3.3 கருத்துப் பரிமாற்றம்

    இதழ்களின் நோக்கம் கருத்துப் பரிமாற்றம் என்ற
ஒன்றுதான். தத்தம் கருத்தைத் தெரிவிப்பதற்குத் தலைசிறந்த
கருவியாக இவ்விதழ்களுக்குக் கைகொடுப்பது மொழியே.

3.3.1 திரு.வி. கலியாண சுந்தரனாரின் மொழிநடை

    திரு.வி.க.வின் தேசபக்தன் தமிழை இதழ்களுக்கு ஏற்ற
மொழியாக உருவாக்கப் பாடுபட்டது. இவ்விதழ் தமிழ்ப்படுத்திய
(மொழியாக்கம் செய்த) அரசியல் தொடர்பான சொற்களும்
தொடர்களும் குறியீடுகளும் இப்பொழுதும் பத்திரிகைகளிலும்
மேடைகளிலும்     பயன்படுத்தப் படுகின்றன. காட்டாக,
பொதுவுடைமை என்னும் சொல்லைக் குறிப்பிடலாம். திரு.வி.க.
தேசபக்தனுக்கெனத் தனி ஒரு நடையைப் பயன்படுத்தினார்.
பழைய     தொடர் மொழிகளை நீக்கினார். சிறுசிறு
சொற்றொடர்களை அமைத்தார். எளிதாகக் கருத்தை விளக்கப்
பல வகைகளிலும் முயன்றார். தேசபக்தனைப் போன்றே
தமிழ்நாடு இதழும் செய்தித்தாளில் பேச்சு மொழியைப்
பயன்படுத்தி்த் தமிழுக்கு வளம் சேர்த்தது.

3.3.2 பெரியாரின் மொழி நடை

    அடுத்துத் தோன்றி வளர்ச்சி பெற்ற திராவிட இயக்க
இதழ்கள் தமிழ் வாசகரிடையே படிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்தின. சமூகச் சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு
தோன்றிய திராவிட இயக்கத்தின் குடியரசு இதழ் குறிப்பிடத்
தக்கது.     தந்தை     பெரியார் என்று போற்றப்படும்
ஈ.வெ. ராமசாமி நடத்திய இதழ் இது. பேச்சு மொழியை எந்த
விதமான ஆடம்பரமும் இன்றி மேடையில் பயன்படுத்திய
பெரியார் ஈ.வெ.ரா. தமது இதழ்களிலும் அவ்வாறே எழுதினார்.
விடுதலை என்னும் மற்றோர் இதழையும் நடத்தினார்.
அவர் தமிழை இலக்கியச் சிறையிலிருந்து விடுவித்துச்
சாதாரண மக்களுக்கு உரியதாக்கினார்.

    1940-களில் பொதுவுடைமை இயக்க இதழ்கள் தமிழில்
வளர்ந்தன. புதுஉலகம், ஜனசக்தி, தீக்கதிர், தாமரை,
செம்மலர்
முதலியன பொதுவுடைமை இயக்க இதழ்களுள்
குறிப்பிடத் தக்கவை.

3.3.3 சி.பா. ஆதித்தனாரின் மொழிக் கோட்பாடு

    1942 ஆம் ஆண்டில் தினத்தந்தி நாளிதழைத்
தோற்றுவித்த சி.பா. ஆதித்தனார் வெள்ளைக்கார நாடுகளைப்
போலத் தமிழிலும் மாவட்டப் பத்திரிகைகள் தோன்ற வேண்டும்
என்று விரும்பினார். பத்திரிகை மொழி எவ்வாறு அமைய
வேண்டும் என்பது குறித்துச் சி.பா. ஆதித்தனார் குறிப்பிடும்
பின்வரும் கருத்துகள் முக்கியமானவை.

    • பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ்.
    அதைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்.
    • கடின நடையில் எழுதக் கூடாது.
    • புரிகிற தமிழில் எழுதினால் மட்டும் போதாது;
    • பேசுகிற தமிழில் எழுத வேண்டும்.

    இதழாளர் கையேடு என்ற நூலில் சி.பா. ஆதித்தனார்
குறிப்பிடும் மேற்குறிப்பிட்ட கருத்துகள் பத்திரிகை மொழி
குறித்த பொன் விதிகள் எனலாம். பத்திரிகைகள் எளிய
நடையில் செய்திகளை எழுதுததல் வேண்டும். எளிய நடையை
உருவாக்குவன பின்வருவன ஆகும்.

    • சிறிய சொற்கள்
    • மக்கள் பேசும் சொற்கள்
    • சிறிய சிறிய தொடர்கள்
    • சிறு சிறு பத்திகளாகப் பிரித்து எழுதுதல்
    • ஆங்காங்கே சிறு உள்தலைப்புகள் இட்டு எழுதுதல்

    தான் சொல்ல வரும் கருத்தை மக்களுக்குப் புரியும்
வகையில் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிற
நாளிதழ்களும் சஞ்சிகைகளும் கையாளும் மொழியைப்
பின்வருமாறு பிரித்துக் காணலாம்.

    • கட்டுரை இயல்பு மொழி அல்லது எளிய மொழி.
    • கவர்ச்சி மொழி