொழி
வரலாற்றைப் பண்டைத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத்
தமிழ் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
காலந்தோறும் தமிழ் மொழி பல்வேறு மாற்றங்களைப்
பெற்று வந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வானொலி,
பத்திரிகை, அனைவர்க்கும் கல்வி தருவதை நோக்கமாகக்
கொண்ட பாட நூல்கள், அறிவியல் செய்திகளைத் தமிழில்
தரும் முயற்சி, சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள்
ஆன திரைப்படம், தொலைக்காட்சி முதலியவற்றின் மூலம்
பொதுக் கிளைமொழி (Standard Dialect) எங்கும்
பரவியுள்ளது. இப்பொதுமொழி அனைத்துக் கிளைமொழிகளின்
பண்பையும் கொண்டதாகும். மொழியியல் அறிஞர்கள்
பேச்சுமொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
ஆவர். எனவே இப்பொதுமொழியை அவர்கள் ஆர்வத்துடன்
ஆராய்கின்றனர். இத்தகைய பொதுமொழியைக் கொண்ட
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் பற்றிய செய்திகள் இப்பாடப்
பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
|